பிப்ரவரி இறுதியில் பென்னாகரம் இடைத் தேர்தலுக்கு வாய்ப்பு

பென்னாகரம் தொகுதி திமுக எம்.எல்.ஏ பெரியண்ணன் புற்று நோயால் இறந்ததையடுத்து அத்தொகுதிக்கு கடந்த ஜனவரி 20ம் தேதி இடைத் தேர்தல் அறிவிக்கப்பட்டது.
ஆனால், பொங்கல் பண்டிகை நேரத்தில் தேர்தல் நடத்தக் கூடாது என திமுக, காங்கிரஸைத் தவிர மற்ற அனைத்துக் கட்சிகளும் கடும் எதிர்ப்பு தெரிவித்தன. இதையடுத்து மாநில தலைமைத் தேர்தல் அதிகாரி நரேஷ் குப்தா தலைமையில் அனைத்துக் கட்சிக் கூட்டம் கூட்டப்பட்டு கருத்து அறியப்பட்டது.
இதையடுத்து தேர்தல் ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது. ஆனால், புதிய தேதி அறிவிக்கப்படவில்லை.
இடைத் தேர்தல் அறிவிக்கப்பட்டவுடன் முதல் ஆளாக திமுகவின் வேட்பாளர் அறிவிக்கப்பட்டார். பெரியண்ணன் மகன் இன்பசேகரனை வேட்பாளராக அறிவித்தது திமுக.
இடைத் தேர்தல் ரத்து செய்யப்பட்ட சில நாட்கள் கழித்து பாமக தனது வேட்பாளராக ஜி.கே.மணியின் மகன் தமிழ்க்குமரனை அறிவித்தது.
தேர்தல் ஒத்தி வைக்கப்பட்டுவிட்டாலும் திமுகவும் பாமகவும் சத்தம் போடாமல் அங்கு தீவிர தேர்தல் பணியை மேற்கொண்டு வருகின்றன.
ஆனால் முக்கியக் கட்சியான அதிமுக இதுவரை வேட்பாளரை அறிவிக்கவில்லை. கடந்த இரு இடைத் தேர்தல்களில் டெபாசிட் இழந்த தேமுதிக அமைதி காத்து வருகிறது. பாஜக தேர்தலை புறக்கணிப்பதாக அறிவித்துவிட்டது. இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அதிமுகவுக்கு ஆதரவு தெரிவித்துள்ளது.
இந் நிலையில் பென்னாகரம் தொகுதியில் பிப்ரவரி 2ம் தேதி இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்படவுள்ளது. அதன் பிறகு, இடைத் தேர்தலுக்கான புதிய தேதியை தேர்தல் கமிஷன் அறிவிக்கவுள்ளது.
அனேகமாக பிப்ரவரி மாதக் கடைசியில் இடைத் தேர்தல் நடைபெறலாம் என்று தெரிகிறது.












Click it and Unblock the Notifications