மைசூர் ரயில் நிலையத்தில் Wi-Fi வசதி!
மைசூர்: மைசூர் ரயில் நிலையத்தில் உயர்தொழில்நுட்ப 'வை ஃபை' வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
இதன்மூலம் இனி மைசூர் ரயில் நிலையத்துக்கு லேப்டாப் அல்லது நவீன செல்போன்கள் எடுத்துச் செல்லும் பயணிகள் வை ஃபை மூலம் இண்டெர்நெட் வசதி பெறலாம்.
மைசூர் ரயில் நிலையத்தின் மையப்பகுதியில் இருந்து 200 மீட்டர் தூரத்துக்கு (ஆரம்) இந்த சேவை கிடைக்கும்.
தென்மேற்கு ரயில்வேயின் மூத்த மண்டல் வர்த்தக மேலாளர் அனூப் தயானந் சாது இவ்வசதியை கடந்த 1ம் தேதி மைசூர் ரயில் நிலையத்தில் துவக்கி வைத்தார்.
நியூஸிலாந்தின் டாமிஸோன் நிறுவனமும், மைசூர் மண்டல ரயில்வேயும் இணைந்து பொதுத்துறை-தனியார் ஒத்துழைப்பு அடிப்படையில் இவ்வசதியை உருவாக்கியுள்ளன.
முதலில் ஆறு மாத காலத்துக்கு சோதனை முறையில் இவ்வசதியை பயன்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளதாகவும், இம்முயற்சி வெற்றி பெற்றதை அடுத்து படிப்படியாக மற்ற நிலையங்களுக்கும் இதே வசதி விரிவுபடுத்தப்படும் என்றும் ரயில்வே அதிகாரிகள் தெரிவித்தனர்.
நாட்டில் முதல்முறையாக வை ஃபை தொடர்பு வசதிகொண்ட ரயில்நிலையம் என்ற பெருமையை பெங்களூர் ரயில் நிலையம் பெற்றிருந்தது.
இதைத் தொடர்ந்து ஐடி நிறுவனங்கள் பெருகி வரும் மைசூரிலும் ரயில் நிலையத்தில் இந்த உயர் தொழில்நுட்பத்தை அறிமுகப்படுத்தியிருப்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications