இந்தி பேசும் 'கமாண்டோக்கள்' வேண்டும்- இந்திக்காரர்கள் கூடாதா? தாக்கரேக்களுக்கு ராகுல் கண்டனம்!

வட இந்தியர்களை தொடர்ந்து குறி வைத்து கடித்துக் கொண்டிருக்கும் பால் தாக்கரே மற்றும் ராஜ் தாக்கரே ஆகியோரை நேற்று கடுமையாக கண்டித்துப் பேசினார் ராகுல் காந்தி.
பீகார் மாநிலம், புத்தகயா வந்த அவர் அங்கு தலித் இளைஞர் தலைமைத்துவ மேம்பாட்டு மாநாட்டில் கலந்து கொண்டார்.
அப்போது பேசுகையில், மகாராஷ்டிராவில், மகாராஷ்டிர நவ நிர்மான் சேனா தலைவர் ராஜ் தாக்கரே, பீகாரிகளையும், உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்தவர்களை மகாராஷ்டிராவை விட்டும், மும்பையையும் விட்டும் தூக்கி எறிய வேண்டும் என்று கூறிக் கொண்டிருக்கிறார்.
ஆனால், மும்பையைத் தீவரவாதிகள் தாக்கியபோது அவர்களைக் கொன்றது யார்? அவர்கள் அனைவரும் பீகாரிகள், உ.பியைச் சேர்ந்தவர்கள் மற்றும் நாட்டின் பிற மாநிலங்களைச் சேர்ந்தவர்கள். அப்போது பீகாரிகளைத் தூக்கி எறிய வேண்டும் என்று அவர்கள் ஏன் சொல்லவில்லை?.
இந்தி பேசும் கமாண்டோக்கள் இருக்கலாம், ஆனால் இந்தி பேசுவோர் இருக்கக் கூடாதா? தீவிரவாதிகளுடன் சண்டை போடவாவது பீகாரிகள் அங்கேயே இருக்கட்டுமே என்றார் ராகுல் காந்தி.
பிகாரில் காங்கிரஸ் தனித்துப் போட்டி:
முன்னதாக தர்பங்காவில் ஒரு நிகழ்ச்சியில் பேசிய ராகுல்,
பிகாரில் இந்த ஆண்டு நடக்கும் சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி தனித்துப் போட்டியிடும். தேர்தலைக் கருத்தில் கொண்டு மாநிலத்தில் கட்சியை வலுப்படுத்துவது அவசியம்.
மக்களை அணுகி அவர்களின் நம்பிக்கையை பெறாததால்தான் பிகாரில் காங்கிரஸ் கட்சி இதற்கு முன் நடந்த தேர்தல்களில் வெற்றி பெறவில்லை. அச்சமின்றி மக்களின் உரிமைக்காக காங்கிரஸ் தொண்டர்கள் பாடுபட்டால் பிகாரில் மாற்றத்தை கொண்டு வர முடியும் என்றார்.
அப்போது, லாலு தலைமையிலான ராஷ்ட்ரீய ஜனதாதளத்துடன் கூட்டணி ஏற்படுத்தியதே கடந்த தேர்தல்களில் காங்கிரஸ் கட்சி தோல்வியடைந்ததற்கு காரணம் என்று ராகுலிடம் கட்சித் தொண்டர்கள் புகார் தெரிவித்தனர்.
ராகுல் தியாகிகளை அவமதித்து விட்டார்-உத்தவ்:
இந் நிலையில் என்.எஸ்.ஜி. கமாண்டோக்கள் குறித்து ராகுல் காந்தி கூறியுள்ள கருத்துக்களின் மூலம், மும்பையைக் காக்க உயிர் நீத்த தியாகிகளை அவமதித்து விட்டார் என்று கூறியுள்ளார் சிவசேனா செயல் தலைவர் உத்தவ் தாக்கரே.
அவர் கூறுகையில், ஹேமந்த் கர்கரே, அசோக் காம்ரே, விஜய் சலஸ்கர், துக்காராம் ஓம்ப்ளே உள்ளிட்ட தீரமிகு மராத்தி காவல்துறையினரையும், என்.எஸ்.ஜி. கமாண்டோ வீரர் சந்தீப் உண்ணி கிருஷ்ணன் போன்றோரையும் ராகுல் காந்தி அவமதித்து விட்டார்.
மும்பை தாக்கப்பட்டுக் கொண்டிருந்தபோது ராகுல் காந்தி எங்கே இருந்தார்?. அதை அவர் விளக்கிச் சொல்லலாமே? என்று கேட்டுள்ளார் உத்தவ்.












Click it and Unblock the Notifications