அணுசக்தி ஒத்துழைப்பு பிரகடனம்: இந்தியா-பிரிட்டன் கையெழுத்து
டெல்லி: அணுசக்தி தொடர்பான ஒத்துழைப்பு கூட்டு பிரகடனத்தில் இந்தியாவும் பிரிட்டனும் கையெழுத்திட்டுள்ளன.
இந்திய அணுசக்தி ஆணையத்தின் தலைவர் ஸ்ரீகுமார் பானர்ஜி மற்றும் இந்தியாவுக்கான பிரிட்டிஷ் தூதர் சர் ரிச்சர்ட் ஸ்டேக் ஆகியோர் இந்த பிரகடனத்தில் கையெழுத்திட்டனர்.
இந்தியாவில் அணுசக்தி வர்த்தகம் மற்றும் அறிவியல் தொழில்நுட்ப நிலையங்கள் ஆகியவற்றில் பிரிட்டன் காலூன்ற இந்த ஒப்பந்தம் வகை செய்யும்.
இதன் மூலம் இந்தியாவில் அணு உலைகளுக்குத் தேவையான எந்திரங்கள் மற்றும் கருவிகளை பிரிட்டிஷ் நிறுவனங்களிடம் இருந்து நம்மால் இறக்குமதி செய்ய முடியும்.
இந்த ஒப்பந்தத்தில் உள்ள சில முக்கிய அம்சங்கள் குறித்து விவாதிப்பதற்காக பிரிட்டன் அமைச்சர் பாட் மெக்ஃபாடன் இந்த வார இறுதியில் டெல்லி வருகிறார். அப்போது அணு உலைகளுக்கு தேவையான எரிபொருள்களை சப்ளை செய்வது உள்ளிட்ட பிரச்சனைகளுக்குத் தீர்வு காணப்படும் என்று தெரிகிறது.
இதையடுத்து அமெரிக்காவுடன செய்து கொண்டதைப் போல பிரிட்டனுடன் இந்தியா, அணு சக்தி ஒப்பந்தத்தில் கையெழுத்திடவுள்ளது.
இந்தியாவுக்கு விதிக்கப்பட்டிருந்த சர்வதேச அணுசக்தி வர்த்தகத் தடை கடந்த 2008ல் நீக்கப்பட்டதைத் தொடர்ந்து அணுசக்தி ஒத்துழைப்பில் இந்தியாவுடன் கையெழுத்திடும் 8வது நாடு பிரிட்டன் ஆகும்.
இதற்கு முன் அமெரிக்கா, பிரான்ஸ், ரஷ்யா, கஜாகிஸ்தான், மங்கோலியா, அர்ஜெண்டினா மற்றும் நமீபியா ஆகிய நாடுகள் அணுசக்தி பாதுகாப்பு ஒத்துழைப்பு தொடர்பாக இந்தியாவுடன் கையெழுத்திட்டுள்ளன.
கனடாவுடன் அணுசக்தி ஒத்துழைப்பு ஒப்பந்தத்தில் கையெழுத்திடுவது தொடர்பாக இந்தியா நடத்தி வரும் பேச்சுவார்த்தை இறுதிக் கட்டத்தை அடைந்துள்ளதும் குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications