ரோஜா படப்பிடிப்பில் கலாட்டா - தெலுங்கானா போராட்டக்காரர்களால் ஷூட்டிங் ரத்து
நடிகை ரோஜா கலந்து கொண்ட படப்பிடிப்பு, தெலுங்கானா போராட்டக்காரர்களின் முற்றுகையில் நின்று போனது. செட்கள் பிரிக்கப்பட்டு, பலத்த பாதுகாப்புடன் ரோஜாவை போலீஸார் அங்கிருந்து கொண்டு சென்றனர்.
தெலுங்கானா தனி மாநிலம் கோரி நடந்து வரும் போராட்டத்தில், தெலுங்கு திரையுலகமும் சிக்கித் தவித்துக் கொண்டிருக்கிறது. தெலுங்கானாவைத் தவிர்த்த பிற பகுதிகளைச் சேர்ந்த நடிகர், நடிகையருக்கு தெலுங்கானா போராட்டக்காரர்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
குறிப்பாக தெலுங்கானாவுக்கு எதிரான நிலைப்பாட்டைக் கொண்டுள்ள நடிகர், நடிகையரின் படப்பிடிப்பு ஹைதராபாத் உள்ளிட்ட பகுதிகளில் நடக்கக் கூடாது என்று கூறி வருகின்றனர். மீறி நடந்தால் கலாட்டா செய்து ரகளையாக்கி வருகின்றனர்.
தெலுங்கானாவுக்கு எதிரான நிலையைக் கொண்டவரான நடிகை ரோஜா நடிக்கும் தெலுங்குப் படத்தின் படப்பிடிப்பு ஹைதராபாத், கூகட்பள்ளி என்ற இடத்தில் நடந்தது. தகவல் அறிந்ததும் நூற்றுக்கும் மேற்பட்ட தெலுங்கானா ஆதரவாளர்கள் அங்கு விரைந்தனர்.
இவர்கள் வரும் தகவல் போலீஸாருக்குத் தெரிய வந்தது. எனவே படப்பிடிப்புத் தளத்திற்கு விரைந்து வந்த அவர்கள் கலாட்டா நடக்க வாய்ப்புள்ளது, விரைவில் இடத்தைக் காலி செய்யுங்கள் என்று படப்பிடிப்புக் குழுவினருக்கு உத்தரவிட்டனர்.
ஆனால் அதற்குள் போராட்டக்காரர்கள் வந்து விட்டனர். வந்த வேகத்தில் படப்பிடிப்புத் தளத்திற்குள் புகுந்து பொருட்களை அடித்து துவம்சம் செய்ய ஆரம்பித்தனர். அவர்களைத் தடுத்து நிறுத்திய போலீஸார், படப்பிடிப்பு ரத்தாகி விட்டது, அனைவரும் கிளம்பிக் கொண்டிருக்கிறார்கள் என்று கூறி சமாதானப்படுத்தினர்.
அதன் பின்னர் செட் கலைக்கப்பட்டு அனைவரும் அங்கிருந்து பத்திரமாக கிளம்பிச் சென்றனர். ரோஜாவை போலீஸார் பாதுகாப்புடன் அழைத்துச் சென்றனர்.
படப்பிடிப்பில் நடந்த இந்த கலாட்டா குறித்து ரோஜா அதிருப்தி தெரிவித்தார். படப்பிடிப்புகளுக்கு பாதுகாப்பு அளிக்கப்படும் என முதல்வர் ரோசய்யா உறுதி அளித்தும் கூட இதுபோன்ற செயல்கள் தொடருவது வருத்தம் தருகிறது என்றார் அவர்.












Click it and Unblock the Notifications