ஐஸ் ஹவுஸ் எனப்படும் விவேகானந்தர் இல்லத்தின் குத்தகை மேலும் 10 ஆண்டுக்கு நீட்டிப்பு
சென்னை: சுவாமி விவேகானந்தர் தங்கியிருந்த, சென்னை கடற்கரைச் சாலை விவாகானந்தர் இல்லத்தின் குத்தகை காலம் மேலும் 10 ஆண்டுகளுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.
கடற்கரை காமராஜர் சாலையில் உள்ளது விவேகானந்தர் நினைவு இல்லம். 1842ல் கட்டப்பட்ட இந்தக் கட்டடம் ஆங்கிலேயர்களால் ஐஸ் கட்டிகளை சேமித்து வைக்கும் கிட்டங்கியாக பயன்படுத்தப்பட்டது. இதனால் இது "ஐஸ் ஹவுஸ்' என்று அழைக்கப்பட்டது.
அதன் பிறகு இந்தக் கட்டடத்தை சுவாமி விவேகானந்தரின் சீடரான பிலிகிரி அய்யங்கார் வாங்கி "கெர்னான் கேசில்' என்று பெயரிட்டார். 1897ம் ஆண்டு சென்னை வந்த விவேகானந்தர் பிப்ரவரி 6 முதல் 14ம் தேதி வரை 9 நாள்கள் இங்கு தங்கினார். அப்போதுதான் அவர் புகழ்பெற்ற 6 சொற்பொழிவுகளை நிகழ்த்தினார்.
1897ம் ஆண்டு மார்ச் மாதம் இந்தக் கட்டடத்தில்தான் சென்னை ஸ்ரீ ராமகிருஷ்ண மடத்தை, சுவாமி ராமகிருஷ்ணானந்தர் தொடங்கினார். 1906 வரை 10 ஆண்டுகள் மடம் இங்குதான் இயங்கியது.
மடம் இங்கு இயங்கிய போது ராமகிருஷ்ணரின் சீடர்களான சுவாமி சிவானந்தர், நிரஞ்சனானந்தர், திரிகுணாதீதானந்தர், அபேதானந்தர் ஆகியோர் வருகை தந்தனர். இவர்கள் தவிர சகோதரி நிவேதிதாவும் இங்கு வருகை தந்துள்ளார்.
தமிழக அரசுக்குச் சொந்தமான இந்த இல்லத்தை சென்னை ராமகிருஷ்ண மடம் குத்தகைக்குப் பெற்று நிர்வகித்து வருகிறது.
1963ம் ஆண்டு சுவாமி விவேகானந்தரின் நூற்றாண்டு விழா கொண்டாடப்பட்டபோது இந்தக் கட்டடத்துக்கு விவேகானந்தர் இல்லம் என்று தமிழக அரசு பெயர் சூட்டியது.
1902 ஜூலை 4ம் தேதி சுவாமி விவேகானந்தர் பேலூர் மடத்தில் மகா சமாதி அடைந்தார். அதற்கு அடுத்த ஆண்டு 1903ம் ஆண்டு ஜனவரி மாதம் முதன்முறையாக இந்தக் கட்டடத்தில்தான் விவேகானந்தர் ஜெயந்தி கொண்டாடப்பட்டது. இன்று தேசிய இளைஞர் தினமாக நாடு முழுவதும் கொண்டாடப்படும் சுவாமியின் ஜெயந்தி விழா இங்குதான் தொடங்கியது.
1906ம் ஆண்டு இந்த இல்லத்தை ஆந்திரத்தைச் சேர்ந்த அங்கிதம் வெங்கட ஜக்கையா ராவ் ஏலத்தில் எடுத்தார். சில மாதங்கள் அங்கு வசித்தார். அதன் பிறகு பல ஆண்டுகள் பூட்டப்பட்டு இருந்தது. 1917ம் ஆண்டு ஜக்கையா ராவிடம் இருந்து ரூ. 79,944-க்கு இல்லத்தை ஆங்கில அரசு வாங்கி "மெரைன் மேன்சன்' என்று பெயரிட்டது.
பிறகு அந்த இல்லத்தை சகோதரி சுப்புலட்சுமி எஎன்பவருக்கு ஆங்கில அரசு வாடகைக்கு விட்டது. அவர் அங்கு இளம் விதவைப் பெண்களுக்கான சேவை இல்லத்தையும், ஆசிரியர் பயிற்சி நிறுவனத்தையும் நடத்தி வந்தார். இங்குதான் அவர் சாரதா ஆஸ்ரமத்தையும் தொடங்கினார்.
இடப்பற்றாக்குறை காரணமாக சாரதா ஆஸ்ரமம் வேறு இடத்துக்குச் சென்றதும் அருகில் இருந்த வெலிங்டன் சீமாட்டி கல்வியியல் கல்லூரியுடன் இந்த இல்லம் இணைக்கப்பட்டது. 1941 முதல் 1993 வரை அங்கு ஆசிரியர் பயிற்சி கல்லூரி இயங்கியது.
