எல்டிடிஇ முக்கியப் பிரமுகர் மலேசியா ராஜன் கைது

இவரை கொழும்பில் வைத்துக் கைது செய்ததாக இலங்கை பயங்கரவாத தடுப்புப் பிரிவுப் படையினர் கூறியுள்ளனர். ஆனால் இவரை மலேசியா அல்லது தாய்லாந்தில் கைது செய்து அங்கிருந்து இங்கு கொண்டு வந்திருக்கலாம் என கருதப்படுகிறது.
கேபியைக் கைது செய்தது போல இவரையும் மலேசியாவில் வைத்து மடக்கி, பாங்காக் மூலமாக கொழும்பு கொண்டு வந்திருக்கலாம் என்றும் தெரிகிறது. மேலும் கேபி கொடுத்த தகவலின் பேரிலேயே ராஜன் மடக்கப்பட்டிருக்கலாம் என்றும் சந்தேகிக்கப்படுகிறது.
மலேசியா ராஜன் (42) இரண்டு வாரங்களுக்கு முன்னர் வெளிநாட்டு விமான நிலையம் ஒன்றில் வைத்து அவரது குடும்பத்தினருடன் கைது செய்யப்பட்டுள்ளார்.
அவரது மனைவியையும் பிள்ளைகளையும் விடுதலை செய்து விமான நிலையத்துக்கு வெளியே செல்ல அனுமதித்த அந்நாட்டு குடிவரவு மற்றும் புலனாய்வு பிரிவினர் ராஜனை மட்டும் விசாரணைக்காக அழைத்து சென்றனர்.
அதன் பின்னர் அவரை இலங்கைக்குக் கொண்டு வந்துள்ளனர். ஆனால், நேற்று காலை கொழும்பில் வைத்து அவரை கைது செய்ததாக அறிவித்துள்ள இலங்கை பயங்கரவாத தடுப்பு பிரிவு அதிகாரி, மலேசியா ராஜனை தாம் பல ஆண்டுகளாக தேடிவந்ததாகவும் - அவர் கண்ணன் என்ற பெயரிலும் செல்லத்துரை சாந்தகுமார் என்ற பெயரிலும் பல பயங்கரவாத நடவடிக்கைகளில் ஈடுபட்டு வந்தார் என்றும் தெரிவித்தார்.
மேலும், 1996 ஆம் ஆண்டு கொட்டாஞ்சேனை சாம விகாரைக்கு அருகாமையில் வெடிமருந்துகள் அடங்கிய வாகனம் ஒன்று கைப்பற்றப்பட்ட சம்பவம் முதல் உள்நாட்டு வெளிநாட்டு புலனாய்வு பிரிவினரால் தேடப்பட்டு வந்தவர் என்றும் தெரிவித்துள்ளார்.
விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரனுக்கு மிகவும் நெருக்கமான ராஜன், அந்த அமைப்பினருக்கு ஆயுத கொள்முதல், விடுதலைப்புலிகளின் புலனாய்வு பிரிவினரை கொழும்புக்கு கூட்டி வருதல் போன்ற முக்கியப் பணிகலை மேற்கொண்டு வந்ததாக தெரிகிறது.












Click it and Unblock the Notifications