ஜெயராம் வீடு தாக்குதல்: சீமான் மீது வழக்கு-இன்ஸ்பெக்டர் ட்ரான்ஸ்பர்!

இந்த விவகாரத்தில் நாம் தமிழர் இயக்கத் தலைவர் சீமான் மீதும் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
ஜெயராம் விவகாரம் இப்போது பெரும் பிரச்சினையாக மாறியுள்ளது. பல்வேறு தமிழ் அமைப்புகள் கடும் எதிர்ப்பைத் தெரிவித்து வருகின்றன. ஜெயராம் மன்னிப்பு கேட்பதாக அறிவித்த போதிலும், இந்த எதிர்ப்பு குரல்கள் அடங்குவதாக இல்லை.
இந் நிலையில், நேற்று மாலை ஜெயராம் வீட்டை தீவைத்துக் கொளுத்த முயன்றனர் நாம் தமிழர் இயக்கத்தினர் சிலர். அப்போது ஜெயராமின் மனைவி, மகள் மற்றும் பெற்றோர் வீட்டுக்குள் இருந்துள்ளனர். அவர் வீட்டிலிருந்த விருதுகள், மேசை நாற்காலிகள், படங்கள், ஜன்னல் கதவுகள் என தாறுமாறாக அடித்து நொறுக்கியுள்ளனர். வீட்டின் முன் நிறுத்தப்பட்டிருந்த புத்தம் புதிய ஹூண்டாய் காரும் அடித்து நொறுக்கப்பட்டுள்ளது.
வீட்டையொட்டியுள்ள அவரது அலுவலகம் தீவைத்துக் கொளுத்தப்பட்டுள்ளது.
இவ்வளவு நடந்தும் அதைத் தடுக்க முயற்சிக்காமல் கடைசி வரை வேடிக்கை பார்த்துள்ளனர் போலீசார். இந்த நிலையில், இச்சம்பவத்துக்குக் காரணமான நாம் தமிழர் இயக்க உறுப்பினர்கள் 12 பேரை கைது செய்துள்ளனர் மாநகர காவல் துறையினர். மேலும் இதனைத் தூண்டிவிட்டதாக நாம் தமிழர் அமைப்பின் தலைவர் சீமான் மீது குற்றம்சாட்டப்பட்டுள்ளது. வழக்கும் பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்த சம்பவம் தொடர்பாக கொலை முயற்சி,கொலை மிரட்டல் மற்றும் பொதுச் சொத்துக்கு சேதம் விளைவித்ததாக வளசரவாக்கம் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். சீமான் மீதும் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
இன்ஸ்பெக்டர்-எஸ்ஐ இடமாற்றம்:
ஜெயராம் வீட்டின் மீது தாக்குதலைத் தடுக்கத் தவறிய வளசரவாக்கம் இன்ஸ்பெக்டர், சப் இன்ஸ்பெக்டர் ஆகியோர் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
இதற்கிடையில், ஜெயராம் மீண்டும் மீண்டும் பகிரங்கமாக மன்னிப்பு கேட்டுவிட்டதால் அவர் மீதான வழக்கை வாபஸ் பெறுவதாக சமூக நீதி பேரவை அமைப்பின் பெண்கள் பிரிவு மாநில பொறுப்பாளர் வக்கீல் ஏ.இந்திராணி அறிவித்துள்ளார்.
நிருபர்கள் சந்திப்பை கேன்சல் செய்த சீமான்:
இந் நிலையில் கோவை காந்திபுரம் அஸ்வினி ஹோட்டலில் இன்று நாம் தமிழர் இயக்கம் தொடர்பாக நிருபர்களை சந்திக்க இருந்தார் சீமான்.
இதற்காக பகல் 1 மணிக்கு ஹோட்டலுக்கு வந்த அவரிடம் நிருபர்கள், நடிகர் ஜெயராம் வீடு தாக்கப்பட்ட விவகாரம் தொடர்பாக உங்கள் மீது போலீஸார் வழக்கு பதிவு செய்துள்ளார்களே என்ற தகவலைத் தெரிவித்ததும், அப்படியே திரும்பிச் சென்றார்.
அவர் வருவார் என்று ஒரு மணி நேரத்துக்கும் மேலாக நிருபர்கள் காத்திருந்தனர். ஆனால், அவர் வரவேயில்லை.
சீமான் கைதாவாரா?:
இந் நிலையில் வன்முறையை தூண்டியதாக வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ள சீமான் எந்த நேரமும் கைது செய்யப்படலாம் என்று தெரிகிறது.












Click it and Unblock the Notifications