பிப். 26ம் தேதிக்குள் பெட்ரோல் ரூ 3...டீஸல் ரூ 1 உயர்கிறது?
டெல்லி: சர்வதேச சந்தையில் பெட்ரோல் விலை தொடர்ந்து உயர்ந்து வருவதால் விரைவில் பெட்ரோல் விலையை ரூ 3-ம், டீஸல் விலையில் ரூ 1ம் உயர்த்த மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
பட்ஜெட் சமர்ப்பிக்கப்படும் முன்பு பிப்ரவரி 26ம் தேதிக்கு முன்பு இந்த உயர்வு அமலுக்கு வரக்கூடும் என்று தெரிகிறது.
நாளை நடக்கவுள்ள அகில இந்திய காங்கிரஸ் கமிட்டிக் கூட்டத்தில் இது குறித்து விவாதித்து முடிவெடுக்கப்படவுள்ளது.
சர்வதேச சந்தையில் கச்சா எண்ணை விலை உயர்ந்து வருகிறது. அதற்கு ஈடாக பெட்ரோலிய பொருள்களின் விலை இந்தியாவில் உயர்த்தப் படவில்லை என்றும் இதனால் பெரும் நஷ்டம் என்றும் தொடர்ந்து புலம்பி வருகின்றன எண்ணெய் நிறுவனங்கள்.
இந்தியன் ஆயில், இந்துஸ்தான், பாரத் பெட்ரோலியம் ஆகிய எண்ணை நிறுவனங்களுக்கு பெட்ரோல், டீசல் மூலம் மட்டும் இந்த ஆண்டில் ரூ.46 ஆயிரத்து 30 கோடி நஷ்டம் ஏற்பட்டு உள்ளதாகக் கூறப்படுகிறது.
இது தவிர சமையல் கியாஸ், மண்ணெண்ணை ஆகியவற்றின் மூலம் ரூ.31 ஆயிரத்து 574 கோடி நஷ்டம் ஏற்பட்டுள்ளதாம்.
நஷ்டத்தை ஈடு செய்ய பெட்ரோல், டீசல், சமையல் கியாஸ் விலையை உயர்த்த வேண்டும் என்று மத்திய அரசை எண்ணை நிறுவனங்கள் வற்புறுத்தி வந்தன. மேலும் எண்ணை நிறுவனங்களே சுயமாக விலையை நிர்ணயித்துக்கொள்ள உரிமை அளிக்கும் படியும் கோரி வருகின்றன.
ஆனால் எந்த வகையில் நஷ்டம் ஏற்பட்டது, முன்பு கச்சா எண்ணெய் விலை குறைவாக இருந்தபோது கிடைத்த லாபம் எவ்வளவு என்று இந்த நிறுவனங்கள் இதுவரை வெள்ளை அறிக்கை எதுவும் தர மறுத்து வருகின்றன.
இந்நிலையில், விலை உயர்வு பற்றி ஆராய்வதற்காக மத்திய திட்ட கமிஷன் உறுப்பினர் கிரித்பரீக் தலைமையில் நிபுணர் குழுவை மத்திய அரசு அமைத்தது.
இந்த குழு தனது ஆய்வு அறிக்கையை மத்திய அரசிடம் வழங்கி உள்ளது. அதில் பெட்ரோல் விலையை 4 ரூபாய் 72 காசும், டீசல் விலையை 2 ரூபாய் 33 காசும் உயர்த்தலாம் என்று சிபாரிசு செய்யப்பட்டுள்ளது.
அதே போல சமையல் கியாஸ் விலையை சிலிண்டருக்கு ரூ.100-ம், மண்ணெண்ணை லிட்டருக்கு ரூ.6-ம் உயர்த்தும் படியும் சிபாரிசு செய்துள்ளனர். பெட்ரோலிய பொருட்கள் விலை நிர்ணய உரிமையை தொடர்ந்து மத்திய அரசே கட்டுப்பாட்டில் வைத்திருக்கக் கூடாது என்றும் கூறியுள்ளனர்.
இந்த அறிக்கையை ஒரு வாரத்தில் காபினெட் கூட்டத்தில் வைத்து முடிவு எடுக்கப்படும் என்று மத்திய பெட்ரோலியத் துறை அமைச்சர் முரளி தியோரா கூறினார்.
இந்நிலையில், கிரித் பரீக் கமிட்டி அறிக்கைப்படி அப்படியே விலை உயர்த்தினால் எதிர்ப்பு கிளம்பும் என்பதை உணர்நே்த மத்திய அரசு, ஒரு புதிய திட்டம் வகுத்துள்ளது.
இதன்படி, பெட்ரோல், டீசல் இரண்டிலுமே லிட்டருக்கு தலா 1 ரூபாய் மட்டும் உயர்த்தலாம், அல்லது பெட்ரோலுக்கு 3 ரூபாயும், டீசலுக்கு 1 ரூபாயும் உயர்த்தலாம் என திட்டமிட்டுள்ளது. அநேகமாக இரண்டாம் திட்டத்தை விரைவில் அறிவிக்கக் கூடும் மத்திய அரசு என எதிர்பார்க்கப்படுகிறது.
சமையல் கியாஸ் விலையை மிக குறைந்த அளவில் மட்டும் உயர்த்த திட்டமிடப்பட்டுள்ளது என செய்திகள் கூறுகின்றன.
ஏழை மக்களின் நலனைக் கருத்தில் கொண்டு மண்ணெண்ணை விலையை உயர்த்தப்படாது எனத் தெரிகிறது.
வருகிற 26ம் தேதி மத்தியில் பொது பட்ஜெட் தாக்கல் செய்யப்படுகிறது. அதற்கு முன்னதாகவே இந்த விலை உயர்வு அறிவிக்கப்பட உள்ளது.
நாளை காங்கிரஸ் செயற்குழு கூடுகிறது:
இந் நிலையில் அத்தியாவசிய பொருட்களின் விலைவாசி உயர்வு குறித்து விவாதிக்க மாநில முதல்வர்கள் கூட்டம் நாளை மறுநாள் நடைபெற உள்ள நிலையில் காங்கிரஸ் கட்சியின் செயற்குழு கூட்டம் நாளை நடக்கிறது.
இதில் விலைவாசி தவிர பெட்ரோலியப் பொருட்களின் விலையை உயர்த்துவது குறித்தும் விவாதிக்கப்படவுள்ளது.
நாடு முழுவதும் அத்தியாவசிய பொருட்களின் விலை கடுமையாக உயர்ந்து வருகிறது. குறிப்பாக, கடந்த இரண்டு மாதங்களில் உணவுப்பொருட்கள் மீதான பணவீக்கம் 20 சதவீதம் வரை அதிகரித்துள்ளது.
எனவே, பல்வேறு எதிர்க்கட்சிகளும் மத்திய அரசு மீது கடுமையாக குற்றஞ்சாட்டி வருகின்றன. எனவே, விலைவாசி உயர்வு குறித்து விவாதிப்பதற்காக முதல்வர்கள் மாநாட்டை பிரதமர் மன்மோகன்சிங் நாளை மறுநாள் கூட்டியுள்ளார்.
இந்நிலையில், காங்கிரஸ் கட்சியின் செயற்குழு கூட்டத்தை நாளை (வெள்ளிக்கிழமை) நடத்த சோனியா முடிவு செய்துள்ளார்.
விலைவாசி உயர்வு, இம்மாத இறுதியில் தாக்கல் செய்யப்பட உள்ள மத்திய பொது பட்ஜெட் ஆகியவை குறித்து இக்கூட்டத்தில் விவாதிக்கப்படும் என தெரிகிறது.
இதில் எடுக்கப்படும் முடிவைப் பொறுத்து பெட்ரோலியப் பொருட்களின் விலை உயர்வு குறித்து மத்திய அரசு முடிவு செய்யும்.












Click it and Unblock the Notifications