முல்லைப் பெரியாறில் புதிய அணை: பாறைகளை ஆய்வு செய்யும் பணியைத் தொடங்கியது கேரளா

முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டத்தை உயர்த்துமாறு உச்சநீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை செயல்படுத்தாத கேரள அரசு, தற்போது அணைக்கு அருகில் புதிய அணையை கட்டும் முயற்சியில் இறங்கியுள்ளது.
கேரள அரசின் பரமேஸ்வரன் நாயர் தலைமையிலான முல்லைப் பெரியாறு அணை பாதுகாப்பு குழு கடந்த மாதம் பெரியாறு அணைக்கு அருகே மாற்று அணைக்கான இடத்தை இறுதி செய்தது. அதேசமயம், அந்த இடத்தில் உள்ள பாறைகளின் ஸ்திரத்தன்மை குறித்து விரிவான ஆய்வு செய்த பின்னரே புதிய அணைக்கான பணிகளைத் தொடங்க வேண்டும் எனவும் நாயர் கமிட்டி பரிந்துரைத்தது.
நாயர் கமிட்டி தேர்வு செய்துள்ள இடம் தற்போதைய அணையிலிருந்து 366 மீட்டர் கீழே உள்ளது.
நாயர் கமிட்டியின் ஆலோசனையை ஏற்ற கேரள அரசு, திருவனந்தபுரம் லால் பகதூர் சாஸ்திரி அறிவியல் தொழில்நுட்ப மையத்தைச் சேர்ந்த நிபுணர் குழுவை பாறை சோதனைக்கு அனுப்பியது.
இக்குழுவினர் நேற்று இப்பகுதிக்கு வந்து ஆய்வு நடத்தினர். இதையடுத்து இன்று அப்பகுதியில் பாறைகளை ஆய்வு செய்யும் பணிக்கான டிரில்லிங் பணிகள் தொடங்கியுள்ளன. இதற்கான உபகரணங்கள் டிரக்குகள் போன்ற ஏராளமானவை நேற்றே இப்பகுதியில் தயாராக குவிக்கப்பட்டு விட்டன.
நான்கு இன்ச் போர்களின் மூலம் ஐந்து மீட்டர் ஆழத்துக்கு பாறைகளில் துளை போட்டு, அதன் உறுதித் தன்மையை சோதிக்க திட்டமிட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
இந்தநிலையில், புதிய அணை தொடர்பான ஆய்வுப் பணிகளுக்கு மத்திய சுற்றுச்சூழல் துறை விதித்த பல்வேறு நிபந்தனைகளை கேரள அரசு காற்றில் பறக்க விட்டு தனது பணிகளில் படு மும்முரமாக இறங்கியுள்ளதாக முல்லைப் பெரியாறு அணை அதிகாரிகள் குற்றம் சாட்டியுள்ளனர்.


Click it and Unblock the Notifications
