நாட்டைவிட்டு பொன்சேகா தாராளமாக வெளியேறலாம்: இலங்கை அரசு
கொழும்பு: பொன்சேகாவின் நடமாட்டத்தைக் கட்டுப்படுத்தவில்லை. அவர் வெளிநாடு போக விரும்பினால் தாராளமாக போகலாம் என்று இலங்கை அரசு தெரிவித்துள்ளது.
பொன்சேகாவுக்கு தற்போது நேரம் சரியில்லை. என்ன வேண்டுமானாலும் நடக்கலாம் என அவர் அஞ்சுகிறார். ராஜபக்சே சகோதரர்கள் கொலைத் திட்ட பழியை சுமத்தி சிறையில் அடைத்துக் கொன்று விடுவார்கள் என்ற அச்சமும் அவருக்கு வந்து விட்டது.
இதனால் நாட்டை விட்டு ஓடும் எண்ணத்துக்கு அவர் வந்துள்ளார். இதையடுத்து இந்தியாவிடம் பாதுகாப்பு கேட்டு அணுகப் போவதாக பொன்சேகா கூட்டணியில் இடம் பெற்றுள்ள மனோ கணேசன் கூறியிருந்தார்.
இந்த நிலையில், தற்போது ஆஸ்திரேலியா உள்ளிட்ட சில வெளிநாடுகளிடம் பொன்சேகா புகலிடம் கோரி அணுகியிருப்பதாக செய்திகள் கூறுகின்றன.
ஆனால் இதுவரை அப்படி ஒரு கோரிக்கை வரவில்லை என்று ஆஸ்திரேலிய வெளியுறவு அமைச்சர் ஸ்டீபன் ஸ்மித் கூறியுள்ளார்.
இதுகுறித்து அவர் கூறுகையில், இதுகுறித்து முறைப்படி எந்த கோரிக்கையும் எங்களுக்கு வரவில்லை.
இருப்பினும் இரண்டு விஷயங்கள் முக்கியமானவை. ஒன்று பொன்சேகா சுதந்திரமாக நடமாட அனுமதிக்கப்பட வேண்டும். இரண்டாவது அவருக்குரிய பாதுகாப்பு அளிக்கப்பட வேண்டும் என்றார் ஸ்மித்.
முன்னதாக கொழும்பில் செய்தியாளர்களிடம் பேசிய பொன்சேகா, தற்காலிக புகலிடம் தொடர்பாக அமெரிக்கா, இங்கிலாந்து தூதரகங்களுடன் பேசியுள்ளேன். ஆஸ்திரேலிய தூதருடனும் பேசவுள்ளேன்.
ஆனால் நாட்டை விட்டு வெளியேற முடியாமல் அரசு தடுத்துக் கொண்டிருக்கிறது என்றார்.
தாராளமாக போகலாம்- இலங்கை அரசு
இந்த நிலையில், பொன்சேகா எந்த நாட்டுக்கும் போகலாம். அவரை யாரும் தடுக்கவில்லை என்று இலங்கை அரசு தெரிவித்துள்ளது.
இதுகுறித்து இலங்கை பாதுகாப்புத்துறையின் கீழ் வரும் தேசிய பாதுகாப்புக்கான மீடியா மைய இயக்குநர் லட்சுமண் ஹலுகலே கூறுகையில், பொன்சேகாவுக்கு எந்தவிதக் கட்டுப்பாடும் விதிக்கப்படவில்லை. அவர் தாராளமாக எங்கு வேண்டுமானாலும் போகலாம் என்றார்.
இதேபோல இலங்கை இமிகிரேஷன் பிரிவு கட்டுப்பாட்டாளர் அபயகூன் கூறுகையில், பொன்சேகாவின் வெளிநாட்டுப் பயணங்களை அனுமதிக்க வேண்டாம் என எங்களுக்கு எந்த உத்தரவும் வரவில்லை. அவரது பாஸ்போர்ட்டை முடக்கி வைக்கவும் எங்களுக்கு உத்தரவிடப்படவில்லை என்றார்.
பொன்சேகா அலுவலகத்தில் ரெய்ட்:
இந் நிலையில் கொழும்பி்ல் உள்ள பொன்சேகாவின் அலுவலகத்தில் அந் நாட்டு உளவுப் பிரிவினரும் 200 அதிரடிப்படையினரும் திடீரென இன்று சோதனை நடத்தி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications