பெட்ரோல்-ரூ.3 , டீசல்-ரூ.2, சிலிண்டர்-ரூ.50 விலை உயர்கிறது

பெட்ரோல் டீசல் உள்ளிட்ட எரிபொருட்களின் விலை நிர்ணயம் குறித்து கிரித் பாரிக் கமிட்டி அளித்த அறிக்கையை மத்திய அரசு தீவிரமாக பரிசீலித்து வருகிறது.
அடுத்த சில நாட்களில் அமைச்சரவையில் விவாதித்து முடிவெடுக்க வேண்டிய இக்கமிட்டியின் பிரிந்துரைகள் குறித்து பெட்ரோலிய அமைச்சகம் ஆய்வு செய்து வருகிறது.
இதைத்தொடர்ந்து கிரித் பாரிக் கமிட்டி அறிக்கையை பெட்ரோலிய அமைச்சகம், மத்திய அமைச்சரவையின் முன் வைக்கும்.
இந்த வாரத்திலேயே தாமதமின்றி அறிக்கையை அமைச்சரவையின் முன் சமர்ப்பித்து விடுவோம் என பெட்ரோலியத் துறை செயலாளர் சுந்தரேசன் தெரிவித்துள்ளார்.
விலை உயர்வு பற்றிய இக்கமிட்டியின் பரிந்துரைகளை மத்திய அரசு அப்படியே ஏற்றுக்கொள்ளுமா என்பது குறித்து அரசு வட்டாரங்களிலேயே பல்வேறு தகவல்கள் நிலவுகின்றன.
விலைவாசி உயர்வை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ள நேரத்தில் ஏழை மற்றும் நடுத்தர மக்களை பாதிக்கக்கூடிய வகையில் சமையல் எரிவாயு மற்றும் மண்எண்ணை விலையை உயர்த்த காங்கிரஸ் விரும்பவில்லை எனக் கூறப்படுகிறது.
கிரித் பாரிக் பரிந்துரைப்படி சமையல் எரிவாயு சிலிண்டருக்கு ரூ.100ம், மண்எண்ணை லிட்டருக்கு 6ம் உயர்த்தினால், சாதாரண மக்களை பாதிக்கும் நடவடிக்கையாக அது அமையும் என கருதப்படுகிறது.
ஆனால், பெட்ரோல் டீசல் விலை உயர்வு மட்டும் தவிர்க்கமுடியாதாக இருக்கும் என மத்திய அரசு வட்டாரங்கள் கூறுகின்றன.
பெட்ரோல் விலையை லிட்டருக்கு ரூ.3ம், டீசல் விலையை லிட்டருக்கு ரூ.2ம் உயர்த்த பெட்ரோலிய அமைச்சகம் முடிவு செய்துள்ளதாக தெரிகிறது.
சமையல் எரிவாயு விலையை சிலிண்டருக்கு ரூ.100க்கு பதில் 50 ரூபாய் உயர்த்தலாம் என பெட்ரோலிய அமைச்சகம் தரப்பில் வழங்கப்பட்ட ஆலோசனையை பிரதமர் மன்மோகனும் ஏற்றுக்கொண்டதாக தகவல்கள் வெளியாகின்றன.
எனினும் இதுகுறித்த இறுதி முடிவு அமைச்சரவைக் கூட்டத்தில் தான் மேற்கொள்ளப்பட்டு அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும்.
இந்தியன் ஆயில் கார்ப்பொரேஷன், பாரத் பெட்ரோலியம், இந்துஸ்தான் பெட்ரோலியம் ஆகிய நிறுவனங்கள், பெட்ரோல் டீசல் மற்றும் மண்எண்ணை விற்பனையில் தற்போது நாளொன்றுக்கு ரூ.180 கோடி நஷ்டத்தை சந்தித்து வருகிறது.
நடப்பு நிதியாண்டில் முழுவதும் இந்த பொதுத்துறை நிறுவனங்கள் மொத்தமாக சுமார் ரூ.46 ஆயிரத்து 30 கோடி இழப்பை எதிர்கொண்டுள்ளது.
இந்த சுமையை வாடிக்கையாளர்களின் தலையில் கட்டாத வகையில் புதிய நிவாரண திட்டங்கள் எதையேனும் வகுக்க முடியுமா எனவும் மத்திய அரசு சிந்தித்து வருகிறது.












Click it and Unblock the Notifications