தமிழக அரசு நிதியில்தான் இலவச டிவி-இளங்கோவனுக்கு கருணாநிதி மறுப்பு

Subscribe to Oneindia Tamil

சென்னை: இலவச கலர் டி.வி.​ திட்டத்துக்கு மத்திய அரசு நிதி தரவில்லை. அது முழுக்க முழுக்க மாநில அரசின் பணத்தில் தான் வழங்கப்படுகிறது என்று என்று முதல்வர் கருணாநிதி கூறியுள்ளார்.

மத்திய அரசு தரும் பணத்தில்தான் இலவச கலர் டி.வி.​ வழங்கப்படுகிறது என்று முன்னாள் மத்திய இணையமைச்சர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் கூறியிருந்தார்.

இந் நிலையில் கருணாநிதி வெளியிட்டுள்ள கேள்வி-பதில் அறிக்கையில்,

கேள்வி: நிலமோசடி குறித்து கூட்டுப் போராட்டம் நடத்த பேசி வருவதாக தா.பாண்டியன் சொல்லியிருக்கிறாரே?

பதில்: சிறுதாவூர் நில மோசடி பற்றி போராட்டம் நடத்துவதைவிட சம்பந்தப்பட்டவர்களிடம் நேரடியாகப் பேசலாமே?

கேள்வி: 'துக்ளக்' இதழில் ஒரு கேள்விக்கு அளிக்கப்பட்ட பதிலில் "கலைஞர் நிறைய எழுதியிருக்கிறார். அதுபற்றி சந்தேகத்திற்கு இடமில்லை. தினமும் முரசொலியில் கடிதங்கள்; கேள்வி கேட்டு பதில்கள்; அறிக்கைகள்; கவிதைகள்; திரைக்கதை வசனங்கள்; நெஞ்சுக்கு நீதி, தொல்காப்பிய உரை போன்ற நூல்கள்.... என்று ஒரு எழுத்து வெள்ளமே அவர் பேனாவிலிருந்து பாய்ந்து சென்றிருக்கிறது. ஆனால் ஏ.என்.சிவராமன், கி.வா.ஜ.... போன்ற சிலர், தங்கள் வாழ்நாளில், இதையும் விட அதிகமாக எழுதியவர்களாக இருந்தாலும் இருக்கலாம் என்று நான் நினைக்கிறேன் என்று பதில் அளிக்கப்பட்டு இருக்கிறதே? இதற்குப் பெயர்தான் "இன உணர்வா?''

பதில்: இந்த கேள்விக்கு "விடுதலை'' நாளிதழே பதில் அளித்துள்ளதே?. எனினும் என் பேனாவிலிருந்து ஒரு எழுத்து வெள்ளமே பாய்ந்து சென்றிருக்கிறது என்று ஒப்புக்கொண்டு துக்ளக்' எழுதியமைக்காக நன்றி தெரிவிக்கிறேன்.

கேள்வி: சென்னையில் கடந்த சில மாதங்களாக கொசுக்களின் உற்பத்தி அதிகரித்துவிட்டதாகக் கூறி 2ம் தேதி சென்னையில் அதிமுக ஆர்ப்பாட்டம் நடத்தப்போவதாக ஜெயலலிதா அறிவித்திருக்கிறாரே?

பதில்: என்னதான் அவரைச் செய்யச் சொல்கிறீர்கள். அவர் இருப்பதைக் காட்டிக்கொள்ள அன்றாடம் ஒரு அறிக்கை விட்டாக வேண்டும். அதற்கு பொருள் தேடி எங்கே தான் அவர் போவார்? இன்றைக்கு அவருக்கு கிடைத்தது கொசுதான்! இருக்கவே இருக்கிறார்கள் கட்சி தொண்டர்கள்! அவரா ஆர்ப்பாட்டம் நடத்தப்போகிறார்? ஏடுகளில் அவர் பெயரில் புகைப்படத்தோடு ஒரு அறிக்கை வெளி வந்துவிட்டது அல்லவா? அதுவே போதும்! எனினும் கொசுக்களை ஒழிப்பதற்கான முயற்சியில் சென்னை மாநகராட்சியும், மக்கள் நல்வாழ்வுத் துறையும் கடுமையாக ஈடுபட வேண்டும்.

கேள்வி: தமிழக அரசின் அவசர கால ஆம்புலன்ஸ் சேவையான 108ன் புகழ் நாளுக்கு நாள் பரவி வருகிறதே?

பதில்: இதழ் ஒன்றில் இத்திட்டம் பற்றிய ஒரு செய்தியினை நேற்று படித்தேன். இத்திட்டம் தொடங்கி ஓராண்டு ஆனதை முன்னிட்டு இந்தத் திட்டத்தின் காரணமாக உயிர் பிழைத்தவர்கள் சிலர் ஒன்று கூடி தங்களது நன்றியைத் தெரிவித்தது பற்றி ஜூனியர் விகடன் இதழில் செய்தி வந்துள்ளது. நான் படித்த அந்தச் செய்தியை உங்களுடனும் பகிர்ந்து கொள்கிறேன்.

