நாளை காதலர் தினம்- முன்னெச்சரிக்கையாக 2000 போலீஸார் குவிப்பு
சென்னை: நாளை காதலர் தினம் கொண்டாடப்படுகிறது. இதையொட்டி முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 2000 போலீஸார் சென்னையின் முக்கிய இடங்களில் குவிக்கப்பட்டுள்ளனர்.
பிப்ரவரி 14ம் தேதி உலகெங்கும் காதலர் தினமாக கொண்டாடப்படுகிறது. இந்த காதலர் தினம் இந்தியாவிலும் சமீப காலமாக விசேஷமாக கொண்டாடப்படுகிறது.
ஆனால் இந்தக் கொண்டாட்டத்திற்கு சிவசேனா, விஎச்பி உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்து போராட்டங்களில் ஈடுபடுகின்றன.
இந்த நிலையில் நாளை வரும் காதலர் தினத்தையொட்டி சென்னையிலும் தமிழகத்தின் இதர முக்கிய நகரங்களிலும் உரிய போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
சென்னை மெரீனா கடற்கரை, சாந்தோம் கடற்கரை, எலியட்ஸ் கடற்கரை, அண்ணாநகர் டவர் பூங்கா, திரு.வி.க. பூங்கா உள்ளிட்ட பல்வேறு இடங்களில் காதலர்கள் பெருமளவில் திரளுவர்.
பொக்கே தருதல், வாழ்த்து அட்டைகளைப் பரிமாறிக் கொள்வது, பரிசு தருவது என விதம் விதமான அன்புப் பரிமாறல்கள் இடம் பெறும்.
அதேசமயம், சில வரம்பு மீறல்களும் நடப்பதுண்டு. இத்தகைய அசம்பாவித சம்பவங்கள் ஏற்படாமல் தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக காதலர்கள் அதிக அளவில் ஒன்று கூடும் பூங்காக்கள், கடற்கரைகள், வணிக வளாகங்கள் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் சென்னை முழுவதும் இரண்டாயிரம் போலீசார் பாதுகாப்பு பணிகளில் ஈடுபடுத்தப் பட்டு உள்ளனர்.
கமிஷனர் ராஜேந்திரன் உத்தரவின் பேரில் தீவிர பாதுகாப்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ள போலீசார் வரம்பு மீறும் காதலர்களை எச்சரித்து அனுப்பும் பணியில் ஈடுபடுவார்கள். அத்துடன் காதலர் தினத்தை பயன்படுத்தி விஷமச் செயல் மற்றும் சமூக விரோத செயல்களில் ஈடுபடுவோர் மீது இவர்கள் கடும் நடவடிக்கையும் எடுப்பார்கள்.
இதற்கிடையே, காதலர் தினவிழா கொண்டாட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து மெரீனா கடற்கரையில் இன்று ஆர்ப்பாட்டம் நடத்திய இந்து மக்கள் கட்சியைச் சேர்ந்த 14 பேர் கைது செய்யப்பட்டனர்.
இந்து மக்கள் கட்சியின் சார்பில் மெரினா கடற்கரையில் கண்ணகி சிலை முன்பு இன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதற்கு அக்கட்சியின் மாநில தலைவர் குமார் தலைமை தாங்கினார். இந்த ஆர்ப்பாட்டத்தில் 14 பேர் கலந்து கொண்டனர். அப்போது அவர்கள் காதலர் தினத்துக்கு எதிராக கோஷங்களை எழுப்பினார்கள். காதலர் தினம் என்ற பெயரில் களியாட்டங்கள் நடத்த அனுமதிக்கக்கூடாது என்று அவர்கள் வலியுறுத்தினார்கள்.
இதனையடுத்து, ஆர்ப்பாட்டம் நடத்திய 14 இந்து மக்கள் கட்சியினரையும் அண்ணாசதுக்கம் போலீசார் கைது செய்தனர்.












Click it and Unblock the Notifications