சுவாமி விவேகானந்தர் சிகாகோ சொற்பொழிவாற்றிவிட்டு தாயகம் திரும்பியதன் நூற்றாண்டு விழா 1997ம் ஆண்டு கொண்டாடப்பட்டது. அந்த சமயத்தில் இந்த இல்லத்தை குத்தகைக்கு தருமாறு சென்னை ராமகிருஷ்ண மடம் தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்தது. அதனை ஏற்று 27,546 சதுர அடி பரப்பளவு கொùண்ட இல்லத்தை 1997 டிசம்பர் 24ம் தேதி, ஆண்டுக்கு ரூ. 1,000 வீதம் 3 ஆண்டு குத்தகைக்கு ராமகிருஷ்ண மடத்துக்கு வழங்கப்பட்டது.
அதன்பிறகு, இல்லத்துக்கு நுழைவு வாயில் இல்லை என்று கூறி அருகில் இருந்த 8 கிரவுண்ட் 1928 சதுர அடி இடத்தை ராமகிருஷ்ண மடம் குத்தகைக்கு கேட்டது. அதனை ஏற்று 90 சதுர மீட்டர் பரப்பளவுள்ள இடம் 1998 ஜூன் 10ம் தேதி, சதுர அடிக்கு ஒரு ரூபாய் வீதம் 3 ஆண்டு குத்தகைக்கு வழங்கப்பட்டது. 2000ம் ஆண்டு ஜூன் 28ம் தேதி சதுர அடிக்கு ஒரு ரூபாய் வீதம் 10 ஆண்டுகளுக்கு குத்தகைக்கு விடப்பட்டது.
அதன் பிறகு ராமகிருஷ்ண மடம் அந்த இல்லத்தைப் புதுப்பித்து சுவாமி விவேகானந்தர் பற்றிய நிரந்தரக் கண்காட்சி கூடத்தை அமைத்தது. புதுப்பிக்கப்பட்ட இல்லத்தை அப்போது முதல்வராக இருந்த கருணாநிதி திறந்து வைத்தார்.
இந்த நிலையில், உலகத் தமிழ்ச் செம்மொழி தமிழாய்வு மத்திய நிறுவனத்தின் அலுவலகத்தை அமைக்க இருப்பதால் விவேகானந்தர் இல்லத்தைக் காலி செய்யுமாறு ராமகிருஷ்ண மடத்துக்கு தமிழக அரசு நெருக்கடி கொடுத்ததாகக் கூறப்பட்டது.
இது பற்றி 2008 ஏப்ரல் மாதம் தினமணி நாளிதழில் பெரிய அளவில் செய்தி வெளியானது. இதையடுத்து விவேகானந்தர் இல்லத்தை தமிழக அரசு அபகரிக்க முயல்வதாக அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா உள்ளிட்டோர் குற்றம் சாட்டினர்.
இது குறித்து 2008 ஏப்ரல் 24ம் தேதி அதிமுக எம்.எல்.ஏ.க்கள் சட்டப் பேரவையில் சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானத்தைக் கொண்டு வந்தனர். அதன் மீது நடந்த விவாதத்துக்கு பதில் அளித்துப் பேசிய முதல்வர் கருணாநிதி, விவேகானந்தர் இல்லத்தைத் தமிழக அரசு அபகரிக்க முயலவில்லை. அதனை இடிக்கவும் விரும்பவில்லை. அதற்காக அந்தப் பக்கம் திரும்பவும் இல்லை. ஏதேதோ கதை கட்டி எங்களை சாமியார்களுடன் மோத விடுகிறார்கள் என்றார். இதையடுத்து பிரச்சினை முடிவுக்கு வந்தது.
இதற்கிடையே, ஜனவரி 28ம் தேதியோடு விவேகானந்தர் இல்லத்தின் குத்தகைக் காலம் முடிந்தது. இந்நிலையில் இல்லத்தின் குத்தகைக் காலத்தை மேலும் 10 ஆண்டுகளுக்கு நீட்டித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
தமிழக அரசின் முடிவை சென்னை ராமகிருஷ்ண மடம் வரவேற்றுள்ளது. இது குறித்து மடத்தின் தலைவர் சுவாமி கௌதமானந்தர் கூறுகையில்,
குத்தகைக் காலம் முடிவடைவதால் இல்லம் மீண்டும் கிடைக்குமா என்கிற கவலை எங்களுக்கு இருந்தது. அந்தக் கவலை முதல்வர் கருணாநிதி மூலம் நீங்கியுள்ளது. அதற்காக அவரை சில நாள்களில் நேரில் சந்தித்து நன்றி தெரிவிக்க இருக்கிறேன்.
மேலும் 10 ஆண்டுகளுக்கு குத்தகைக் காலம் நீட்டிக்கப்பட்டுள்ளதன் மூலம் எங்களுக்கு உற்சாகமும் ஊக்கமும் ஏற்பட்டுள்ளது. இப்போது வேத காலம் முதல் சுவாமி விவேகானந்தர் காலம் வரையிலான நமது கலாசாரம் பற்றிய கண்காட்சி இடம்பெற்றுள்ளது.
அடுத்த கட்டமாக மத்திய அரசு மற்றும் பொதுமக்களிடம் இருந்து நிதி பெற்று நமது பண்பாடு கலாசாரம் பற்றிய முழுமையான கண்காட்சியை நவீன தொழில்நுட்பத்துடன் அமைக்க திட்டமிட்டுள்ளோம் என்றார்.












Click it and Unblock the Notifications