சார்க் உள்துறை அமைச்சர்கள் மாநாடு திடீர் தள்ளிவைப்பு
டெல்லி: இஸ்லாமாபாத்தில் நடைபெறுவதாக இருந்த சார்க் நாடுகளின் உள்துறை அமைச்சர்கள் மாநாடு திடீரென தள்ளிப் போடப்பட்டு விட்டது. இதனால் இந்தியா, பாகிஸ்தான் உள்துறை அமைச்சர்கள் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தும் திட்டம் தள்ளிப் போயுள்ளது.
பிப்ரவரி 26 முதல் 28ம் தேதி வரை ராவல்பிண்டியில் சார்க் நாடுகளின் உள்துறை அமைச்சர்கள் மாநாடு நடைபெறுவதாக இருந்தது.
இந்த மாநாட்டுக்கு மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரத்தை அனுப்புவது தொடர்பாக மத்திய அரசு யோசித்து வந்தது. இறுதியில் சிதம்பரத்தை அனுப்ப முடிவு செய்யப்பட்டது.
இதையடுத்து மும்பைத் தாக்குதல் சம்பவத்திற்குப் பின்னர் இந்தியா, பாகிஸ்தான் இடையிலான முதல் பேச்சுவார்த்தை மற்றும் சந்திப்பாக இந்த மாநாடு அமையும் சூழ்நிலை எழுந்தது.
ஆனால் தற்போது திடீரென மாநாடு தள்ளிப் போடப்பட்டு விட்டது. இதனால் இந்தியா, பாகிஸ்தான் சந்திப்பும் தள்ளிப் போயுள்ளது.
நேபாள நாட்டு உள்துறை அமைச்சர் இந்த மாநாட்டில் கலந்து கொள்ள தேதி ஒத்துவரவில்லையாம். இந்த ஒரு காரணத்திற்காகவே மாநாடு தள்ளிப் போடப்பட்டுள்ளதாம்.
மார்ச் மாத மத்தியில் மாநாட்டை நடத்துமாறு நேபாளம் கேட்டுக் கொண்டுள்ளது. எனவே மாநாடு மார்ச் மாதத்தில் நடைபெறக் கூடும் எனத் தெரிகிறது.












Click it and Unblock the Notifications