வேஷ்டி கட்டாவிட்டால் தமிழகத்தில் ஜெயிக்க முடியாது - கோவா காங். எம்.பி. பேச்சு
பனாஜி: ஒவ்வொரு இனத்திற்கும் உள்ள தனித்துவ அடையாளத்தை யாரும் புறக்கணித்து விட முடியாது. தமிழகத்தில் வேஷ்டி கட்டாமல் ஓட்டுக் கேட்கப் போனால் யாருமே ஓட்டுப் போட மாட்டார்கள். வேஷ்டி கட்டாமல் தேர்தலில் நின்றால் யாருமே ஜெயிக்கவும் முடியாது என்று கூறியுள்ளார் கோவா காங்கிரஸ் எம்.பி. சாந்தாராம் நாயக்.
அகில் இந்திய கொங்கனி பரிஷத்தின் தலைவராகவும் சாந்தாராம் நாயக் உள்ளார். கோவா மாநிலத்திலிருந்து ராஜ்யசபா உறுப்பினராக உள்ள நாயக் இதுகுறித்துக் கூறுகையில்,
தமிழ்நாட்டில் எந்த ஒரு அரசியல்வாதியாக இருந்தாலும் சரி வேஷ்டி கட்டாமல் போனால் யாருமே அவர்களுக்கு ஓட்டுப் போட மாட்டார்கள். பேன்ட், சட்டை போட்டு போய் ஓட்டு கேட்டால் ஒரு ஓட்டு கூட விழாது.
மத்திய அமைச்சர் ப.சிதம்பரமே கூட சில நேரங்களைத் தவிர பெரும்பாலும் வேஷ்டியுடன்தான் இருக்கிறார்.
ஒவ்வொரு இனத்துக்கும் உள்ள தனித்துவ அடையாளத்தை யாரும் புறக்கணித்து விட முடியாது. எப்படி தமிழகத்தில் வேஷ்டி இல்லாமல் போனால் ஓட்டு கிடைக்காதோ, அதேபோல கோவாவில் கொங்கனி பேசாத அரசியல்வாதிகளுக்கும் ஓட்டு விழாது. இங்குள்ள (கோவா) அரசியல்வாதிகளும் அந்த எண்ணத்தில்தான் உள்ளனர் என்றார் நாயக்.
தனது பேட்டியின்போது வேஷ்டியை தவறுதலாக லுங்கி என்று குறிப்பிட்டுப் பேசினார் நாயக் என்பது குறிப்பிடத்தக்கது. கோவா மாநிலத்தின் பூர்வீக மொழி கொங்கனி என்பது குறிப்பிடத்தக்கது. இங்கு ஆட்சி மொழியாகவும் அதுவே இருக்கிறது.












Click it and Unblock the Notifications