கர்நாடகத்தில் ராம் சேனா பந்த்-முத்தாலிக்குக்கு சாமி ஆதரவு

கடந்த ஆண்டு மங்களூரில் பப் ஒன்றில் பிறந்த நாள் கொண்டாடிய பெண்களை ரோட்டில் ஓட ஓட விரட்டித் தாக்கி பேர் வாங்கியது தான் இந்த ஸ்ரீராம் சேனா. இதிலிருந்து இதன் தலைவரான முத்தாலிக் பிரபலமாகிவிட்டார்.
இதையடுத்து கடந்த ஆண்டு காதலர் தினத்தைத் தடுப்போம் என்று அறிவித்தார். ரோட்டில் யாராவது ஆண், பெண் சேர்ந்து திரிந்தால் அவர்களைப் பிடித்து திருமணம் செய்து வைப்போம் என்று மிரட்டினார்.
இதையடுத்து அவருக்கு நாடு முழுவதும் இருந்து கண்டனக் குரல்கள் எழுந்ததோடு, அவருக்கு ஆயிரக்கணக்கான பிங்க் நிற ஜட்டிகளும் அனுப்பி வைக்கப்பட்டன.
இந் நிலையில் இப்போது நாளை மறுதினம் காதலர் தினம் கொண்டாடப்படும் நிலையில் மீண்டும் தனது எச்சரிக்கையை விடுத்தார் முத்தாலிக். இது தொடர்பாக அவருக்கும் காதலர் தினத்தை ஆதரி்ப்போருக்கும் இடையே ஒரு விவாத நிகழ்ச்சிக்கு கன்னட தனியார் தொலைக்காட்சி ஏற்பாடு செய்திருந்தது.
அந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற முத்தாலிக்கின் முகத்தில் இளைஞர் காங்கிரஸ் தொண்டர்கள் கருப்பு மையைப் பூசினர். இதையடுத்து கர்நாடகத்தில் ஆங்காங்கே போராட்டங்கள் வெடித்துள்ளன.
பாஜகவின் மறைமுக ஆதரவு பெற்ற முத்தாலிக்குக்கு ஆதரவாகத வட கர்நாடகத்தில் வன்முறை வெடித்துள்ளது. ஏராளமான பேருந்துகள் தீ வைத்து எரிக்கப்பட்டுள்ளன. பல காங்கிரஸ் அலுவலகங்களும் தாக்கப்பட்டுள்ளன.
மங்களூரில் நேற்று ராம்சேனா நடத்திய பந்த்தி்ன்போது 10 பஸ்கள் கல்வீச்சுத் தாக்குதலுக்கு உள்ளாகின.
பெல்காமில் கல்வீச்சு சம்பவங்கள் நடந்ததையடுத்து அங்கு 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இன்று பந்த்:
இந் நிலையில் முதாலிக் முகத்தில் மை பூசப்பட்டதைக் கண்டித்து இன்று கர்நாடகத்தில் மாநிலம் தழுவிய முழு அடைப்புக்கு ராம் சேனா அழைப்பு விடுத்துள்ளது.
இதையடுத்து மாநிலம் முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாக அரசு அறிவித்துள்ளது.
பிஜப்பூர், பீதர், உடுப்பி, மங்களூர், ஷிமோகா ஆகிய மாவட்டங்களில் முழு அடைப்புக்கு ஓரளவு ஆதரவு இருந்தது.
உடுப்பியில் மூத்த காங்கிரஸ் தலைவர் ஆஸ்கர் பெர்னாண்டஸ் வீடு தாக்கப்பட்டது. போலீசார் விரைந்து சென்று பாதுகாப்பு அளித்தனர்.
சேனாவுக்கு சாமி ஆதரவு:
இந் நிலையில் சுப்பிரமணிய சாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், ராம்சேனா தலைவர் பிரமோத் முத்தாலிக் மீது நடத்தப்பட்ட தாக்குதல் ஜனநாயக விரோதமானது. சட்டத்தை கையில் எடுப்பவர்களை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அரசு கைது செய்ய வேண்டும்.
ஷாருக் கானின் மை நேம் இஸ் கான் படத்தை எதிர்க்கும் சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரேவின பாதுகாப்பை வாபஸ் பெறுவோம் என மகாராஷ்டிர முதல்வர் சவான் அறிவித்துள்ளது கண்டிக்கத்தக்கது. இப்படிப் பேசிய சவான் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications