நீதிபதி ஸ்ரீகிருஷ்ணா தலைமையில் 5 பேர் கொண்ட தெலுங்கானா கமிட்டி அமைப்பு

இதுகுறித்து உள்துறை அமைச்சக செய்தித் தொடர்பாளர் கூறுகையில், இந்தக் கமிட்டி, ஆந்திர மாநிலத்தில் உள்ள அனைத்துக் கட்சிகள், அமைப்புகள், அனைத்துப் பிரிவு மக்களுடந் விரிவான ஆலோசனைகளை மேற்கொள்ளும்.
இந்தக் கமிட்டி மேற்கொள்ளவுள்ள ஆலோசனைகள் எதன் அடிப்படையில் அமைய வேண்டும் என்பது குறித்து இறுதி செய்யப்பட்டு வருகிறது. கமிட்டியின் தலைவருடன் ஆலோசனை நடத்திய பின்னர் அதுகுறித்து அறிவிக்கப்படும் என்றார்.
இந்தக் கமிட்டியில், டெல்லி தேசிய சட்ட பல்கலைக்கழகத்தின் துணை வேந்தர் பேராசிரியர் டாக்டர் ரன்பீர் சிங், டெல்லி சர்வதேச உணவுக் கொள்கைக்கான ஆய்வுக் கழக மூத்த ஆய்வாளர் டாக்டர் அபுசலே ஷெரீப், டெல்லி ஐஐடியின் சமூக அறிவியல் மற்றும் மனிதகுல துறை பேராசிரியர் டாக்டர் ரவீந்தர் கெளர் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.
இவர்கள் தவிர முன்னாள் உள்துறைச் செயலாளர் வினோத் துக்கால் உறுப்பினர் செயலாளராக செயல்படுவார் என மத்திய அரசு அறிவித்துள்ளது.
ப.சிதம்பரத்துடன் தெலுங்குதேச குழு சந்திப்பு:
முன்னதாக தெலுங்கானா விவகாரம் தொடர்பாக மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரத்தை தெலுங்கு தேசம் கட்சியின் குழுவினர் நேற்று சந்தித்து ஆலோசனை நடத்தினர்.
முன்னாள் மத்திய அமைச்சர் எர்ரான் நாயுடு தலைமையிலான இக்குழுவினர், சிதம்பரத்திடம் பேசுகையில், தெலுங்கானா பிரச்னையில் எவ்வித அவசர முடிவையும் எடுக்க வேண்டாம் எனக் கேட்டுக் கொண்டனர்.
மேலும், நிபுணர் குழுவை அமைக்கும் முன் அரசியல் கட்சிகள், சமூக அமைப்புகளின் கருத்துகளை கேட்க வேண்டும் என்றும் எர்ரான் நாயுடு வலியுறுத்தினார்.
பின்னர் செய்தியாளர்களிடம் நாயுடு பேசுகையில், ஆந்திரத்தைப் பிரிக்கக்கூடாது என்பதில் நாங்கள் உறுதியாக இருக்கிறோம். சிதம்பரத்துடனான இந்த சந்திப்பு மனநிறைவை அளிக்கிறது. தெலுங்கானா பிரச்னையை கவனமாக கையாள்வதாக அவர் உறுதியளித்துள்ளார் என்றார்.












Click it and Unblock the Notifications