நடு ரோட்டில் சங்கிலியைப் பறித்த கொள்ளையனுடன் தனித்துப் போராடிய மாணவி
சென்னை: சென்னை வேப்பேரியில், கல்லூரி மாணவியின் சங்கிலியைப் பறிக்க முயன்ற திருடனை எதிர்த்து அந்த மாணவி துணிச்சலுடன் போராடியதால் பரபரப்பு ஏற்பட்டது.
வேப்பேரி ஈ.வி.கே. சம்பத் சாலை திருப்பத்தில் ஷாலினி என்ற கல்லூரி மாணவி தனது நண்பருக்காக காத்திருந்தார். அப்போது ஒரு மோட்டார் சைக்கிள் வந்தது.
அதில் இருவர் இருந்தனர். ஒருவர் ஹெல்மட் அணிந்திருந்தார். அந்த நபர்கள் இருவரும், திடீரென ஷாலினி அணிந்திருந்த தங்கச் சங்கிலியைப் பிடித்து இழுத்தனர்.
இதை எதிர்பாராத ஷாலினி அதிர்ச்சியடைந்தார். இருப்பினும் சுதாரித்துக் கொண்டு திருடனின் கையை இறுகப் பிடித்துக் கொண்டார்.
சில விநாடிகள் நீடித்த இந்த இழுபறியில் சங்கிலி மூன்றாக பிய்ந்தது. அதில் ஒரு பகுதி திருடன் கைக்குப் போனது. இன்னொரு பகுதி கீழே விழுந்தது. இன்னொரு பகுதி ஷாலினியின் பிடியில் இருந்தது.
திருடனிடமிருந்து கல்லூரி மாணவி தனியாகப் போராடுவதைப் பார்த்து அப்பகுதியில் இருந்த கட்டட வாட்ச்மேன் உள்ளிட்டோர் ஓடி வந்தனர்.
இதைப் பார்த்த திருடர்கள், கைக்குக் கிடைத்த சங்கிலிப் பகுதியையும் கீழே போட்டு விட்டு பைக்கைக் கிளப்பிக் கொண்டு ஓடி விட்டனர். இதனால் ஷாலினியின் தங்கச் சங்கிலி பத்திரமாக மீண்டது. அது 2 பவுன் சங்கிலியாகும்.
இப்பகுதியில் இதுபோல அடிக்கடி வழிப்பறி, சங்கிலித் திருட்டு போன்றவை நடப்பதாக மக்கள் குற்றம் சாட்டுகிறார்கள். இந்தப் பகுதியில் போலீஸ் கண்காணிப்பை அதிகரிக்க வேண்டும் எனவும் அவர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.












Click it and Unblock the Notifications