முல்லைப் பெரியாறு அணை வழக்கில் தமிழகத்திற்காக வாதாடும் பராசரனை விமர்சிக்கக் கூடாது - கருணாநிதி

Subscribe to Oneindia Tamil

Karunanidhi
சென்னை: தமிழகத்திலே உள்ள சாதாரணமான ஒருவரிடம் கேரள அரசு அணை கட்ட ஆட்சேபணை உண்டா என்று கேட்டால்கூட ஏற்க மாட்டார்கள் என்கிறபோது, தமிழக அரசின் மூத்த வழக்கறிஞர் ஆட்சேபணை இல்லை என்று கூறுவாரா என்பதைக்கூட எண்ணிப் பார்க்காமல், அவர் மீது மாசு கற்பிக்க முயலுவது எவ்வளவு தவறானது என்பதை சிந்தித்துப் பார்க்க வேண்டும் என்று முதல்வர் கருணாநிதி கூறியுள்ளார்

இது குறித்து கருணாநிதி வெளியிட்டுள்ள கேள்வி-பதில் பாணி அறிக்கை:

கேள்வி: முல்லைப்பெரியாறு அணை பற்றிய வழக்கு உச்ச நீதிமன்றத்திலே நடைபெற்றுக் கொண்டிருக்கும் நேரத்தில்-வழக்கைப் பற்றி தாங்கள் எதுவும் சொல்ல விரும்ப மாட்டீர்கள் என்ற போதிலும்-தமிழக அரசின் சார்பில் வாதாடும் வழக்கறிஞரைப் பற்றி புகார் கூறியும், தமிழக அரசு ஏதோ துரோகம் செய்து விட்டதாகவும் சாட்டப்படுகின்ற குற்றச்சாட்டைப் பற்றி என்ன கூறுகிறீர்கள்?

பதில்: கேரள அரசு கட்ட நினைக்கும் புதிய அணைக்கு தமிழக அரசுக்கு ஆட்சேபணை உண்டா என்று நீதிபதிகள் கேட்டபோது, தமிழக அரசின் வழக்கறிஞர் அதற்கு ஆட்சேபணை இல்லை என்று சொன்னார் என்று தமிழக அரசின் வழக்கறிஞர் மீது ஒரு குற்றச்சாட்டு சொல்லப்படுகிறது.

ஆனால் தமிழக அரசின் வழக்கறிஞர் அவ்வாறு ஆட்சேபணை இல்லை என்றே கூறவில்லை. தமிழக அரசுக்கு புதிய அணை பற்றி ஆட்சேபணை உண்டா என்று நீதிபதிகள் கேட்டபோது, புதிய அணை கட்ட வேண்டும் என்று கோருகின்ற கேரள அரசு; அதன் அவசியத்தை தெரிவிக்கவில்லை என்றும், மேலும் தற்போதுள்ள அணை வலுவிழந்து விட்டது என்று சொல்வதற்கு எந்த ஆதாரத்தையும் கேரள அரசு தாக்கல் செய்த எழுத்துபூர்வமான அறிக்கையில் தெரிவிக்கவில்லை என்றும் கூறியதோடு - நீதிபதி டி.கே. ஜெயின் புதிய அணை கட்டுவது குறித்து கருத்து கேட்டபோது கூட - புதிய அணை கட்டி தங்கள் கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்ள வேண்டும் என்பதுதான் கேரளாவின் உள்நோக்கம் என்றும், புதிய அணை கட்டினால் அதனை தமிழக அரசின் கட்டுப்பாட்டின் கீழ் வைக்க ஒப்புக்கொள்வார்களா என்பதை நீதி மன்றம் கேட்டுச் சொல்ல வேண்டுமென்றும் தான் கூறியுள்ளார்.

இதுதான் உண்மை. புதிய அணை கட்டுவதற்கு ஆட்சேபணை இல்லை என்று தமிழக அரசின் வழக்கறிஞர் கூறவே இல்லை.

