டெல்லியில் பிப். 6,7ல் முதல்வர்கள் மாநாடு - ஸ்டாலின் பங்கேற்பு
சென்னை: விலைவாசி உயர்வு உள்ளிட்ட பிரச்சினைகள் குறித்து வருகிற 6 மற்றும் 7 ஆகிய தேதிகளில் டெல்லியில் பிரதமர் தலைமையில் நடைபெறவுள்ள முதல்வர்கள் மாநாட்டில் தமிழகத்தின் சார்பில் துணை முதல்வர் மு.க.ஸ்டாலின் கலந்து கொள்வார் என அறிவிக்கப்பட்டுள்ளது.
நாடு முழுவதும் அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலை அதிகமாக உயர்ந்துள்ளது. விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்குமாறு மத்திய, மாநில அரசுகளை எதிர்க்கட்சிகள் வற்புறுத்தி வருகின்றன.
இதைத் தொடர்ந்து, விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த வழிமுறையை கண்டறிவது குறித்து விவாதிக்க, புதுடெல்லியில் பிரதமர் மன்மோகன் சிங் தலைமையில் ஜனவரி 27-ந் தேதியன்று, அனைத்து மாநில முதல்வர்கள் மாநாடு நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது. மறுநாள், உள்நாட்டு பாதுகாப்பு தொடர்பான கூட்டம் நடத்தவும் முடிவு செய்யப்பட்டிருந்தது.
ஆனால், பின்னர் இது ஒத்திவைக்கப்பட்டு பிப்ரவரி 6 மற்றும் 7 ஆகிய தேதிகளில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது.
அதன்படி வரும் 6 மற்றும் 7 ஆகிய தேதிகளில் டெல்லியில் பிரதமர் தலைமையில் முதல்வர்கள் மாநாடு நடைபெறுகிறது.
இதில் முதல்வர் கருணாநிதிக்குப் பதில் துணை முதல்வர் மு.க.ஸ்டாலின் கலந்து கொள்கிறார்.
பிப்ரவரி 6-ந் தேதி நடைபெறும் முதல்நாள் கூட்டத்தில், விலைவாசி உயர்வு பற்றி அனைத்து முதல்வர்களுடனும் பிரதமர் ஆலோசனை நடத்துகிறார்.
இந்த கூட்டத்தில் அனைத்து மாநில முதல்வர்களும் பேசுகிறார்கள். துணை முதல்வர் மு.க.ஸ்டாலினும் பேசுகிறார்.
மறுநாள் 7-ந் தேதி நடைபெறும் கூட்டத்தில் உள்நாட்டு பாதுகாப்பு பற்றிய முக்கிய விவாதத்தை பிரதமர் மேற்கொள்கிறார். இந்த கூட்டத்தில், உள்நாட்டு பாதுகாப்புக்கென தனி அமைச்சகத்தை அமைப்பது, தேசிய தீவிரவாத எதிர்ப்பு மையம் அமைப்பது உள்ளிட்ட பல்வேறு விஷயங்களில் முதல்வர்களின் கருத்துக்கள் கேட்கப்படும்.
நக்சல்கள் ஒழிப்பு, சட்டம்-ஒழுங்கு பராமரிப்பு, கடலோர பாதுகாப்பு, உளவு தகவல்களை திரட்டுதல், அவற்றை மத்திய-மாநில உளவுத்துறையினர் பகிர்ந்து கொள்ளுதல் போன்ற பல்வேறு விஷயங்கள் பற்றியும் பேசப்படும்.












Click it and Unblock the Notifications