மக்களுக்காகவே வாழ்ந்து கொண்டிருப்பவர் கருணாநிதி- கனிமொழி

Subscribe to Oneindia Tamil

Kanimoli and Karunanidhi
சென்னை: சென்னையில் இன்று நடந்த நிகழ்ச்சியில் முதல்வர் கருணாநிதிக்கு தமிழறிஞர்கள், இலக்கியவாதிகள் பாராட்டு விழா நடத்தினர். அப்போது பேசிய கவிஞர் கனிமொழி, மக்களுக்காகவும், அவர்களது நலன்களுக்காகவும் கருணாநிதி வாழ்ந்து கொண்டிருக்கிறார் என்றார்.

சங்கத் தமிழ்ப் பேரவை சார்பில் முதல்வர் கருணாநிதிக்கு இன்று பாராட்டு விழா நடத்தப்பட்டது. வள்ளுவர் கோட்டத்தில் நடந்த நிகழ்ச்சியில், செம்மொழித் தமிழுக்காக முதல்வர் ஆற்றிய பணிக்காக பாராட்டு தெரிவிக்கப்பட்டது.

இன்று முழுவதும் இந்த விழா நடைபெறுகிறது. பேரவையின் தலைவராக அமைச்சர் துரைமுருகனும், நிறுவனச் செயலாளராக மத்திய அமைச்சர் ஜெகத்ரட்சகனும் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

சோழ மன்னனின் தர்பார் போன்ற வடிவில் மேடை அமைக்கப்பட்டிருந்தது. மங்கள இசையுடன் விழா தொடங்கியது. மேலும், மேடையில் மனு நீதிச் சோழனை நினைவு கூறும் வகையில் ஒரு மாடு மற்றும் மணி அடங்கிய செட்டும் வைக்கப்பட்டிருந்தது.

விழா தொடங்கியதும் முதல் அமர்வாக முதல்வர் கருணாநிதியின் படைப்புகள் குறித்த ஆய்வரங்கம் நடந்தது. இதில் இளம்பிறை மணிமாறன், பர்வீன் சுல்தானா, விஜயசுந்தரி, மங்கையர்க்கரசி ஆகியோர் கலந்து கொண்டனர்.

நிகழ்ச்சியில் கனிமொழியும் கலந்து கொண்டார். அவர் பேசுகையில், எனது குடும்பத்தை ஒரு புகைப்பட பிரேமுக்குள் அடக்க முடியாது. காரணம், உலகெங்கும் உள்ள தமிழர்கள் அனைவருமே எனது குடும்ப உறுப்பினர்கள்தான் என்று அப்பா அடிக்கடி கூறுவார்.

தமிழர்களுக்காக முதல்வர் கருணாநிதி தொடர்ந்து பாடுபட்டு வருகிறார். தனது எழுத்துக்கள் மூலமாகவும், சிந்தனைகள் மூலமாகவும் தமிழச் சமுதாயத்தில் விழிப்புணர்வை உருவாக்கப் போராடிக் கொண்டிருக்கிறார்.

அரசியல்வாதிகள் எளிமையாகவும், இரக்க சிந்தனையுடனும் இருக்க வேண்டும். அப்படிப்பட்ட ஒருவர்தான் நமது முதல்வர். மக்களுக்காகவும், அவர்களது நலன்களுக்காகவுமே அவர் வாழ்ந்து கொண்டிருக்கிறார் என்றார் கனிமொழி.

இன்று மாலை நடைபெறும் நிகழ்ச்சியில் நடிகர்கள் ரஜினிகாந்த், கமல்ஹாசன், மம்முட்டி உள்ளிட்டோர் பங்கேற்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. நிகழ்ச்சியின் இறுதியில் முதல்வர் கருணாநிதி சிறப்புரையாற்றுவார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+