எதிர்காலம் திமுக- காங் கூட்டணிக்குத்தான், அதிமுகவுக்கு அல்ல: தங்கபாலு

இதுகுறித்து அவர் விடுத்துள்ள அறிக்கை:
தமிழகத்தில் காங்கிரஸ்- திமுக கூட்டணி உறவை பிரிக்க பல்வேறு நிலைகளில் சூழ்ச்சி உருவாக்கப்பட்டு வருகிறது. அதன் ஒரு அங்கமாக இன்று ஒரு ஆங்கில நாளிதழில் ஒரு கட்டுரை வெளியிடப்பட்டுள்ளது.
அதில் என்னுடைய அறிக்கையை முழுமையாக தெரிவிக்காமலும், காங்கிரசிலுள்ள மற்ற தலைவர்கள் சிலரின் கருத்து என்று குறிப்பிட்டும் உண்மைக்கு மாறான செய்திகளை அக்கட்டுரை வெளியிட்டுள்ளது. ஏதோ சில எதிர் பார்ப்புகளையும், நிகழ்வுகளையும் கருத்தில் கொண்டு உள்நோக்கத்தோடு கட்டுரை எழுதப்பட்டுள்ளது.
ஆனால் தமிழகத்தில் காங்கிரஸ்-திமுக கூட்டணி 2004 ஆம் ஆண்டு தொடங்கி, அது இன்றும், அதைத் தொடர்ந்து நாளையும் ஒருவருக்கொருவர் நல்லுறவோடு - புரிதலோடு தொடர்கிறது, தொடரும் என்பதுதான் உண்மை.
அகில இந்திய அளவில் சோனியா காந்தியோடு தமிழக முதல்வர் கருணாநிதியும், தமிழக அளவில் முதல்வரோடு, தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் என்ற முறையில் நானும் ஒருமித்த கருத்தோடு உள்ளன்போடு ஒன்றுபட்டு காங்கிரஸ்-திமுக. மிகச் சிறந்த கூட்டணியாக செயல்பட்டு வருகிறது.
நிகரற்ற தலைவி சோனியா காந்தி வழிகாட்டுதலில், பண்பட்ட சிறந்த அரசியல் தலைவர் பிரதமர் மன்மோகன் சிங் தலைமையில் அமைந்துள்ள மத்திய அரசு ஆற்றிவரும் மகத்தான சாதனை ஒரு பக்கம்- தமிழகத்தில் 5-வது முறை முதல்வராகப் பொறுப்பேற்று முதல்வர் கருணாநிதியின் சிறப்பான மக்கள் நலத் திட்டங்களின் செயல்பாடுகள் ஒரு பக்கம் என்று சாதனைகளை உருவாக்கி வரும் நல்ல வெற்றிக் கூட்டணி காங்கிரஸ்-திமுக கூட்டணி.
எனவேதான் மக்கள் நம்பிக்கை பெற்று இக்கூட்டணி இந்தியா முழுவதும் காங்கிரசுக்கும், தமிழகத்தில் திமுகவுக்குமான வாக்கு வங்கி உயர்ந்து கொண்டே வருகிறது என்பது யதார்த்த உண்மை. குறிப்பாக காங்கிரஸ் கட்சியின் வாக்கு வங்கி மேலும் நாடெங்கும் உயர்ந்து வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்க செய்தியாக உள்ளது.
இந்த யதார்த்த உண்மை நிலையை முன் வைக்க விரும்பாத சில ஏடுகள் தமிழகத்தில் முதல்வர் கருணாநிதிக்கு பிறகு ஒரு தூரல் வரும், அதில் காங்கிரஸ்-திமுகவின் வாக்கு வங்கி குறையும் என்று தவறான கருத்தை அக்கட்டுரை வெளியிட்டுள்ளது.
தமிழக முதல்வர் கருணாநிதி நீண்ட நெடிய அரசியல் அனுபவமிக்க சிறந்த சக்தி வாய்ந்த தலைவர். அவர் முதல்வராக நீடிக்க வேண்டும் என்பது திமுக மட்டுமல்ல, தோழமைக் கட்சிகளான காங்கிரஸ் தலைவர்கள், நண்பர்கள் ஏன் தமிழக மக்கள் அனைவரும் விரும்புகிறார்கள்.
சோனியா காந்தி, ராகுல் காந்தி ஆகிய தலைவர்களின் கடுமையான அரசியல் பணிகளால் அகில இந்திய அளவிலும், உன்னதமான தலைவர் கருணாநிதி தலைமையில் தமிழகத்திலும், மக்களின் பேராதரவு பெற்ற கூட்டணி காங்கிரஸ்-திமுக கூட்டணி.
எனவே எதிர்காலம் என்பது காங்கிரஸ்-திமுக, முஸ்லீம் லீக், விடுதலைச் சிறுத்தைகள் ஆகிய கட்சிகளின் மகத்தான கூட்டணிக்கேயன்றி அதிமுக போன்ற மற்ற கட்சிகளுக்கு கிடையாது. மக்களிடையே அவர்களுடைய பிரசாரம் எடுபடாது. இதற்கு மாறாக எழுதப்படும் ஆரூடம் நிச்சயம் பலிக்காது.
கடந்த தேர்தல்களில் வாக்கு வங்கி எமது கூட்டணிக்கு உயர்ந்து கொண்டே வருவது அந்த ஆங்கில நாளிதழ் உட்பட நாடே அறிந்த உண்மை. எனவே மேலும் வலுவும், பலமுமிக்க உறுதியான கூட்டணியாக எங்கள் கூட்டணி உருவாகி வருகிறது.
நல்ல பண்புள்ள- அன்புள்ள தலைமையாக- புரிதல் உள்ள தலைமையாக இந்தியாவிலும், தமிழகத்திலும் விளங்கி, மக்கள் நலப் பணிகளில் ஒற்றுமை, ஒருமைப்பாடு உணர்வோடு இக்கூட்டணி சிறப்பாக நீடிக்கிறது.
எதிர்காலத்திலும் இது தொடரும், இதற்கு இடையூறு செய்திட யார் முயற்சித்தாலும் அவர்கள் தோல்வியைப் பெறுவார்கள் என்பதை மிகத் தெளிவாக தெரிவித்துக் கொள்கிறேன் என்று கூறியுள்ளார் தங்கபாலு.












Click it and Unblock the Notifications