செக்கானூரணி அருகில் கீழமட்டையான் கிராமத்தைச் சேர்ந்த பேச்சியம்மாள் தன் கைக்குழந்தையோடு தெரிவித்த செய்தியில் "போன 11ம் தேதி இரவு 11 மணி வாக்குல திடீர்னு பிரசவ வலி கண்டுக்கிச்சு. வலி உயிர் போகுது.... எங்க ஊருல ஆஸ்பத்திரி கூட இல்லை. அக்கம்பக்கத்துல இருந்தவங்க 108-க்கு போன் அடிக்கச் சொன்னாங்க. எங்கம்மா கருப்பாயி அதே மாதிரி போன் போட்டாங்க. கரெக்டா 10 நிமிஷத்தில வண்டி வரவும், ஊர்க்காரங்களே ஆச்சரியப்பட்டுப் போனாங்க'' என்று கூற-

ஆம்புலன்ஸ் வண்டியிலேயே வந்த டாக்டர் மாரியப்பன் தொடர்ந்து கூறும்போது, "வயித்துக்குள்ள குழந்தை கொஞ்சம் வேகமா புரண்டதுல தொப்புள்கொடி கடுமையா சுத்திக்கிடுச்சு. இப்படி ஆனா, உடனடியாக ஐ.சி.யூ.வில வெச்சு ஆபரேஷன் செஞ்சிடுவோம். அப்படித்தான் ரெண்டு உசுரையும் காப்பாற்ற முடியும். ஆனா, இந்தம்மாவுக்கு வலி முத்திடுச்சு. ஆஸ்பத்திரி போற வரைக்கும் தாங்காது. உடனடியாக குழந்தையை வெளியே எடுத்தாக வேண்டிய கட்டாயம். ரெண்டு உசுருல ஏதாவது ஒரு உசுரு பிழைக்க பத்து சதவிகிதம் மட்டுமே வாய்ப்பு இருந்துச்சு. என்னதான் டாக்டரா இருந்தாலும் கடவுளை கும்பிட்டுக்கிட்டே ஓடுற ஆம்புலன்ஸ் வண்டியில ஒரு வேகத்துல பிரசவம் பார்த்தேன்.

ஆச்சர்யம்.... திடீர்னு குழந்தை திரும்பவும் ரெண்டு தடவை புரள..... சட்டென்று சுத்தியிருந்த தொப்புள் கொடி விலகி..... சுகப் பிரசவமாகிடுச்சு! அந்தப் பிஞ்சு குழந்தையை பாத்தப்ப கண்ணுல தண்ணியே வந்திடுச்சு. நடுராத்திரி 12 மணிக்கு லேசா வண்டியை ஓரம் கட்டிட்டு எல்லோரும் சேர்ந்து அந்தக் குழந்தைக்கு "ஹேப்பி பர்த் டே'' பாடினதை மறக்கவே முடியாது'' என்று சொல்லியிருக்கிறார்.

இந்தச் செய்தியை அந்த இதழில் படித்தபோது-அந்தத் திட்டத்தை தொடங்க காரணமாக இருந்த எனக்கு எவ்வளவோ மகிழ்ச்சி ஏற்பட்டது.

கேள்வி: ரேஷன் அரிசிக்கு பாமாயில் ஊற்றி பாலீஷ் செய்து அதிக விலையுள்ள "ஜெயா'' அரிசியாக விற்பனை செய்வதாக ஒரு தலைப்புச் செய்தி வந்துள்ளதே?

பதில்: இந்தச் சம்பவம் நடைபெற்றது தமிழகத்திலே அல்ல. கேரளாவிலே நடைபெற்ற நிகழ்ச்சி இது. ஆனால் இந்தச் சம்பவம் தமிழகத்திலே நடைபெற்றதைப் போல செய்தி வெளிவந்துள்ளது.

கேள்வி: மத்திய அரசு தரும் பணத்தில் தான் இலவச கலர் டி.வி. வழங்கப்படுகிறது என்று முன்னாள் மத்திய இணையமைச்சர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் சொல்லியிருக்கிறாரே?

பதில்: இப்படித்தான் சில தவறான தகவல்களை தம்பி இளங்கோவன் அடிக்கடி சொல்கிறார்!. இலவச கலர் டி.வி. திட்டம் செலவு முழுவதுமே தமிழக அரசின் நிதியிலிருந்து தான் நிறைவேற்றப்படுகிறது.

கேள்வி: மீனவர்கள் மீது இலங்கை கடற்படை தாக்குதல் தொடர்ந்துள்ளதே?

பதில்: தேசிய பாதுகாப்பு ஆலோசகர் சிவசங்கர் மேனன் என்னைச் சந்தித்தபோது- மீனவர்களின் இந்தப் பிரச்சினை குறித்துத்தான் நீண்ட நேரம் நான் அவரோடு பேசியதோடு, என்னுடைய கவலையைத் தெரிவித்துக்கொண்டேன். அவரும் மத்திய அரசு இந்தப் பிரச்சினையில் தன் முழு கவனத்தையும் செலுத்தும் என்று எனக்கு உறுதி கூறியதோடு, செய்தியாளர்களிடம் அதைப்பற்றி சொல்லியிருக்கிறார்.

இவ்வாறு கருணாநிதி கூறியுள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+