மதுரை-கோவையில் அமையும் ஐ.ஏ.எஸ். பயிற்சி மையங்கள்
சென்னை: மதுரை மற்றும் கோவையில் ஐ.ஏ.எஸ். பயிற்சி மையங்களைத் தொடங்க தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.
ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ் உள்ளிட்ட மத்திய நிர்வாகத்துறை தேர்வுகளுக்கு பயிற்சி அளிக்கு அரசின் பயிற்சி மையம் இப்போது சென்னையில் மட்டுமே செயல்பட்டு வருகிறது.
இந்த மையத்தில் தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியின மாணவர்களுக்கு தங்குமிடம், உணவு உள்ளிட்டவை இலவசமாக அளிக்கப்படுகின்றன. இதர பிரிவு மாணவர்களுக்கு மிகக் குறைந்த கட்டணத்தில் அவை வழங்கப்படுகின்றன.
அண்ணா மேலாண்மை நிறுவனம் நடத்தும் இந்தப் பயிற்சி மையத்தில் இணைந்து படிக்க தமிழகம் முழுவதும் உள்ள மாணவர்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.
இதையடுத்து தமிழகத்தின் முக்கிய நகரங்களில் ஐ.ஏ.எஸ். பயிற்சி மையங்களை அமைக்க தமிழக அரசு முடிவு செய்தது.
முதல் கட்டமாக மதுரை மற்றும் கோவையில் அங்குள்ள பல்கலைக்கழகங்களுடன் இணைந்து பயிற்சி மையங்கள் தொடங்கப்படும் என்று அரசு அறிவித்துள்ளது.
கோவையில் பாரதியார் பல்கலைக்கழகத்துடன் இணைந்தும், மதுரையில் காமராஜர் பல்கலைக்கழகத்துடன் இணைந்தும் இந்தப் பயிற்சி மையங்கள் அமைக்கப்படுகின்றன.
இதற்கான உத்தரவை, பணியாளர் மற்றும் நிர்வாகச் சீர்திருத்தத் துறை நேற்று வெளியிட்டது.
பயிற்சி மையத்துக்கான அடிப்படை கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்த, இந்த பல்கலைக்கழகங்கள் தலா ரூ.10 லட்சம் செலவிடும்.
இந்த மையத்தை நடத்த ஆண்டுதோறும் அரசு ரூ.11.30 லட்சம் வழங்கும்.
முதல் கட்டமாக ஒவ்வொரு பயிற்சி மையத்திலும் தலா 100 மாணவர்கள் சேர்த்துக் கொள்ளப்படுவார்கள். பயிற்சி மையத்தின் தலைவராக சம்பந்தப்பட்ட பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் இருப்பார்.












Click it and Unblock the Notifications