தமிழகத்தில் தமிழரல்லாதோர் குறித்த கணக்கெடுப்பு நடத்த கோரிய மனு டிஸ்மிஸ்
சென்னை: தமிழகத்தில் வசிக்கும் பிற மாநிலத்தவர் குறித்த கணக்கெடுப்பு நடத்த உத்தரவிடக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்து விட்டது.
இதுதொடர்பாக இந்து தமிழர் இயக்கம் என்ற அமைப்பின் தலைவர் வி.வைத்தியலிங்கம் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார்.
அதில்,
தமிழ்நாட்டில் வசிக்கும், தமிழை தாய்மொழியாக கொள்ளாத மக்கள் எத்தனை சதவீதம் வசிக்கின்றனர் என்பது பற்றி அறிவதற்காக தனி இயக்கத்தை நியமிக்க வேண்டும்.
இந்த கணக்கெடுப்பை, மக்கள் தொகை கணக்கெடுப்பின்போது சேர்த்து நடத்த வேண்டும் என்று புள்ளியியல் அமைச்சகத்துக்கு உத்தரவிட வேண்டும்.
மேலும் தமிழ்மொழி மற்றும் கலாசாரத்தை காப்பாற்றும் நோக்கத்தில் சில கட்டுப்பாடுகளை விதித்து உத்தரவிட வேண்டும் என்று கோரியிருந்தார்.
இதை தலைமை நீதிபதி எச்.எல்.கோகலே, நீதிபதி சசிதரன் ஆகியோர் அடங்கிய பெஞ்ச் விசாரித்தது.
பின்னர் மனுவை நீதிபதிகள் டிஸ்மிஸ் செய்து உத்தரவிட்டனர். அப்போது அவர்கள் அளித்த தீர்ப்பில்,
தமிழ்நாட்டில் வசிக்கும் தமிழை தாய்மொழியாக கொள்ளாதவர்களின் எண்ணிக்கையை கணக்கெடுப்பதற்கு தனி உத்தரவு எதுவும் பிறப்பிக்க தேவையில்லை. அதுபோன்ற கணக்கெடுப்பு பொதுவான மக்கள் தொகை கணக்கெடுப்பின்போது நடத்தப்பட்டு வருகிறது.
மேலும் ஒவ்வொரு இந்தியருக்கும், இந்தியாவின் எல்லைக்குட்பட்ட எந்தவொரு பகுதியிலும் வாழ்வதற்கான உரிமையை அரசியல் சாசனம் அளித்துள்ளது.
கட்டுப்பாடுகள் விதித்து உத்தரவிட்டால் அது அரசியல் சாசனத்துக்கு எதிராக அமைந்துவிடும். எனவே, மனுதாரரின் கோரிக்கைகளை ஏற்க முடியாது என்று தெரிவித்தனர்.












Click it and Unblock the Notifications