தமிழகத்தில் அனிமேஷன் துறை மிகப் பெரும் வளர்ச்சி பெறும்- கருணாநிதி

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழகத்தில் அனிமேஷன் துறையில் மிகப் பெரிய முன்னேற்றம் ஏற்படும் என்று முதல்வர் கருணாநிதி கூறியுள்ளார்.

உலகத்தமிழ் செம்மொழி மாநாட்டையொட்டி பள்ளி மாணவ, மாணவியருக்கு நடத்தப்படும் கம்ப்யூட்டர் அனிமேஷன் போட்டிகளை, முதல்வர் கருணாநிதி நேற்று தொடங்கி வைத்தார்.

கோவையில் உலகத்தமிழ்ச் செம்மொழி மாநாடு நடைபெறுகையில், உலகத் தமிழ் இணைய மாநாடும் நடைபெறுகிறது. அதையொட்டி, பள்ளி மாணவ, மாணவிகளுக்கு கம்ப்யூட்டர் மூலம் அனிமேஷன் போட்டி நடத்தப்படுகிறது.

இந்த போட்டிகள், தமிழகம் முழுவதும் நடத்தப்படுகிறது. முதல்கட்டமாக கோவையில் 1050 பள்ளிக் கூட மாணவ, மாணவிகளுக்கு இப்போட்டிகள் நேற்று நடத்தப்பட்டன. அதனை, முதல்வர் கருணாநிதி, சென்னை தலைமைச் செயலகத்தில் இருந்து வீடியோ கான்பரன்சிங் மூலமாக தொடங்கி வைத்தார்.

அப்போது கருணாநிதி பேசியதாவது..

கோவை மாநகரில் வரும் ஜுன் மாதம் 23-ந் தேதி முதல் 27-ந் தேதி வரை நடைபெறவிருக்கும் உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டோடு இணைந்து, "உலகத் தமிழ் இணைய மாநாடும்'' நடைபெறவிருக்கிறது. இந்த மாநாட்டையொட்டி, பள்ளி மாணவ, மாணவியரின் தகவல் தொழில்நுட்ப அறிவாற்றலை ஊக்கி வளர்த்திடும் ஒரு திட்டமாக மாநிலம் தழுவி நடத்தப்படும், "அனிமேஷன்'' எனப்படும் "அசைநிலை வரைகலை'' போட்டியைக் காணொலிக் காட்சி வாயிலாகத் தொடங்கி வைப்பதில் மட்டிலா மகிழ்ச்சி அடைகிறேன்.

உலகை ஒரு குக்கிராமமாகச் சுருக்கியுள்ள ஆற்றல் வாய்ந்த தகவல் தொழில்நுட்பத்தினை தமிழகத்தில் வளர்த்திட, 1997-ம் ஆண்டில் தகவல் தொழில்நுட்பத் தொழிற்கொள்கையை இந்தியாவின் இதர மாநிலங்களுக்கெல்லாம் முன்னோடியாக முதன்முதலிலே உருவாக்கிய மாநிலம் நமது தமிழகம்தான்.

கல்லூரிகளில் மட்டுமல்லாமல் பள்ளிகளில் பயிலும் மாணவ மாணவியர்க்கும் தகவல் தொழில்நுட்பக் கல்வியை வழங்கும் நோக்கில் 1999-ம் ஆண்டில் தமிழகத்தில் அனைத்து மேல்நிலைப் பள்ளிகளிலும் கணினி மையங்கள் அமைக்கப்பட்டு, கணினி அறிவியல் கல்வி கற்பிக்கப்பட்டது.

தமிழக அரசின்கீழ் செயல்படும் துறைகள் அனைத்தையும் கணினிமயமாக்கவும், பள்ளிக் கல்வியில் தகவல் தொழில்நுட்பத்தை இணைக்கவும், தமிழ் மென்பொருளை உருவாக்கிப் பரப்பவும் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. 1999-ம் ஆண்டு பிப்ரவரி 7,8 ஆகிய நாள்களில், அந்நாளைய மத்திய மந்திரியாக திகழ்ந்த முரசொலி மாறனின் ஆலோசனைகளின்படி சென்னையில் தமிழ்நெட் 1999' என்னும், "உலகத் தமிழ் இணைய கருத்தரங்க மாநாடு'' நடத்தப்பட்டு; அம்மாநாட்டில் மேற்கொண்ட முடிவுகளின்படி, கணினியில் தமிழ் இடம் பெறுவதற்கான தமிழ் விசைப் பலகையும், தமிழ்க் குறியீடுகளும் தரப்படுத்தப்பட்டு அறிவிக்கப் பட்டதோடு தொடர்ந்து பல பணிகள் மேற்கொள்ளப்பட்டன.

தகவல் தொழில்நுட்பவியல் மற்றும் மின்னணு ஆளுமை ஆகியவை தொடர்பாக முதல்-அமைச்சரின் ஆலோசகராகத் திகழ்ந்த அண்ணா பல்கலைக் கழகத்தின் முன்னாள் துணைவேந்தர் மு.ஆனந்தகிருஷ்ணன் தலைமையிலான குழு வழங்கிய பரிந்துரைகளின்படி அரசுத் துறைகளை கணினி மயமாக்குதல், பள்ளிக் கல்வியில் தகவல் தொழில்நுட்பத்தை இணைத்தல், தமிழ் மென்பொருளை உருவாக்கிப் பரப்புதல் போன்ற பல்வேறு நடவடிக்கைகளுக்கு ஊக்கம் அளிக்கப்பட்டு ஆக்கபூர்வமான பல பணிகள் நடைபெற்றுள்ளன.

உலகமெங்கும் வாழும் தமிழ் மக்கள் பயன்பெறும் வண்ணம், அண்ணா பல்கலைக் கழகத்தின் முன்னாள் துணைவேந்தர் வா.செ. குழந்தைசாமியை தலைவராகக் கொண்டு "உலகத் தமிழ் இணையப் பல்கலைக்கழகம்'' தமிழகத்திலே நிறுவப்பட்டு, கணினி மூலம் தமிழ் வளர்ச்சிபெற வழிவகுக்கப்பட்டது. இந்தியாவில் எந்த மாநிலத்திலும் இல்லாத வகையில், சென்னை தரமணியில் 340 கோடி ரூபாய் மதிப்பீட்டில், "டைடல் மென்பொருள் பூங்கா'' அமைக்கப்பட்டு 4.7.2000-ல் திறந்து வைக்கப்பட்டது.

தமிழக அரசின் இத்தகைய பல்வேறு நடவடிக்கைகளின் பயனாக, தமிழகத்தில் இருந்து அயல் நாடுகளுக்கு ஏற்றுமதியான மென்பொருள்களின் 2005-2006-ல் 14 ஆயிரத்து 400 கோடி ரூபாய் என்பது, 2008-2009-ல் 36 ஆயிரத்து 680 கோடியே 40 லட்ச ரூபாய் அளவுக்கு உயர்ந்து மகத்தான வரலாறு படைக்கப்பட்டுள்ளது.

இந்தநிலையில், தமிழகத்தில் உள்ள பள்ளி மாணவ, மாணவியர்கள் எல்லோரும் கணினி கலையில் - தகவல் தொழில்நுட்பத்தில் மேலும்மேலும் சிறந்த அறிவாற்றல் உள்ளவர்களாக வளர வேண்டும்; அதற்குரிய வழிவகைகள் உருவாக்கப்பட வேண்டும் என்னும் உணர்வோடு கோவையில் நடைபெறவிருக்கும் உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டோடு இணைந்து உலகத் தமிழ் இணைய மாநாடு நடத்தப்படும் வேளையில், அம்மாநாட்டுப் பணிகளில் ஒன்றாக, இன்று நடைபெறும் "அனிமேஷன்'' எனப்படும், "அசைநிலை வரைகலைப் போட்டி'' எதிர்காலத்தில் தமிழகத்தில் அனிமேஷன் துறையில் மிகப் பெரிய முன்னேற்றத்தை உருவாக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்தியாவிலேயே முதன்முறையாகப் பள்ளி மாணவ, மாணவியச் செல்வங்களிடம் வரைகலை ஆற்றலை - அசைகலை வரைகலை ஆற்றலைத் தூண்டி வளர்ப்பதற்காக நடத்தப்படும் இப்போட்டியில், தமிழகம் முழுவதிலும் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பள்ளி மாணவ மாணவியர் இணைய தளத்தின் வாயிலாகப் பதிவு செய்துகொண்டு, கலந்துகொள்கிறார்கள் என்பதை அறிந்து நான் மெத்தவும் மகிழ்ச்சி அடைகிறேன்; பெருமிதம் கொள்கிறேன்; அவர்கள் அனைவரையும் பாராட்டுகிறேன்.

இப்போட்டிகளில் வெற்றிபெறும் மாணவ மாணவியர்க்கு உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டில் பரிசுகள் வழங்கப்படவுள்ளன. காலத்தால் மிகவும் தொன்மையான நம் செம்மொழியாம் அருமைத் தமிழ் மொழி கால நிலைகளுக்கேற்ப வளரும் ஆற்றல் கொண்டது. அது இக்காலத்திற்கேற்ப கணினிச் சோலையில் மலரும் கண்கவர் மலராகவும் மணம் பரப்புகின்றது.

இத்தகைய சிறப்புகள் மிகுந்த நம் அன்னைத் தமிழ்மொழியின் இலக்கியங்கள் அனைத்தையும் அனிமேஷன் முறையிலே இசையோடு இழைத்துத் தருவது எதிர்காலத் தலைமுறையினருக்கு நாம் வழங்கும் தலைசிறந்த கலை இலக்கிய அறிவுப் புதையலாகும்.

அருமைத் தமிழ் மாணவ, மாணவியச் செல்வங்களே! உங்கள் கற்பனை ஆற்றலும் படைப்புத் திறனும் மென்மேலும் பெருகி வளர வேண்டும்! அறிவியல்-தொழில்நுட்பத் திறனோடு தாய்மொழித் தமிழைச் செம்மையாகக் கையாளும் திறனும் உங்களிடையே செழித்து வளம்பல பெற்று நீங்கள் அனைவரும் வாழ்வில் உயர்ந்திட வேண்டும் எனும் விழைவோடு, இந்த அருமையான போட்டியில் வெற்றிகளைக் குவித்திட உங்களையெல்லாம் வாழ்த்துகிறேன் என்றார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+