கமிஷனர் ஜாங்கிட் குறித்து அவதூறு கட்டுரை - நெற்றிக்கண் ஆசிரியர் மணிக்கு ரூ. 10 லட்சம் அபராதம்
சென்னை: சென்னை புறநகர காவல்துறை ஆணையர் ஜாங்கிட், சென்னை மாநகர கூடுதல் ஆணையராக இருந்தபோது அவர் குறித்து அவதூறாக கட்டுரை வெளியிட்ட நெற்றிக்கண் ஆசிரியர் மணிக்கு சென்னை உயர்நீதிமன்றம் ரூ. 10 லட்சம் அபராதம் விதித்துள்ளது.
சென்னை புறநகர் போலீஸ் கமிஷனர் எஸ்.ஆர்.ஜாங்கிட் சென்னை உயர்நீதிமன்றத்தில் ஒரு அவதூறு வழக்கு தொடர்ந்திருந்தார்.
அதில், நான் போலீஸ் துறையில் பல நிலைகளில் பணியாற்றி உள்ளேன். சென்னையில் கூடுதல் கமிஷனராக பணியாற்றியபோது, நெற்றிக்கண் வெளியீட்டாளர் மற்றும் ஆசிரியர் என்று கூறிக்கொண்டு ஏ.எஸ்.மணி என்பவர், என்னை பலமுறை சந்தித்து பேசியிருக்கிறார்.
போலீஸ் பணியிட மாற்றம், சிவில் வழக்குகள் ஆகியவற்றுக்கு ஆதரவாக செயல்படுவதற்கு என்னிடம் கோரிக்கை விடுப்பது வழக்கம். இவர் அடிக்கடி என்னை வந்து சந்தித்ததால் அவரை பற்றி எனக்கு சந்தேகம் ஏற்பட்டது.
இதுபோன்ற பிரச்சினைகளில் சம்பந்தப்பட்ட நபர்களிடம் பணம் வாங்கிக்கொண்டு பத்திரிகையாளர் என்ற போர்வையில், உயர் அதிகாரிகளை சந்தித்து பிரச்சினைகளை தீர்த்து வைக்க முயற்சி செய்கிறார் என்று அறிந்துகொண்டேன். எனவே, அவரது நடவடிக்கைகளுக்கு நான் துணை போகவில்லை. மேலும், இதுபோல் செயல்படுவதை நிறுத்திக்கொள்ள வேண்டும் என்று நான் எச்சரித்தேன். எனவே, என்மேல் கோபம் கொண்டு பல்வேறு நிர்ப்பந்தங்களை என்மீது திணித்தார்.
இந்த நிலையில், பள்ளிக்கரணை என்ற இடத்தில் நடந்த ஒரு சம்பவத்தில் அவர் கைது செய்யப்பட்டார். அந்த வழக்கில் 50 நாட்கள் சிறையில் இருந்த அவர், உயர்நீதிமன்றத்தின் நிபந்தனையின் பேரில் ஜாமீனில் விடப்பட்டார்.
இந்த வழக்கில் மேலும் நடவடிக்கை எடுக்கக்கூடாது என்று போன் மூலம் ஏ.எஸ்.மணி என்னை கேட்டுக்கொண்டார். ஆனால், அதற்கு நான் உறுதி அளிக்கவில்லை என்றதும், என்னைப்பற்றி அவதூறாக செய்தி எழுதுவேன் என்று என்னை மிரட்டினார். அதிலிருந்து என்னைப்பற்றி அவதூறான செய்திகளை வெளியிட தொடங்கினார்.
இந்த நிலையில், 23.11.2007 அன்று போலீஸ் ஐ.ஜி. ஜாங்கிட்டின் இன்னொரு முகம்' என்ற தலைப்பில் ஒரு அவதூறான செய்தியை வெளியிட்டிருந்தார்.
பொதுமக்கள் மத்தியில் நல்ல அதிகாரி என்ற பெயர் எடுத்துள்ள எனக்கு, இது மிகுந்த மனவேதனையை கொடுத்தது. மேலும், மக்கள் மத்தியில் எனக்கு ஒரு கெட்டபெயரை ஏற்படுத்தக்கூடிய இந்த செய்தியால் எனக்கு மிகுந்த மனஉளைச்சல் ஏற்பட்டது.
எனக்கு எதிராக அவதூறான செய்தி வெளியிட்டதற்காக ரூ.10 லட்சம் நஷ்டஈடு வழங்க வாரப் பத்திரிகை ஆசிரியர் ஏ.எஸ்.மணிக்கு உத்தரவிட வேண்டும். இனிமேல் என்னை பற்றி அவதூறாக செய்தி வெளியிடுவதற்கு அவருக்கு தடை விதிக்க வேண்டும் என்று கூறியிருந்தார்.
வழக்கை விசாரித்த நீதிபதி வி.பெரியகருப்பையா பிறப்பித்த தீர்ப்பு:
கோர்ட்டில் ஜாங்கிட் தாக்கல் செய்த ஆவணங்களை பார்வையிடும்போது, அவர் ஏற்றுக்கொண்ட பணியை திறம்பட செய்து மக்களுக்கு நல்ல முறையில் பணியாற்றி இருக்கிறார் என்பது தெரிய வருகிறது. அவரது பணி 3.11.1999 தேதியிட்ட அரசாணையில் அரசால் வெகுவாக பாராட்டப்பட்டுள்ளது.
திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்களில் நேர்மையாகவும், திறமையாகவும் அவர் செயல்பட்டுள்ளார் என்பது அதன் மூலம் தெரிய வருகிறது.
அதுமட்டுமல்லாமல், கடலூர், மதுரை சரகம், செங்கல்பட்டு ஆகிய இடங்களில் அவர் ஆற்றிய பணியை பொதுமக்கள் பாராட்டி அங்கீகரித்துள்ளனர். போலீஸ் அதிகாரியாக இருந்து மக்களுக்கு மிகச்சிறந்த சேவையை ஆற்றக்கூடிய நபர் அவர்.
இந்த நிலையில், பத்திரிகையில் அவதூறாக ஒரு நல்ல அதிகாரியை பற்றி செய்தி வெளியிடுவது அவருக்கு நிச்சயம் வேதனையை ஏற்படுத்தும். உண்மையற்ற குற்றச்சாட்டுகளை பரப்புவது, நேர்மையான அரசு ஊழியர்களின் மனதை மிகவும் பாதிப்படைய செய்யும்.
இந்த செய்தி தனிப்பட்ட சுயலாபத்துக்காக வாரப்பத்திரிகை ஆசிரியரால் செய்தி வெளியிடப்பட்டது என்பதும், அதனால் ஜாங்கிட்டின் நற்பெயருக்கு களங்கம் ஏற்பட்டது என்பதும் தெரிகிறது.
ஜாங்கிட்டை பிளாக்மெயில் செய்து தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர வேண்டும் என்ற நோக்கத்தில் அதாவது, தன் மீது நிலுவையில் இருக்கும் வழக்குகளை முடிவுக்கு கொண்டு வர வேண்டும் என்ற சுயநோக்கத்தில் வார ப்பத்திரிகை ஆசிரியர் செயல்பட்டுள்ளார்.
அந்த செய்தியில் கூறப்பட்ட குற்றச்சாட்டுகள் அனைத்தும் மிகவும் மோசமானவை. எனவே, ஜாங்கிட்டுக்கு அவதூறு ஏற்படுத்திய குற்றத்திற்காக அவருக்கு, ஏ.எஸ்.மணி நஷ்டஈடாக ரூ.10 லட்சம் வழங்க வேண்டும். அவரை பற்றி அவதூறான செய்திகளை அந்த வாரப்பத்திரிகை இனிமேல் வெளியிடக் கூடாது என்று நீதிபதி அறிவித்தார்.












Click it and Unblock the Notifications