தமிழகத்திலே உள்ள சாதாரணமான ஒருவரிடம் கேரள அரசு அணை கட்ட ஆட்சேபணை உண்டா என்று கேட்டால்கூட ஏற்க மாட்டார்கள் என்கிறபோது, தமிழக அரசின் மூத்த வழக்கறிஞர் ஆட்சேபணை இல்லை என்று கூறுவாரா என்பதைக்கூட எண்ணிப் பார்க்காமல், அவர் மீது மாசு கற்பிக்க முயலுவது எவ்வளவு தவறானது என்பதை சிந்தித்துப் பார்க்க வேண்டும்.

மேலும் இந்த வழக்கு 20-1-2010 அன்று விசாரணைக்கு வந்த போது, தமிழக அரசின் மூத்த வழக்கறிஞர், தமிழகத்தின் உரிமை பற்றிக் கூறி, பெரியாறு அணையின் நீர் மட்ட உயரத்தை, உச்சநீதிமன்றத் தீர்ப்பின்படி, முதற் கட்டமாக 142 அடிக்கு உடனடியாக உயர்த்துவதற்கும்-கேரள நீர்ப்பாசன மற்றும் நீர்ப் பாதுகாப்பு சட்டம் (2003)-க்கு, 2006-ல் நிறை வேற்றப்பட்ட சட்டத் திருத்தம் அரசியல் சாசனத்தின்படி முல்லைப் பெரியாறு அணையைப் பொறுத்தவரையில் செல்லாது என்றும், அதை உடனடியாக ரத்து செய்ய வேண்டும் என்றும் தக்க ஆதாரங்களை எடுத்துக்கூறி, ஏற்கனவே நீதிமன்றத்தில் முடிவு செய்யப்பட்ட வழக்குகளின் தீர்ப்புகளையும் மேற்கோள் காட்டி வாதாடியிருக்கிறார்.

விசாரணையின் போது, 1979-ல் செய்த உடன்பாட்டின் போது, மத்திய அரசு பங்கேற்றதா என்று நீதிபதிகள் கேட்டதற்கு, தமிழக அரசின் வழக்கறிஞர் அடிப்படை உண்மைக்கு மாறாக "மத்திய அரசு அந்தப் பேச்சுகளில் பங்கேற்கவில்லை'' என்று சொன்னதாகக் கூறி, அந்த அரிச்சுவடி உண்மைகூட தமிழக அரசு வழக்கறிஞருக்குத் தெரியாதா என்றும் கேள்வி கேட்டுள்ளார்கள். இதுவும் அடிப்படையே இல்லாத ஒரு குற்றச்சாட்டாகும்.

25-11-1979-ல் மத்திய நீர் வளக் குழுமத்தின் தலைவர் தாமஸ் தலைமையில் நடந்த கூட்டத்தின் நடவடிக்கை குறிப்பு, மற்றும் அதன் பின்னர் நடந்த கூட்டங்களின் நடவடிக்கை குறிப்புகள் பற்றியும் நீதி மன்றத்திலேயே தமிழக அரசின் வழக்கறிஞர் படித்து தெளிவுபடுத்தி வாதாடியிருக்கிறார்.

அப்படியிருக்க அவர் மத்திய அரசு பேச்சுக்களில் பங்கேற்கவில்லை என்று நீதிமன்றத்தில் தெரிவித்தார் என்று குற்றஞ்சாட்டுவது-தமிழக அரசுக்கும், அதன் வழக்கறிஞருக்கும் வேண்டுமென்றே அவப் பெயரை ஏற்படுத்துகின்ற ஒன்றே தவிர வேறல்ல.

கேரள அரசு வழக்கை ஒத்தி வைக்க கேட்ட போதிலும், தமிழக அரசின் வழக்கறிஞரின் வற்புறுத்தலின் பேரில்தான் உச்சநீதிமன்றம் கேரளத்தின் கோரிக்கையை ஏற்றுக் கொள்ளாமல் சாட்சிகளை விரைவில் விசாரித்து வழக்கை விரைந்து தொடர்ந்து நடத்த வேண்டும் என்று உத்தரவிட்டது.

