ஈழத் தமிழ், முஸ்லீம்கள் ஒருங்கிணைந்து செயல்பட முடிவு
கொழும்பு: இலங்கையில் இரு வேறு துருவங்களாக கடந்த காலங்களில் செயல்பட்டு தமிழ் மற்றும் முஸ்லீம் கட்சிகள் ஒருங்கிணைந்து ஒற்றுமையுடன் செயல்பட முடிவெடுத்துள்ளன.
இலங்கை அரசியல் வரலாற்றில் மிகவும் முக்கியமான மாற்றமாக இது கருதப்படுகிறது. சமீபத்தில் நடந்த அதிபர் தேர்தலில் தமிழர்களும், முஸ்லீம்களும் பெரும்பான்மையாக வாழும் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் ராஜபக்சே பெரிய அளவில் மண்ணைக் கவ்வ இந்த இரு தரப்பும் மிகவும் முக்கியப் பங்கு வகித்தன என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன் மற்றும் இலங்கை முஸ்லீம் காங்கிரஸ் தலைவர் ராப் ஹக்கீம் ஆகியோர் இன்று கொழும்பில் செய்தியாளர்களைக் கூட்டாக சந்தித்தனர்.
அப்போது சம்பந்தன் பேசுகையில், அதிபர் தேர்தலில் தமிழர் கட்சிகளும், முஸ்லீம் கட்சிகளும் இணைந்து செயல்பட்டதற்கு மிகப் பெரிய அளவில் பலன் கிடைத்துள்ளது.
வடக்கிலும், கிழக்கிலும், நாங்கள் ஓரணியாக நின்று செயல்பட்டது நல்ல விளைவுகளை ஏற்படுத்தியுள்ளது. இதையடுத்து இரு தரப்பும் மேலும் நெருங்கி ஒருங்கிணைந்து, ஒற்றுமையுடன் பணியாற்ற முடிவு செய்துள்ளோம் என்றார் சம்பந்தன்.
எதிர்க்கட்சி வேட்பாளர் சரத் பொன்சேகாவுக்கு இந்த இரு மாகாணங்களில் மிகப் பெரிய அளவில்வாக்குகள் கிடைத்தன. கிட்டத்தட்ட தமிழ் ஈழம் என்று சொல்லப்படும் தமிழர், முஸ்லீம் பகுதிகள் அனைத்திலும் பொன்சேகாவே அதிக அளவிலான வாக்குகளைப் பிடித்து முதலிடம் பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த வெற்றியின் மூலம் தமிழ்க் கட்சிகளும், முஸ்லீம்களும் இணைந்து செயல்பட முடிவு செய்திருப்பது வரவிருக்கும் நாடாளுமன்றத் தேர்தலில் ராஜபக்சேவுக்கு பெரும் நெருக்கடியை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.
முஸ்லீம்கள், தமிழர்கள் என்று பிரிவாக பிரிந்து கிடந்தாலும், கிழக்கு மாகாணத்தில் வாழும் முஸ்லீம்களும் தமிழர்களே என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications