என் கணவரைக் கண்டுபிடிக்க உலக சமுதாயம் உதவ வேண்டும்- பொன்சேகாவின் மனைவி அனோமா கண்ணீர்

ராணுவத்தினரால் மிகவும் மோசமான முறையில் கைது செய்யப்பட்டுள்ளார் பொன்சேகா. அவரது பிடரியில் அடித்துத் தள்ளி, தரதரவென கை, கால்களைப் பிடித்து இழுத்து மிக மோசமான முறையில் ராஜபக்சே அரசின் ராணுவ வீரர்கள் பொன்சேகாவைக் கைது செய்து கொண்டு சென்றுள்ளனர்.
தற்போது பொன்சேகா எங்கு இருக்கிறார் என்பது தெரியவில்லை.
இதுகுறித்து பொன்சேகாவின் மனைவி அனோமா கவலை தெரிவித்துள்ளார். ஏபிசி நிறுவனத்துக்கு அவர் அளித்துள்ள பேட்டியில், எனது கணவர் எங்கு இருக்கிறார் என்று தெரியவில்லை. அவரது உயிருக்கு ஆபத்து ஏற்பட்டிருப்பதாக நான் அஞ்சுகிறேன்.
நான் மிக மிக கவலையுடன் இருக்கிறேன். தற்போது அவரை எங்கு கொண்டு சென்றுள்ளனர் என்று கூடத் தெரியவில்லை. அவரை அழைத்துச் சென்றவர்கள், எங்கே கொண்டு சென்றுள்ளோம் என்பதைக் கூட எனக்குத் தெரிவிக்கவில்லை.
எனது கணவரை இந்த அரசு கைது செய்யவில்லை. மாறாக கடத்திச் சென்றிருக்கிறது. எனது கணவரைக் கண்டுபிடிக்க உலக சமுதாயம் உதவ வேண்டும்.
எனக்கு யாரிடம் போய் குமுறுவது என்று கூடத் தெரியவில்லை. யாரிடம் போய் உதவி கேட்பதும் என்றும் தெரியவில்லை. யாராவது எனது குமுறலைக் கேட்டு உதவி செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.
எனது கணவர் தனது குடும்பத்தினருடன் தொடர்பு கொள்ளக் கூட அனுமதிக்கப்படாமல் வைக்கப்பட்டுள்ளார் என்று கண்ணீர் மல்கக் கூறியுள்ளார் அனோமா.












Click it and Unblock the Notifications