எதிர்க்கட்சி எம்.பிக்களை இழுத்து அரசியலமைப்புச் சட்டத்தை திருத்த ராஜபக்சே முயற்சி

எதிர்க்கட்சி எம்.பிக்களை ஆளுங்கட்சிக்கும் இழுக்கும் முயற்சிகள் நடைபெறுவதாக ஜாதிக நிதஹாஸ் பெரமுனா கட்சியின் தலைவரான விமல் வீரவன்சா தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் கூறுகையில், எதிர்க்கட்சிகளைச் சேர்ந்த 19 எம்.பிக்களுடன் தற்போது ஆளுங்கட்சியினர் பேசி தங்கள் பக்கம் இழுக்க முயற்சித்து வருகின்றனர்.
இதன் மூலம் நாடாளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மை பலம் அரசுக்குக் கிடைத்து விடும். இதை வைத்துக் கொண்டு, அரசியலமைப்புச் சட்டத்தை திருத்தி, பொதுத் தேர்தல் நடத்தாமலேயே நாடாளுமன்றத்தை நீட்டிக்க முயற்சிக்கிறார்கள் என்று கூறியுள்ளார்.
தற்போது பெரும் வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்று அதிபராகியுள்ளதால், எதிர்க்கட்சியினரை மடக்கியோ அல்லது மிரட்டியோ பணிய வைத்து விடலாம் என்ற எண்ணத்தில் ராஜபக்சே அரசு அதிகாரதுஷ்பிரயோகம் உள்ளிட்டவற்றில் இறங்கியுள்ளதாகவும் கூறப்படுகிறது.
விசாரணை நடத்த அமெரிக்கா வலியுறுத்தல்
இதற்கிடையே, இலங்கையில் அதிபர் தேர்தலில் விதிமீறல்கள் நடந்துள்ளதாகக் கூறப்படுவது குறித்து விசாரணை நடத்த வேண்டும் என்று அமெரிக்கா கூறியுள்ளது.
இது குறித்து அமெரிக்க பொது விவகாரத் துறை இணையமைச்சர் பி.ஜே. கிரவுலி கூறியுள்ளதாக இலங்கைக்கான அமெரிக்க தூதரகம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
ராஜபக்சே மீண்டும் அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதற்கு அமெரிக்கா வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறது.
பல ஆண்டுகளுக்குப் பின் நாடு முழுவதும் அமைதியாகத் தேர்தல் நடந்து முடிந்துள்ளது வரவேற்கப்பட வேண்டிய விஷயம்.
எனினும் தேர்தலில் முறைகேடுகள் நிகழ்ந்துள்ளதாகவும், தேர்தல் விதிகள் மீறப்பட்டுள்ளதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. இது குறித்து இலங்கை அரசின் சட்டத்துக்கு உள்பட்டு விசாரணை நடத்த வேண்டும் என அதில் கூறப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications