பென்னாகரம் வாக்காளர் பட்டியலில் விடுபட்ட பெயர்கள் - விசாரணை கோரும் அதிமுக
சென்னை: பென்னாகரம் தொகுதி இடைத் தேர்தல் வாக்காளர் பட்டியலில் 42,000க்கும் மேற்பட்டோரின் பெயர்கள் விடுபட்டது குறித்து விசாரணை நடத்த வேண்டும் என தேர்தல் ஆணையத்தை அதிமுக கேட்டுக் கொண்டுள்ளது.
இதுகுறித்து தம்பித்துரை தலைமையிலான அதிமுக எம்.பிக்கள் குழு தலைமைத் தேர்தல் ஆணையர் நவீன் சாவ்லா, தேர்தல் ஆணையர்கள் குரேஷி, சம்பத் ஆகியோரைச் சந்தித்து மனு அளித்தது.
இதுகுறித்து தம்பித்துரை பின்னர் செய்தியாளர்களிடம் பேசுகையில், பென்னாகரம் தொகுதி வாக்காளர் பட்டியலில் 42,000க்கும் மேற்பட்டோரின் பெயர்கள் நீக்கப்பட்டுள்ளன.
இவ்வளவு அதிக அளவிலான வாக்காளர்களின் பெயர்கள் நீக்கப்பட்டது குறித்து முறைப்படி விசாரணை நடத்த வேண்டும்.
கடந்த 2006ம் ஆண்டு நடந்த சட்டசபைத் தேர்தலில் அதிமுகவுக்கு 47,000 வாக்குகள் இங்கு கிடைத்தன. எனவே இங்கு முறைப்படி விசாரணை நடத்திய பின்னர்தான் இறுதிப் பட்டியலை வெளியிட வேண்டும்.
அதேபோல பென்னாகரம் தொகுதி இடம் பெற்றுள்ள தர்மபுரி மாவட்ட ஆட்சித் தலவர் திமுகவுக்கு சாதகமாக நடந்து கொள்கிறார். பிற கட்சிகளுக்கு பாரபட்சம் காட்டுகிறார்.
அதிமுக தேர்தலுக்குப் பயப்படுவதாக திமுக கூறுவதில் உண்மை கிடையாது. எப்போது நடந்தாலும் அதை சந்திக்க அதிமுக தயார். ஆனால் ஒளிவுமறைவின்றி இது நடைபெற வேண்டும் என்றார் தம்பித்துரை












Click it and Unblock the Notifications