பென்னாகரம் தேர்தலை தள்ளி வைத்துள்ளதன் மூலம் ஜனநாயகம் முடக்கப்பட்டு விட்டது - கருணாநிதி

Subscribe to Oneindia Tamil

Karunanidhi
சென்னை: பென்னாகரம் இடைத் தேர்தலை மீண்டும் தள்ளி வைத்துள்ளதன் மூலம் ஜனநாயகத்தின் கால்களை முடக்கி வைத்து விட்டனர். வேலியே பயிரை மேய்கிறதா என்று வேதனையுடன் கேட்க வேண்டியுள்ளது என்று முதல்வர் கருணாநிதி கூறியுள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:

ஒரு தனி மனிதன் செல்வாக்கு பெற்று பணத்தினாலோ - பலத்தினாலோ - பராக்கிரமசாலியாக உயர்ந்து நின்றால் அல்லது தனி மனிதன் அல்லாமல், மேற்சொன்ன தகுதிகளுடன் ஒரு குழுவினர் தலையெடுத்து தட்டிக்கேட்க ஆளின்றி தர்பார்'' நடத்த முற்பட்டால் அது சர்வாதிகார ஆட்சியென்று சரித்திரம் நமக்குச் சொல்லிக் கொடுத்திருக்கிறது.

தனி நாடு கிடைத்தால் அங்கே எத்தகைய ஆட்சி நடத்துவீர்கள் என்று கேட்ட செய்தியாளர்களிடம் ஐயத்திற்கிடமின்றி அங்கே சர்வாதிகார ஆட்சிதான் நடக்கும் - நடத்துவோம்'' என்று ஒரு குரல் ஒலித்தபோது - ஆச்சரியத்தால் திடுக்கிட்ட நான் அதை அக்கணமே மறுத்து அறிக்கை விடுத்தவன் என்ற முறையில் இதனை எழுதுகின்ற தகுதியை நான் பெற்றிருப்பதாகவே கருதுகின்றேன்.

மக்களால் - மக்களுக்காக - நடத்தப்படுகின்ற மக்களாட்சிக்கும் - ஒருவர் நன்மைக்கே அல்லது ஒரு குழுவின் நன்மைக்கே இந்த உலகு உண்டு என்ற எண்ணத்துடன் நடத்துகின்ற ஆட்சிக்கும் - இடையில் உள்ள வானளாவிய வேறுபாடுகளை வரலாற்று ஏடுகளில் படிக்கின்ற வாய்ப்பைப் பெற்றவர்கள் நாம்.

எனினும், மன்னர் ஆட்சியில் மக்கள் மதிக்கப்பட்ட மாண்பினையும் - மக்கள் ஆட்சிகளில் மன்னராட்சியை விட கேடுகள் நடந்த கொடுமைகளையும் - எடுத்துக் கூற வரலாறுகள் தவறவில்லை. இந்தப் பின்னணியோடு தமிழகத்தில் மன்னராட்சியில் மக்களாட்சி தத்துவம் செயல்பட்டதையும் - மக்களாட்சி மாண்பினை மன்னராட்சியில் செயல்படுத்தியதையும் கண்டறிவதும்; அறிந்த அதனை எடுத்துச் சொல்வதும் இந்த நேரத்தில், இன்றியமையாத ஒன்று என்பதால் அதனைச் சுட்டிக்காட்ட விரும்புகிறேன்.

மன்னராட்சியில் மக்கள் ஆட்சி என்று குறிப்பிட்டதற்கு இதோ ஒரு சான்று! இப்பொழுதும் கூட சோழர் காலத்துக் கல்வெட்டு ஒன்று உத்திரமேரூரில் கலையாமல் அழியாமல் சிதறாமல் - உடையாமல் அப்படியே இருக்கிறது. தமிழ்நாட்டில் சோழர் காலத்திலேயே, ஊராள்வதற்கான தனித்தனி குழுக்கள் இருந்தன என்பதையும் - அந்தக் குழுக்களின் தலைவர்களாக எத்தகையோர் இருந்தனர் என்பதையும் அவர்கள் எல்லாம் ஊர் பொது மண்டபத்தில் குடவோலைச் சீட்டின் மூலமாகத் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் என்பதையும் அந்தக் கல்வெட்டு பறைசாற்றிக் கொண்டிருக்கின்றது.

மன்னராட்சியில் இருந்தாலும் - மக்களாட்சியின் மாண்பினைப் போற்றியவர்கள் அதனை வரவேற்று வழிவழியாக கடைப்பிடித்தவர்கள் தமிழர்கள் என்பதற்கு இது அசைக்க முடியாத சான்றல்லவா?

இன்று உலகம் அடைந்துள்ள பல்வேறு மாறுதல்களில், சிறிய நாடுகளாயினும் - பெரிய நாடுகளாயினும் அவற்றை நிர்வகிப்பதற்கு மக்களால் தேர்ந்தெடுக்கப்படும் குழுவினர் பொறுப்பேற்கிறார்கள். தேர்தலிலே வென்றிடாதவர்கள் எதிர் வரிசையிலேயிருந்து - அரசாளும் குழுவிற்கு ஆலோசனைகள் கூறுகின்றவர்களாகவும் - தவறுகள் நேருமிடத்து தட்டிக் கேட்பதற்கான தகுதி உடையவர்களாகவும் விளங்குகிறார்கள். இதற்கு நாம் வைத்திருக்கும் பெயர் தான் ஜனநாயகம்.

மக்களாட்சியின் மாண்பினை உணர்த்தும் ஒரு சொல் இது. அந்த மாண்பினை இந்தியத் திருநாட்டிலும், அதற்கு உட்பட்ட பல்வேறு மாநிலங்களிலும் நாடு சுதந்திரமடைந்த பிறகு மறவாமல் கடைப்பிடித்து வருகிறோம்.

குறிப்பாகவும் - சிறப்பாகவும் தமிழகத்தில் ஜனநாயகக் காவலர்களாகத் திகழ்ந்த காமராஜர், அண்ணா ஆகியோர் வழியில் மக்களாட்சியின் மாண்புக்கு ஒளி கூட்டுவதற்கு நாம் என்றைக்குமே தவறியதில்லை. ஜனநாயக முறையில் அங்கொன்றும் இங்கொன்றுமாக கீறல்கள் ஏற்படுவதுண்டு. அது தங்கத் தட்டில் விழுந்த கீறல் போல உருக்கி மீண்டும் ஒன்றாக்கிடக் கூடியது.

சர்வாதிகாரத்தில் விழும் கீறல்கள் - பானையையே உடைக்கக் கூடியது. இதனை உணர்ந்துள்ள காரணத்தினால்தான், அரசு முறைகளில் எந்த முறை சிறந்தது என்று எண்ணிப் பார்த்து இதுதான் அனைத்தையும் விடச் சிறந்தது என்று நாம் இந்த முறையை கருதாவிட்டாலும், இருக்கின்ற முறைகளிலே இந்த முறை ஒன்று தான் ஏற்கத்தக்கதாக இருப்பதால் அதனையேற்று, அந்த ஜனநாயக முறையின்படி நடந்திட அணிவகுத்திருக்கிறோம்.

இந்த முறையில் போட்டியிடுவோர்களுக்கிடையே குற்றம் குறைகள் இருக்கலாம். ஆனால் அவற்றைச் சுட்டிக்காட்டிட குற்றம் குறைகளைப் போக்கிட வேண்டிய பொறுப்பிலே இருப்பவர்கள் போட்டியை நடத்துபவர்களாக இருக்கிறார்கள் என்பதால் அவர்கள் வாய்மைக்கு முதல் இடம் கொடுப்பவர்களாக இருக்க வேண்டும்.

