நாகை, விழுப்புரம் மாவட்டங்களுக்கு தேசிய விருது!
சென்னை: தேசிய ஊரக வேலை வாய்ப்புத் திட்டத்தை சிறப்பாக செயல்படுத்தியதற்காக, தமிழகத்துக்கு இரண்டு தேசிய விருதுகள் கிடைத்துள்ளன.
100 நாள் வேலை திட்டம் எனக் கூறப்படும் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம் மத்திய அரசால் நாடு முழுவதும் அறிமுகப்படுத்தப்பட்டது.
இத்திட்டத்தின் கீழ், தமிழகத்தில் இதுவரை, ரூ.2 ஆயிரத்து 939 கோடியே 19 லட்சம் செலவிடப்பட்டுள்ளது. இத்திட்டத்தை சிறப்பாக செயல்படுத்தும் முதல் மூன்று மாநிலங்களில், தமிழகமும் இடம் பெற்றுள்ளது.
கடந்த 2007-08ம் ஆண்டில் இத்திட்டத்தை சிறப்பாக செயல்படுத்தியதற்காக திண்டுக்கல், சிவகங்கை மற்றும் கடலூர் மாவட்டங்கள் தேர்வு செய்யப்பட்டன.
தற்போது, 2008-09ம் ஆண்டில் இத்திட்டத்தை சிறப்பாக செயல்படுத்திய 15 மாநிலங்களைச் சேர்ந்த 24 மாவட்டங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன.
இதில் தமிழகத்தைச் சேர்ந்த நாகப்பட்டினம் மற்றும் விழுப்புரம் மாவட்டங்கள் விருதுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளன.
இன்று டெல்லியில் நடைபெற்ற விழாவில் நாகை மாவட்ட கலெக்டர் ஜெயராமன், விழுப்புரம் மாவட்ட கலெக்டர் பழனிச்சாமி ஆகியோர் விருதுகளை பெற்றனர்.












Click it and Unblock the Notifications