கருணாநிதியுடன் கோவில்பட்டி அதிமுக எம்.எல்.ஏ. சந்திப்பு
சென்னை: நேற்று மத்திய அமைச்சர் மு.க.அழகிரியை சந்தித்து தொகுதிப் பிரச்சினைகள் தொடர்பாக மனு அளித்த கோவில்பட்டி அதிமுக எம்.எல்.ஏ ராதாகிருஷ்ணன், பின்னர் சென்னைக்கு வந்து முதல்வர் கருணாநிதியையும் சந்தித்தார்.
அவரை தூத்துக்குடி திமுக செயலாளர் பெரியசாமி, எம்.எல்.ஏ அப்பாவு ஆகியோர் சென்னைக்கு அழைத்து வந்து முதல்வரிடம் அறிமுகப்படுத்தி வைத்தனர்.
தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி தொகுதி அ.தி.மு.க. எம்.எல்.ஏ.வாக இருப்பவர் ராதாகிருஷ்ணன். இவர் தூத்துக்குடி மாவட்ட ஜெயலலிதா பேரவை செயலாளர் பொறுப்பையும் வகித்து வந்தார்.
நேற்று காலை அவர் மதுரையில் மு.க.அழகிரியை சந்தித்து பேசினார். இதையடுத்து அவர் வகித்து வந்த கட்சிப் பதவியை பறித்தார் ஜெயலலிதா.
இதையடுத்து ராதாகிருஷ்ணன் சென்னைக்குக் கிளம்பினார். மாலையில் சென்னை வந்து சேர்ந்த அவர் அண்ணா அறிவாலயத்திற்கு வந்து அங்கு முதல்வர் கருணாநிதியைச் சந்தித்தார்.
இந்த சந்திப்பின்போது, அமைச்சர்கள் அன்பழகன், துரைமுருகன், தூத்துக்குடி மாவட்ட செயலாளர் பெரியசாமி, அப்பாவு எம்.எல்.ஏ. ஆகியோர் உடன் இருந்தனர்.
பிறகு வெளியே வந்த எம்.எல்.ஏ. ராதாகிருஷ்ணன் செய்தியாளர்களைச் சந்தித்தார்.
முதல்வர் கருணாநிதியை சந்தித்ததற்கான நோக்கம் என்ன என்று செய்தியாளர்கள் கேட்டபோது,
கடந்த 2 ஆண்டுகளாக எனது தொகுதி குறைகளை சட்டமன்றத்தில் பேச அ.தி.மு.க. வாய்ப்பு அளிக்கவில்லை. இதனால், எனது தொகுதி வளர்ச்சி பணி பாதிக்கப்பட்டது.
எங்கள் தொகுதியில் குடிதண்ணீர் பிரச்சினை, பஸ் - சாலை வசதியின்மை, போலீஸ் நிலையம் இல்லாதது, மருத்துவமனையில் டாக்டர் பற்றாக்குறை போன்ற குறைகளை நிவர்த்தி செய்துதரக் கோரி முதல்வர் கருணாநிதியிடம் கோரிக்கை விடுக்க வந்தேன் என்றார்.
தி.மு.க.வில் இணைவீர்களா என்ற கேள்விக்கு, என்னை பதவியில் இருந்து நீக்கியதைப் பற்றி கவலைப்படவில்லை. தமிழகத்தில் உள்ள அனைத்து தொகுதிகளின் பிரச்சினையையும் தீர்க்கும் பொறுப்பில் உள்ள முதல்வர் கருணாநிதியை சந்தித்து எனது தொகுதி குறைகளையும் நிவர்த்தி செய்ய கோரினேன் என்றார்.












Click it and Unblock the Notifications