இவைகளையெல்லாம் புரிந்து கொள்ளாமல்-வேண்டுமென்றே தமிழக அரசின் மீது குறை கூற வேண்டும் என்பதற்காக-கேரளாவிற்கு ஆதரவாக இவர்கள் துணை போகின்றார்கள். இன்னும் சொல்லப் போனால் - கேரள அமைச்சரிடமும், அதிகாரிகளிடமும் சென்று-தமிழக அரசுக்கு எதிராக முல்லைப் பெரியாறு வழக்கில் எப்படி செய்தி வெளியிடலாம் என்று கேட்டறிந்து, அதையே செய்தியாக்கி ஒரு சிலர் இங்கே வெளியிட்டு வருகிறார்கள் என்பதும் உண்மை.

நேற்றைய விவாதத்திலே கூட, கேரள அரசின் சார்பில் வாதாடும் வழக்கறிஞர், "இப்பிரச்சினை மாநிலங்களுக்கு இடையேயானது, அதை சுப்ரீம் கோர்ட்டால் தீர்க்க முடியாது, எனவே நடுவர் மன்றம் அமைக்கும்படி மத்திய அரசுக்கு உத்தரவிட வேண்டும்'' என்று வழக்கை திசை திருப்ப முயன்ற போது, நமது வழக்கறிஞர், பராசரன் அவர்கள் குறுக்கிட்டு, "முல்லைப் பெரியாறு பிரச்சினை மாநிலங்களுக்கு இடையேயான நதிநீர்ப் பிரச்சினை அல்ல. இப்பிரச்சினைகளை யெல்லாம் ஏற்கனவே இந்தக் கோர்ட் அலசி ஆராய்ந்து விட்டது. தற்போதைய அணையை அழிக்கக் கூடாது. அப்படி அழித்தால் தமிழகத்தின் நலன் பெரிய அளவில் பாதிக்கப்படும்.

எனவே நடுவர் மன்றம் அமைப்பது என்ற கேள்வியே எழவில்லை, அதை அமைக்கவும் தேவையில்லை'' என்று வாதிட்டுள்ளார். மேலும் கேரள வழக்கறிஞர், இதுவும் தண்ணீர் பங்கீடு பிரச்சினைதான், எனவே இதனை நடுவர் மன்றத்திற்குத்தான் அனுப்ப வேண்டுமென்று வாதாடியபோது, நீதிபதி லோதா அவர்கள் குறுக்கிட்டு-"இந்த நீதிமன்றம் ஏற்கனவே இது தண்ணீர் பிரச்சினை அல்ல என்ற முடிவினை அறிவித்துள்ளது, அணையின் பாதுகாப்பினை மட்டுமே கருத்திலே கொண்டு - தண்ணீரின் அளவு 142 அடி வரை இருக்கலாமென்று முடிவு செய்துள்ளது.

தமிழகம் உச்சநீதிமன்றத்தின் இந்த முடிவினை நடைமுறைப்படுத்த வேண்டுமென்றுதான் விரும்புகிறார்கள். இந்த நிலையில் இதனை தண்ணீர் பிரச்சினை என்று கேரளா எவ்வாறு கூறலாம்'' என்று கேட்டிருக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

தமிழக அரசு சார்பாக இந்த வழக்கிலே வாதாடும் மூத்த வழக்கறிஞர் பராசரன் அவர்கள் நீண்ட நெடிய அனுபவம் பெற்றவர்.

தமிழக அரசுக்காக பல ஆண்டு காலமாக பல்வேறு வழக்குகளில் ஆஜராகி வாதிட்டு வருபவர். தமிழக நலனில் அக்கறை கொண்டவர். அவர் மீது இவ்வாறு ஆதாரம் எதுவுமில்லாமல் வாய் புளித்ததோ, மாங்காய் புளித்ததோ என்ற முறையில் குற்றஞ்சாட்டுவது தமிழ்நாட்டு நலன்களுக்கு நல்லதல்ல.

கேரளாவின் தூண்டுதலோடு அத்தகைய குற்றச்சாட்டு சுமத்தப்படுகிறதோ என்று கூட நினைக்கத் தோன்றுகின்றது.

தேர்தல் ஆணையத்தின் போக்கு...

கேள்வி: மத்திய தேர்தல் ஆணையம் பாரபட்சமாக நடந்து கொள்கிறது என்று நீங்கள் நினைக்கிறீர்களா என்ற கேள்விக்கு பதில் அளித்த தாங்கள் "நீங்கள் அப்படி நினைத்தால் அதற்கு நான் பொறுப்பல்ல'' என்று பதில் அளித்திருந்தீர்கள். பென்னாகரம் தொகுதியில் தீவிரமாகப் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ள பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாசும் இந்திய தேர்தல் ஆணையம் நடுநிலையாக நடந்து கொள்கிறதா என்கிற பெரும் சந்தேகம் ஏற்பட்டிருக்கிறது என்று சொல்லியிருக்கிறார். இதைப் பற்றி உங்கள் கருத்து என்ன?

பதில்: பொதுவாக ஒரு மாநிலத்தில் இடைத்தேர்தல் ஒன்றை அறிவிப்பது என்றால், தேர்தல் ஆணையம் அந்த மாநில அரசுகளைக் கலந்து கொண்டு அறிவிப்பது என்ற ஒரு மரபு கூட ஒரு காலத்தில் இருந்தது. அப்படி நடந்து கொண்டால், தேர்தல் ஆணையத்தின் நடு நிலை தவறி விடும் என்று கருதியோ என்னவோ பென்னாகரம் இடைத்தேர்தலை திடீரென்று ஜனவரி மாதம் 20-ம் தேதி நடைபெறும் என்று அறிவித்தது.

ஜனவரி மாதம் 14-ம் தேதி பொங்கல் பண்டிகை, தமிழ்ப் புத்தாண்டு நாள் என்பதால் மாநில தலைமை தேர்தல் அதிகாரியிடம் பா.ம.க. சார்பில் தேர்தலை ஒத்திவைக்க கோரிக்கை வைக்கப்பட்ட போது, அது ஏற்றுக் கொள்ளப்படவில்லை. அதே கோரிக்கையை சில நாட்கள் கழித்து அ.தி.மு.க. அறிக்கையாக வெளியிட்டவுடன், அனைத்துக் கட்சிகள் கூட்டம் கூட்டப்பட்டது. அந்தக் கூட்டத்தில் தி.மு.க. மற்றும் காங்கிரஸ் பிரதிநிதிகள் இடைத்தேர்தலை நடத்த வேண்டுமென்று வலியுறுத்தினர். தேர்தலை ஒத்தி வைக்கத்தேவையில்லை என்ற கருத்தை தெரிவித்தனர்.

அ.தி.மு.க. ஒத்தி வைக்க வேண்டுமென்று சொன்னது. தேர்தல் ஆணையம் அ.தி.மு.க.வின் கருத்தையேற்று தேர்தலை ஒத்தி வைத்தது. அடுத்து, பென்னாகரம் தொகுதியில் திருத்திய வாக்காளர் பட்டியல் தயாரிக்கப்படும் என்ற அறிவிப்பு வெளிவந்தது.

வாக்காளர் பட்டியல் சரியில்லையென்று பா.ம.க. தேர்தல் ஆணையத்திடம் முறையிட்டதாகவும், ஆனால் அதன் மீது ஒருமாத காலம் எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கப்பட வில்லையென்றும் - ஆனால் அ.தி.மு.க.வின் தோழமைக் கட்சிகள் என்று சொல்லப்படும்-தேர்தலிலேயே போட்டியிடாத - எட்டு கட்சிகள் சேர்ந்து டெல்லி சென்று வாக்காளர்கள் பட்டியலிலே முறைகேடு என்று மனு கொடுத்ததும், அதைப் பற்றி மாவட்ட ஆட்சித் தலைவரிடமோ, வேறு எந்த அதிகாரிகளிடமோ விசாரிக்காமல், மத்திய தேர்தல் ஆணையமே முடிவெடுத்து-அடுத்த நாளே வாக்காளர்கள் பட்டியலில் மாற்றம் என்று அறிவித்திருப்பதாக டாக்டர் ராமதாஸ் அறிக்கையிலே சொல்லியிருக்கிறார்.

மத்திய தேர்தல் ஆணையம் பற்றி இப்படிப்பட்ட குற்றச்சாட்டுகள் எழுந்துள்ள நிலையில், இதற்கான விளக்கத்தை அவர்கள்தான் அளிக்க வேண்டுமே தவிர, பொதுவாக இருக்க வேண்டிய தேர்தல் ஆணையத்தின் நடைமுறை பற்றி நான் குற்றஞ்சாட்ட விரும்பவில்லை.

கேள்வி: ஓய்வு பெற்ற அரசு ஊழியர்களை மீண்டும் பணியில் அமர்த்துவதாகக் கூறி, தமிழக அரசின் செயலைக் கண்டித்து கருப்புக்கொடி ஏந்திப் போராட்டம் நடத்தியிருக்கிறார்களே?

பதில்: இதுபற்றி பல முறை விளக்கம் தரப்பட்டுவிட்டது. இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பில் பாதிப்பு ஏற்படும் வகையில் எந்தச் செயல்பாடும் இந்த அரசிலே செய்யப்பட மாட்டாது என்றும் கூறப்பட்டு விட்டது. ஓய்வு பெற்ற அரசு அலுவலர்களை, ஓரிருவரைத் தவிர, மற்ற இடங்களில் வேலை நியமனம் செய்யப்படவும் இல்லை என்றும் தெரிவிக்கப்பட்டாகிவிட்டது.

இவ்வளவிற்குப் பிறகு போராட்டம் என்பதும், ஆர்ப்பாட்டம் என்பதும் ஊரை ஏமாற்றுகின்ற செயல்தானே? தூங்குகிறவனை எழுப்பலாம், தூங்குவது போல நடிப்பவனை எப்படி எழுப்புவது?

கேள்வி: கடல் மீன்பிடி தொழில் ஒழுங்குமுறை மற்றும் மேலாண்மை சட்டத்தைக் கொண்டு வருவதற்கு எதிர்ப்பு தெரிவித்து, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் ஆளுநர் இல்லத்திற்கு முன்பாக ஆர்ப்பாட்டம் நடத்தியிருப்பதைப் பற்றி?

பதில்: செய்தியாளர்களிடம் பேசும் போதே இதைப்பற்றி விவரமாகக் கூறியிருக்கிறேன். நான் கூறியது மட்டுமல்லாமல், மத்திய அமைச்சர் சரத்பவார், டெல்லியில் 3-2-2010 அன்று நடைபெற்ற மீனவ அமைப்புகளின் பிரதிநிதிகள் கலந்து கொண்ட கூட்டத்தில் கூறும்போது, "இந்தச் சட்ட மசோதாவுக்கு பெரும் எதிர்ப்பு கிளம்பியிருப்பது உண்மையே. மீனவர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்க அரசாங்கம் கடமைப் பட்டுள்ளது. இம்மசோதா குறித்து இன்னும் நிறைய ஆராய வேண்டியிருக்கிறது. இதனால் வரும் பட்ஜெட் கூட்டத்தொடரில் இந்த மசோதா தாக்கல் செய்வதை நிறுத்தி வைக்க முடிவெடுக்கப்பட்டுள்ளது. இது விஷயமாக மேலும் பல தரப்பினரிடமும் கருத்துக்களைக் கேட்டறிந்து, அதன் பின்னரே இறுதி முடிவெடுக்கப்படும்'' என்று தெரிவித் துள்ளார். இது மீனவர்களுக்குப் புரிகிறது.

ஆனால் மீனவர்களைத் தூண்டிவிட்டு அரசியல் நடத்துவோருக்குத்தான் புரியமாட்டேன் என்கிறது. அதனால்தான் போராட்டம், ஆர்ப்பாட்டம் எல்லாம்!

மரத்தடியில் வகுப்பு...

கேள்வி: புழல் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி மரத்தடியில் நடை பெறுவதாக ஒரு நாளிதழ் ஒரு பெரிய புகைப்படத்துடன் செய்தி வெளியிட்டுள்ளதே?

பதில்: அது பற்றி உடனடியாக விசாரிக்கப்பட்டது. அந்தப் பள்ளிக்கு மொத்தம் 8 கட்டிடங்கள் உள்ளன. அந்த பத்திரிகை வெளியிட்ட புகைப்படத்திலேயே அந்தக் கட்டிடங்கள் இருப்பதைக் காண முடிகிறது. அங்கேயுள்ள ஒரு மரத்தடியில் பத்து மாணவிகள் மட்டும் அமர்ந்து பேசிக்கொண்டிருப்பதையே புகைப்படமாக எடுத்து வெளியிட்டு, வகுப்புகள் அங்கே நடப்பதாக செய்தி வந்துள்ளது.

உண்மையில் அந்தப் பள்ளிக்கு போதிய கட்டிடங்கள் இருப்பதாக விவரம் வந்துள்ளது. அதே பத்திரிகையில், அதே முதல் பக்கத்தில் அங்கீகாரம் இல்லாத பள்ளியில் பயிலும் பிளஸ்-2 மாணவர்களுக்கு தேர்வு எழுதுவதில் திணறல் ஏற்பட்டிருப்பதாகவும் பெரிதாக செய்தி வெளியிட்டுள்ளார்கள். அங்கீகாரத்தைப் பெறத் தவறிய ஒரு சில பள்ளிகள் விரைவில் அங்கீகாரத்தைப் பெற வலியுறுத் தப்பட்டதே தவிர, மாணவர்களுக்கு எந்தவிதமான சிரமமும் ஏற்படுத்துவது இந்த அரசின் நோக்கமல்ல.

அகதிகள் மீதான தாக்குதல்...

கேள்வி: இலங்கை அகதிகள் மீது செங்கற்பட்டு சிறப்பு முகாமில் காவல் துறையினரைக் கொண்டு தாக்குதல் நடத்தியதாகக் கூறி ஒரு சிலர் கண்டனம் தெரிவித்திருக்கிறார்களே?

பதில்: இது குறித்து காவல் துறை தலைவர் விளக்கமாக அறிக்கை அளித்துள்ளார் எனினும் - "செங்கல்பட்டு முகாமிற்குள் போலீசார் சிறைவைப்பு'' என்ற தலைப்பில் எந்தக் கட்சியையும் சாராத ஒரு நாளிதழில் வந்துள்ள செய்தியைப் படித்தாலே உண்மையைப் புரிந்து கொள்ள முடியும்.

அந்தச் செய்தி வருமாறு:

"செங்கல்பட்டு சிறப்பு முகாமில் பாதுகாப்பிலிருந்த போலீசாரை கைதிகள் சிறை பிடித்தனர். அவர்களை மீட்க கதவிலிருந்த பூட்டை உடைக்க முயன்ற போலீசாரை தாக்கிய 15 பேரை போலீசார் கைது செய்தனர்.

வெளிநாடுகளிலிருந்து முறையான பாஸ் போர்ட், விசா எதுவும் இல்லாமல் இந்தியா வருவோருக்கான சிறப்பு முகாம் செங்கல்பட்டில் செயல்படுகிறது. இங்கு, விடுதலைப் புலிகளுக்கு ஆயுதம் கடத்துவோர், திறந்த வெளி முகாம்களில் குற்றச் செயல்களில் ஈடுபடும் அகதிகள் ஆகியோரையும் கியூ பிராஞ்ச் போலீசார் கைது செய்து அடைத்து வைத்துள்ளனர்.

இங்குள்ள கைதிகள், தங்களை திறந்த வெளிமுகாமிற்கு மாற்ற வேண்டும், குற்றப்பத்திரிகை தாக்கல் செய்து வழக்கை விரைவாக முடிக்கவேண்டும் என்பது உட்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.

கடந்த திங்கட்கிழமை மொத்தமுள்ள 33 கைதிகளில் மூன்று பேர் தங்களை திறந்தவெளி முகாமிற்கு மாற்றக் கோரி, தொடர் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டனர். நேற்று முன்தினம் கைதிகள் மரத்தின் மீதேறி ஆர்ப்பாட்டம் நடத்தினர். கியூ பிராஞ்ச் இன்ஸ்பெக்டர் கோவிந்தராஜ் அறிவுறுத்தலில் மரத்திலிருந்து கீழே இறங்கினர்.

அவர் வெளியே சென்றதும் கைதிகள் முகாம் கதவை உட்புறமாக மூன்று பூட்டுகள் போட்டுப் பூட்டினர். இதனால், நேற்று முன்தினம் பாதுகாப்பிற்காக வந்த குடியாத்தம் தாலுகா போலீஸ் இன்ஸ்பெக்டர் கணேசன் மற்றும் நான்கு போலீசார் முகாமிற்குள் சிக்கிக் கொண்டனர். அவர்கள் கதவைத் திறக்கும்படி கெஞ்சியும், கைதிகள் மறுத்து விட்டனர்.

உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இரவு 9 மணிக்கு தமிழ்நாடு சிறப்பு பிரிவு போலீசார் குவிக்கப்பட்டனர். அவர்கள் ஏணி மூலம் மதில் சுவர் மீதேறி உள்ளே செல்ல முயன்றனர். போலீசார் உள்ளே வருவதைக் கண்ட கைதிகள் மின் விளக்குகளை அணைத்தனர். போலீசார் உள்ளே இறங்கி பூட்டுகளை உடைக்க முயன்றனர்.

கைதிகள் போலீசார் மீது கற்களை வீசியும், கம்பிகளாலும் தாக்கினர். போலீசார் அவர்களை விரட்டி அடித்தனர். கைதிகள் முகாம் அறைகளுக்குள் பதுங்கினர். போலீஸ் தரப்பில் இன்ஸ்பெக்டர் ஆல்பிரட் வில்சன், ஏட்டு முனியாண்டி, கைதிகள் தரப்பில் விமலன் ஆகியோர் காயம் அடைந்தனர். அதன்பின் போலீசார், கைதிகளை கட்டுப்படுத்தினர்.

இச்சம்பவம் குறித்து இன்ஸ்பெக்டர் கணேசன் கொடுத்த புகாரின் பேரில், போலீசார் வழக்கு பதிந்து, பத்மராஜன், கிருஷ்ணநீதன், முகமது ரிக்ஷான், கிரிதாஸ் உட்பட 15 பேர் கைது செய்யப்பட்டனர்.

செங்கல்பட்டு குற்றவியல் நீதிபதி எழிலரசி 15 பேரையும் புழல் சிறையில் அடைக்க உத்தரவிட்டார். புழல் சிறையில் இலங்கை மீனவர்கள் அடைக்கப் பட்டுள்ளதால், பிரச்சினை ஏற்படாமல் இருக்க 15 பேரையும் போலீசார் வேலூர் சிறைக்குக் கொண்டு சென்றனர் என்று கூறப்பட்டுள்ளதாக முதல்வர் தெரிவித்துள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+