எடுத்துக்காட்டாக தமிழகத்தில் பென்னாகரத்தில் நடைபெற வேண்டிய இடைத்தேர்தலை வாதத்திற்காக எடுத்துக் கொள்வோம். தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டு - வேட்பு மனு தாக்கல் செய்யலாம் என்றழைக்கப்பட்டு - வேட்பு மனுக்களைத் தாக்கல் செய்த பிறகு - அந்தத் தேர்தலில் போட்டியிடவே முன்வராத ஏழெட்டு கட்சிகளின் கோரிக்கையையேற்று - மாநில, மாவட்ட, வட்ட மற்றும் தொகுதியிலே உள்ள அதிகாரிகள் அனைவரும் பரிசீலித்து வழங்கிய வாக்காளர் பட்டியலில் திடுமென பல்லாயிரவர் குறைந்து விட்டனர் என்ற ஒரு புகார் மனுவைப் பெற்று - அது உண்மையா, பொய்யா என்பதைப் பற்றிக் கூட எந்த அதிகாரிகளிடமும் கலந்தாலோசிக்காமல் - இரண்டாவது முறையாக இடைத் தேர்தல் தள்ளிவைக்கப் பட்டுவிட்டது. அதாவது - ஜனநாயகத்தின் கால் முடக்கப்பட்டு விட்டது!

இதுபற்றி நான் சொல்வதை விட - இந்த இடைத்தேர்தலில் போட்டியிட முன்வந்துள்ள பா.ம.க. என்ன சொல்கிறது என்று பார்க்க வேண்டும். அந்தக் கட்சி நான் முதலில் சொன்ன - தேர்தலில் போட்டியிடாத கட்சிகளின் பட்டியலில் உள்ள கட்சியல்ல! பட்டவர்த்தனமாக அந்தக் கட்சியின் சார்பில், அந்தக் கட்சியின் நிறுவனத் தலைவர் டாக்டர் விடுத்துள்ள அறிக்கையே என் கூற்றுக்கு தக்கச் சான்றாக அமைந்திருக்கின்றது. இதோ அது:-

- பென்னாகரம் இடைத்தேர்தல் முதலில் ஜனவரி மாதத்தில் தள்ளி வைக்கப்பட்டதும், இப்போது பிப்ரவரி மாதத்தில் மீண்டும் தள்ளிப்போடப்படும் நிலைமை ஏற்படுத்தப்பட்டிருப்பதையும் பார்க்கும்போது இந்தியத் தேர்தல் ஆணையம் நடுநிலையாக நடந்து கொள்கிறதா? என்கிற பெரும் சந்தேகம் ஏற்பட்டிருக்கிறது.

- பென்னாகரம் இடைத்தேர்தல் ஜனவரி 20-ம் தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டபோது - சில நாட்கள் தள்ளி வைக்க வேண்டுமென்று பா.ம.க. கோரிக்கை வைத்தபோது நிராகரித்த தேர்தல் ஆணையம், மறுநாள் அ.தி.மு.க. பொதுச் செயலாளர் ஜெயலலிதா பென்னாகரம் இடைத்தேர்தலை தள்ளிவைக்க வேண்டுமென்று அறிக்கை விட்டதும், அனைத்துக் கட்சிக் கூட்டம் என்று ஒரு நாடகத்தை அரங்கேற்றி, ஜெயாவின் மனம் குளிரும்படி இடைத்தேர்தலை தேர்தல் ஆணையம் தள்ளி வைத்தது.

- இடைத் தேர்தலைச் சந்திப்பது என்ற தீர்க்கமான முடிவுடன் பா.ம.க. தேர்தல் களத்தில் இறங்கியது. வேட்பாளரை அறிவித்து முழுமூச்சுடன் தேர்தல் பணியாற்றியது. ஆளும் தி.மு.க.வும் வேட்பாளரை அறிவித்து தேர்தல் பணியில் ஈடுபட்டது. ஆனால் அ.தி.மு.க. மட்டும் பென்னாகரத்தில் ஒரு இடைத் தேர்தல் நடைபெறுகிறது என்ற எண்ணம் சிறிது கூட இல்லாமல் சோம்பிக் கிடந்தது. அந்தக் கட்சி இப்படி சோம்பிக் கிடந்ததின் ரகசியம் இப்போது தான் புரிகிறது.

- சென்னையில் தலைமை தேர்தல் அதிகாரி இருக்கிறார். அவருக்கு மேலே டெல்லியில் தலைமை தேர்தல் ஆணையர் நவீன் சாவ்லா இருக்கிறார். இந்த இருவரும் நமக்கு உதவி செய்வார்கள், இடைத் தேர்தலை இன்னும் சில மாதங்களுக்குத் தள்ளிப்போட நமக்கு உதவுவார்கள் என்ற எண்ணத்துடன் இருந்த அ.தி.மு.க. தலைமை தனது ஆதரவு கட்சிகளைத் தூண்டிவிட்டு வாக்காளர் பட்டியலில் முறைகேடு என்று குற்றம்சாட்டி, இடைத்தேர்தலை தள்ளிவைக்க முறையீடு செய்தது.

- பா.ம.க. மனு கொடுத்த போது அதில் எந்தவித நடவடிக்கையும் எடுக்காத தேர்தல் ஆணையம், ஜெயலலிதாவின் ஆதரவு கட்சிகள் மனு கொடுத்த அடுத்த சில மணி நேரத்தில் வாக்காளர் பட்டியலின் முறைகேடுகள் குறித்து விசாரணை நடத்தப்படும் என்று அறிவித்து, இதன் மூலம் பென்னாகரம் இடைத்தேர்தலை தள்ளிவைக்க வேண்டும் என்ற ஜெயலலிதாவின் சூழ்ச்சிக்கு தேர்தல் ஆணையம் துணை போயிருக்கிறது.

- தேர்தல் ஆணையத்தின் வைர விழாவிற்கு தனி அக்கறையுடன் ஜெயலலிதாவை அழைத்து - விழா மண்டபம் அருகே உள்ள தனி அறையில் காங்கிரஸ் கட்சியின் தலைவர் சோனியா காந்தி அங்கு வரும் வரையில் திட்டமிட்டு உட்கார வைத்து இருவரையும் நவீன் சாவ்லா சந்திக்க வைத்தார் என்று ஏற்கெனவே வெளியான செய்தியையும், பென்னாகரம் இடைத்தேர்தலில் இரண்டு முறை ஜெயலலிதாவின் விருப்பத்தை நிறைவேற்றி வைத்த நடவடிக்கைகளையும் பார்க்கும்போது தேர்தல் ஆணையம் அனைத்துக் கட்சிகளையும் ஒன்றாக மதித்து செயல்படுகின்ற நடுநிலையிலிருந்து தவறியிருக்கிறது என்ற குற்றச்சாற்றிலிருந்து தப்பிக்க முடியாது. தேர்தல் ஆணையத்தின் இந்த ஒரு சார்பு நிலை மிகவும் கண்டிக்கத்தக்கது.

இவை அனைத்தும் டாக்டரின் அறிக்கையில் காணப்படும் சாராம்சங்கள். இதற்குப் பிறகு - இதைப் படித்தவர்கள் நான் ஜனநாயகத்தைப் பற்றி முதலில் குறிப்பிட்டுள்ள கருத்துக்களை ஒப்பிட்டுப் பார்த்து உண்மையை அறிவார்கள் என்றே நம்புகின்றேன். ஜனநாயகத்தை வாய்மையுடன் காப்பாற்ற வேண்டியவர்களே; டாக்டர் ராமதாஸ் கூறுவதைப் போல - ஒருதலைப்பட்சமாக காரியமாற்றுவார்களேயானால்; வேலியே பயிரை மேய்வதா?'' என்று வேதனையுடன்தானே கேட்கத் தோன்றுகிறது என்று கூறியுள்ளார் கருணாநிதி.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+