சரணடைந்த காஷ்மீர் தீவிரவாதிக்கு பத்மஸ்ரீ விருது - தொடர் சர்ச்சையில் பத்ம விருதுகள்

அமெரிக்காவைச் சேர்ந்த ஹோட்டல் அதிபர் சந்த் சிங் சத்வாலுக்கு பத்ம பூஷன் விருது வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. அதேபோல நடிகர் சைஃப் அலி கானுக்கு பத்மஸ்ரீ விருது வழங்கவும் பெரும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.
இந்த நிலையில் காஷ்மீர் தீவிரவாதி ஒருவரின் பெயரும் பத்மஸ்ரீ விருது பட்டியலில் இடம் பெற்றிருப்பதாக தற்போது தகவல் வெளியாகி புதிய பரபரப்பைக் கிளப்பியுள்ளது.
பொது சேவைக்கான பத்மஸ்ரீ விருதுக்கான பட்டியலில் குலாம் முகம்மது மீர் என்பவரின் பெயர் இடம் பெற்றுள்ளது. இவர் முமா கான் என்றும் அழைக்கப்படுபவர்.
இவர் மீது கடத்தல், கொலை முயற்சி உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் இருப்பதாக கூறப்படுகிறது. அதை விட முக்கியமாக இவர் தீவிரவாதச் செயல்களில் முன்பு ஈடுபட்டு பின்னர் சரணடைந்தவராம்.
பின்னர் தீவிரவாதத்தைக் கைவிட்டு தீவிரவாதிகளுக்கு எதிராக ஒரு தனியார் படையை நிறுவி செயல்பட்டு வந்தார்.
மேலும் தீவிரவாதிகளைக் கண்டுபிடிக்கவும் மீரை பாதுகாப்புப் படையினர் பயன்படுத்திக் கொள்வது வழக்கமாம்.
தன்னைத் தீவிரவாதி என்று அழைப்பதை மீர் திட்டவட்டமாக மறுக்கிறார். இப்படிக் கூறுவது ஒரு சதி என்றும் அவர் கூறுகிறார்.
இதுகுறித்து அவர் கூறுகையில், நான் நாட்டுக்காகத்தான் போராடினேன். ஒருபோதும் தீவிரவாதியாக இருந்ததில்லை. தீவிரவாதிகளுக்கு எதிராகத்தான் செயல்பட்டு வந்துள்ளேன்.
பாதுகாப்புப் படையினர் பல தீவிரவாதிகளைப் பிடிக்க நான் உதவியுள்ளேன். ஆனால், எனது குடும்பத்தினர் தீவிரவாதிகளால் கொல்லப்பட்டபோது யாரும் என்னை வந்து பார்க்கவே இல்லை என்றார்.
மீரின் பெயரை ஜம்மு காஷ்மீர் மாநில அரசுதான் பரிந்துரைத்துள்ளது. ஆனால் அதுகுறித்து முதல்வர் ஒமர் அப்துல்லாவுக்கு சரியாக தகவல் தெரியவில்லையாம்.












Click it and Unblock the Notifications