மும்பை யாருக்கு சொந்தம்: முகேஷ் அம்பானிக்கு பால்தாக்கரே கண்டனம்!
மும்பை: ரிலையன்ஸ் நிறுவனத்தின் மீது முகேஷ் அம்பானிக்கு எவ்வளவு உரிமை இருக்கிறதோ அந்தளவுக்கு மராத்தியர்களுக்கு மும்பை மீது உரிமை உள்ளது என்று சிவசேனா தலைவர் பால் தாக்கரே கூறியுள்ளார்.
மும்பையில் டாக்சி உரிமம் பெறுபவர்கள் மராத்தி மொழி தெரிந்திருக்க வேண்டியது கட்டாயம் என மாநில அரசு உத்தரவிட்டது.
இதுகுறித்து கருத்து தெரிவித்த ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் தலைவர் முகேஷ் அம்பானி, மஹாராஷ்டிர அரசின் இந்த முடிவு துரதிர்ஷ்டவசமானது. நாமெல்லோரும் முதலில் இந்தியர்கள் என்பதை மறந்துவிடக்கூடாது.
மும்பை, சென்னை மற்றும் டெல்லி போன்றவை இந்தியர்கள் அனைவருக்கும் சொந்தம் என்றார். ஏற்கனவே கிரிக்கெட் வீரர் சச்சின் மும்பை எல்லோருக்கும் சொந்தம் என கூறியதால் சிவசேனா அமைப்பினரிடம் இருந்து பலத்த எதிர்ப்பை சந்தித்தார்.
இந்நிலையில் சிவசேனாவின் அதிகாரப்பூர்வ பத்திரிகையான 'சாம்னா'வில் பால் தாக்கரே முகேஷுக்கு எதிராக கடும் விமர்சனங்களை அடுக்கியுள்ளார்.
''ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் மீது முகேஷ் அம்பானிக்கு எந்தளவுக்கு உரிமை உள்ளதோ அதே அளவுக்கு மராத்தியர்களுக்கு மும்பை மீது உள்ளது.
மும்பை மஹாராஷ்டிராவின் தலைநகராக இருந்து வருகிறது. இனிமேலும் அப்படியே இருக்கும். தேவையில்லாமல் மராத்திய மக்களின் பாதையில் குறுக்கிடாதீர்கள்.
மும்பை, சென்னை, டெல்லி எல்லாம் இந்தியர்களுக்கு சொந்தம் என 'பண்டிதர்' முகேஷ் அம்பானி சொல்கிறார். அகமதாபாத், ஜாம்நகர், ராஜ்கோட் இவற்றை எல்லாம் ஏன் அவர் விட்டுவிட்டார்'' என்று கிண்டலடித்துள்ளார் தாக்கரே.
அம்பானிகள் குஜரத்தை சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications