மே 18ல் புதிய அரசியல் கட்சி - தொடங்குகிறார் சீமான்
சேலம்: மதுரையில் வருகிற மே 18ம் தேதி புதிய அரசியல் கட்சி தொடங்கப்படுவதாக நாம் தமிழர் இயக்கத்தின் தலைவரும், இயக்குநருமான சீமான் அறிவித்துள்ளார்.
இதுதொடர்பாக சேலத்தில் அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில்,
சமூக இயக்கமாக செயல்பட்டு வந்த நாம் தமிழர்' அமைப்பு மதுரையில் மே 18-ந் தேதி நடக்கும் தமிழ் எழுச்சி மாநாட்டில் அரசியல் கட்சியாக அறிவிக்கப்படுகிறது.
உலக அளவில் சர்வதேச இனமான தமிழினம் பரவி விரிந்து கிடக்கிறது. தமிழர்களை தொடர்ந்து அடையாள படுத்தவும், அவர்களை ஒருங்கிணைக்கும் வகையிலும் அக்கட்சி செயல்படும்.
சிவப்பு நிற பின்னணியில் கொடி உருவாக்கப்பட்டுள்ளது. கொடியின் மத்தியில் பாயும் புலி'யும், அதை சுற்றி கரு வட்டமும், அதில் இருந்து சூரியக் கதிர்கள் வெளிவருவது போலவும் அமைந்துள்ளது.
முதலில் கட்சியை வலுப்படுத்துவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்படும். உரிய நேரத்தில் தேர்தலில் போட்டியிடும்.
இலங்கை தமிழர்களுக்காக உயிர்த்தியாகம் செய்த முத்துக்குமாருக்கு வீரவணக்கம் செலுத்தும் வகையில் சேலத்தில் சனிக்கிழமை மாலை தமிழர் எழுச்சி நாள் கூட்டம், ஊர்வலம் நடக்கிறது.
மாலை 4 மணிக்கு செவ்வாய்பேட்டை தீயணைப்பு நிலையத்தில் இருந்து ஊர்வலம் புறப்பட்டு போஸ் மைதானத்தை வந்தடைகிறது. பின்னர் அங்கு பொதுக் கூட்டம் நடக்கிறது என்றார் சீமான்.












Click it and Unblock the Notifications