போலீஸ் அதிகாரிகளை மோசடி செய்தது எப்படி?-சாருலதா வாக்குமூலம்

Subscribe to Oneindia Tamil

Charulatha Fake ID
சென்னை: சென்னை போலீஸ் அதிகாரிகளை மோசடி செய்தது, பல லட்சம் பணத்தை பறித்தது, போலி ஐபிஎஸ் அதிகாரியாக நடமாடி அனைவரையும் ஏமாற்றியது எப்படி என்பது குறித்து சாருலதா என்கிற செளதாமணி பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார்.

முன்பு சிவகாசி ஜெயலட்சுமி மதுரை பக்க காவல்துறையினரை மோசடியமாக ஏமாற்றி அனைவரையும் அதிர வைத்தார். ஆனால் சாருலதாவோ தலைநகர் சென்னையிலேயே கை வைத்து விட்டார்.

ஐபிஎஸ் அதிகாரியாக நடத்து தலைநகரை வலம் வந்து பல காவல்துறையினரை ஏமாற்றி பிடிபட்டுள்ள தனது செயல்கள் குறித்து போலீஸாரிடம் அளித்துள்ள வாக்குமூலம்...

அப்பா மேஸ்திரி - அம்மா பூ வியாபாரி

எனது சொந்த ஊர் திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் ஆகும். ஆனால், நான் சென்னை விருகம்பாக்கம் பகுதியில்தான் பிறந்து வளர்ந்தேன். எனது குடும்பம் சாதாரண ஏழை குடும்பம். எனது தந்தை குமார் கட்டிட மேஸ்திரியாக வேலைபார்த்தார். அவர் இப்போது உயிரோடு இல்லை. அம்மா ராணி, கோவில்கள் முன்பு பூ வியாபாரம் செய்வார்.

ஜமுனா என்ற அக்காவும், ஏழுமலை என்ற தம்பியும் உள்ளனர். அக்கா ஜமுனா, நாகராஜன் என்பவரை மணந்து செட்டிலாகி விட்டார். தம்பி ஏழுமலை ஏ.சி. மெக்கானிக்காக உள்ளார். நான் விருகம்பாக்கம் பகுதியில் உள்ள பள்ளியில் பிளஸ்-2 வரை படித்தேன்.

சென்னை ராணிமேரி பெண்கள் கல்லூரியில் பி.ஏ. பட்டப்படிப்பும், எம்.ஏ. பட்டப்படிப்பும் படித்துள்ளேன். தபால் மூலம் எம்.பில். படிப்பும் படித்துள்ளேன். பள்ளியில் படிக்கும்போதும், கல்லூரியில் படிக்கும்போதும் தடகள போட்டிகளில் கலந்து கொண்டு விளையாடி பரிசு பெற்றுள்ளேன். அதன்பிறகு கபடி வீராங்கனையாகவும் புகழ் பெற்றேன்.

கபடியில் சாம்பியன்..

கல்லூரி படிப்பை முடித்த பிறகு கபடி பயிற்சியாளராக இருந்து வந்தேன். அப்போது போலீஸ் அதிகாரிகளோடு எனக்கு பழக்கம் ஏற்பட்டது. இந்த நேரத்தில் தான் மோசடி லீலைகளில் ஈடுபட ஆரம்பித்தேன்.

பலபேர் என்னிடம் வேலை வாங்கித் தரும்படி கூறினார்கள். விழாக்களில் கலந்து கொள்ளும்போதெல்லாம், நீங்கள் ஒரு போலீஸ் அதிகாரி போல இருக்கிறீர்கள் என்று உயர் போலீஸ் அதிகாரிகள் எல்லாம் என்னை புகழ்வார்கள்.

நெருங்கி வந்த ஏசி பழனிச்சாமி

எனவே, ஐ.பி.எஸ். அதிகாரியாக என்னை நானே சித்தரித்துக்கொண்டேன். சென்னை ஆயுதப்படை பிரிவில் பணிபுரியும் உதவி கமிஷனர் பழனிச்சாமி எனது குடும்ப நண்பர் ஆனார். அவரோடு பல நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டதால், நான் பெண் ஐ.பி.எஸ். அதிகாரி என்று சொன்னதை நம்ப ஆரம்பித்தார்கள்.

சென்னையில் உள்ள பல போலீஸ் நிலையங்களுக்கும், தமிழகம் முழுவதும் உள்ள போலீஸ் நிலையங்களுக்கும் நான் சிபாரிசுக்காக டெலிபோன் மூலம் பேசியுள்ளேன். அப்போது வண்டலூர் அருகே உள்ள ஊனமாஞ்சேரியில் இருக்கும் போலீஸ் பயிற்சி அகாடமியில் சூப்பிரண்டாக பணியாற்றுவதாக சொல்லுவேன். இதை உண்மை என்று நம்பி, நான் சொன்ன சிபாரிசுகளை எல்லாம் செய்து கொடுத்தார்கள்.

3 துணை கமிஷனர்கள் உதவினர்...

சென்னையிலும் 3 துணை கமிஷனர்களிடம் நான் போனில் பேசி காரியம் சாதித்துள்ளேன். அவர்களும் என்னை சந்தேகிக்கவில்லை. கடைசியில் ஐ.ஜி. ஒருவரிடம் பேசும்போது தான் சந்தேகப்பட்டு அவர் என்னை விசாரித்தார்.

நான் வைத்திருந்த போர்டு பியஸ்டா காரை மாதம் ரூ.37 ஆயிரம் வாடகை கொடுத்து ரமேஷ் என்ற டிராவல்ஸ் அதிபரிடம் வாங்கினேன். முகப்பேர் கிழக்கு பகுதியில் வசிக்கும் திலீப்குமார் என்பவரை மாதம் ரூ.5 ஆயிரம் சம்பளம் கொடுத்து டிரைவராக வேலைக்கு வைத்துக்கொண்டேன்.

மூர்மார்க்கெட்டில் யூனிபார்ம் வாங்கினேன்..

போலீஸ் சூப்பிரண்டு சீருடைகளை மூர்மார்க்கெட் பகுதியில் உள்ள ஒரு கடையில் விலை கொடுத்து வாங்கினேன்.

போலீஸ் சூப்பிரண்டு சீருடையோடு நான் கமிஷனர் அலுவலகத்துக்கு வந்துள்ளேன். அப்போது யாரும் என்னை சந்தேகத்துடன் பார்க்கவில்லை. வசதியான, உல்லாச வாழ்க்கைக்காக ஐ.பி.எஸ். அதிகாரியாக வலம் வந்து மோசடி செய்துவிட்டேன். இந்த மோசடி வாழ்க்கை தானாகவே என்னை தேடி வந்தது. நானாக தேடிப் போகவில்லை என்று தெரிவித்துள்ளாராம் சாருலதா.

சாருலதாவைப் பிடித்த போலீஸ் அதிகாரிகளுக்கு கமிஷனர் ராஜேந்திரன் பாராட்டு தெரிவித்துள்ளார்.

20 பேரை ஏமாற்றியுள்ளார்...

இதுகுறித்து அவர் கூறுகையில்,

சாருலதா கடந்த 2005-ம் ஆண்டில் இருந்து இந்த மோசடி வேலையில் ஈடுபட்டுள்ளார். இதுவரை சுமார் 20 பேரிடம் ரூ.17.5 லட்சம் ஏமாற்றியதாக தெரிய வந்துள்ளது. ஆனால் 9 பேர்தான் புகார் கொடுத்துள்ளனர். அவரிடம் ஏமாந்தவர்கள் புகார் கொடுக்கலாம்.

சப்-இன்ஸ்பெக்டர் மற்றும் போலீஸ் வேலை வாங்கித் தருவதாக மட்டுமே சாருலதா பண மோசடியில் ஈடுபட்டுள்ளார். ரூ.1 லட்சத்தில் இருந்து ரூ.6 லட்சம் வரை அவர் பணம் வாங்கியுள்ளார்.

அவர் ராணிமேரி கல்லூரியில் எம்.ஏ. படித்திருப்பதாக கூறியுள்ளார். அது உண்மையா என்று விசாரித்து வருகிறோம். அவர் பிளஸ்-2 வரை படித்ததற்கான ஆதாரங்கள் மட்டுமே உள்ளது.

அவரிடமிருந்து ஐ.பி.எஸ். என்று போடப்பட்ட போலீஸ் சீருடையும், ஐ.பி.எஸ். அதிகாரி என்ற போலி அடையாள அட்டையும் கைப்பற்றப்பட்டுள்ளது. அவருடைய போலி அடையாள அட்டையை அவரே தயாரித்துள்ளார். அவருடைய சீருடையில் ஐ.பி.எஸ். என்று எழுதப்பட்டிருந்தாலும், அது சப்-இன்ஸ்பெக்டருக்கான சீருடையாகும்.

உதவி கமிஷனர் பழனிசாமியிடம் எந்த அளவுக்கு பழகினார் என்பதுபற்றி விசாரித்து வருகிறோம். அவர் எந்தெந்த போலீஸ் அதிகாரிகளிடம் பேசினார் என்பது பற்றியெல்லாம் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க உள்ளோம். அவருடைய டிரைவர் திலீப்குமாரும் கைது செய்யப்பட்டுள்ளார்.

அவரோடு பிடிபட்டுள்ள பாஸ்கர் என்பவர் வேலைக்காக பணம் கொடுத்து ஏமாந்தவர் என்பது தெரிய வந்துள்ளது. அவர், தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையத்தின் பெயரில் போலி வேலை நியமன உத்தரவுகள், போலி அழைப்பு கடிதங்கள் எல்லாம் தயாரித்துள்ளார். அவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

செய்யாறு, திருவள்ளூர், திருச்சி ஆகிய இடங்களிலும் அவர் ஏமாற்றியது தெரியவந்துள்ளது. எனது அலுவலகத்துக்குள் அவர் வந்தாரா என்பது பற்றி விசாரிக்க வேண்டும். கண்காணிப்பு கேமராவில் அவர் பதிவாகியுள்ளாரா என்பது பற்றியும் பார்க்க வேண்டும்.

அவரிடம் ஏமாந்த சங்கர் என்பவரை, சாருலதாவோடு பேசவைத்தோம். காந்தி சிலை அருகே வருவதாக முதலில் தெரிவித்திருந்தார். அங்கே அவரை கைது செய்ய திட்டமிட்டிருந்தோம். அங்கே வராமல் வடசென்னை பகுதியில் சுற்றிக்கொண்டிருந்தார். அதன்பிறகு மண்ணடி பகுதிக்கு சங்கரை வர சொன்னார். அங்குதான் சாருலதாவை பிடித்தோம்.

சாருலதாவுக்கு, சவுதாமணி என்ற இன்னொரு பெயரும் உள்ளது. அந்த பெயரில் தான் அவர் அடையாள அட்டை தயாரித்துள்ளார். அவர் சொன்ன தகவல்கள் எல்லாம் உண்மையானதுதானா என்று விசாரணை நடத்தி வருகிறோம்.

அவரிடமிருந்து ரூ.40 ஆயிரம் ரொக்கப்பணம், ஒரு தங்க நெக்லஸ், ஒரு லேப்-டாப் கம்ப்யூட்டர், மற்றும் ஏராளமான போலி கிரெடிட் கார்டுகளையும் கைப்பற்றியுள்ளோம். அவரது வங்கி கணக்கையும் ஆய்வு செய்து வருகிறோம். மோசடி செய்த பணத்தை எவ்வாறு பயன்படுத்தியுள்ளார் என்பது பற்றியும் விசாரணை நடக்கிறது என்றார்.


சாருலதாவிடம் கைப்பற்றப்பட்ட போலி அடையாள அட்டை, போலி சீருடைகள், போலி ஆவணங்கள் போன்றவை கமிஷனர் அலுவலகத்தில் நேற்று காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தன. அவற்றையும் கமிஷனர் ராஜேந்திரன் பார்வையிட்டார்.

அவர் பயன்படுத்திய சொகுசு காரும் கமிஷனர் அலுவலகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. சாருலதாவும், அவருடைய டிரைவர் திலீப்குமாரும் நேற்று மாலை ஜார்ஜ் டவுன் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு நீதிமன்ற காவலில் ஜெயிலுக்கு அனுப்பப்பட்டனர்.

ஏமாந்த நகைக்கடை அதிபர்

சாருலதாவின் மோசடியில் சிக்கியவர்களில் வினோத் என்ற நகைக் கடைக்காரரும் ஒருவர். இவர் விருகம்பாக்கத்தில் ஜோதி ஜூவல்லர்ஸ் என்ற பெயரில் கடை வைத்துள்ளார்.

இவரிடம், சாருலதா வாடிக்கையாளராக இருந்துள்ளார். சூப்பிரண்டு உடையோடு சென்று சாருலதா இவரிடம் அடிக்கடி நகை வாங்கியுள்ளார்.

நகை வாங்க செல்லும்போது, சில போலீஸ் அதிகாரிகளும் சாருலதாவுடன் சென்றுள்ளனர். நகை வாங்கிய பணத்தில் ரூ.1 லட்சத்து 11 ஆயிரம் கொடுக்காமல் சாருலதா ஏமாற்றியுள்ளாராம். இதுகுறித்து வினோத் ஒரு புகார் கொடுத்துள்ளார்.

இதேபோல முன்பு சிவகாசி ஜெயலட்சுமியும் போலீஸ் சீருடையில் போய் நகைக் கடை ஒன்றில் நகை வாங்கி மோசடி செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

கிட்டத்தட்ட சிவகாசி ஜெயலட்சுமியை தனது குரு போல நினைத்து சாருலதாவும் செயல்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+