புனே குண்டுவெடிப்பு- லஷ்கர் சார்பில் குண்டு வைத்ததா இந்தியன் முஜாஹிதீன்?

லஷ்கர் இ தொய்பா தீவிரவாத அமைப்பின் சார்பில் இந்தியன் முஜாஹிதீன் தீவிரவாதிகள் இதைச் செய்திருக்கலாம் என்றும் சந்தேகம் வலுத்துள்ளது.
ஜெர்மன் பேக்கரிக்கு எதிரில் உள்ள ஒரு ஹோட்டலில் வைக்கப்பட்டிருந்த ரகசியக் கண்காணிப்பு கேமரா (சிசிடிவி) மூலம் பேக்கரிக்குள் 2 மர்ம நபர்கள் சென்று வந்தது பதிவாகியுள்ளது.
இந்த 2 பேரும் ஜெர்மன் பேக்கரிக்குள் சென்று குண்டு வைத்து விட்டு வெளியேறியிருப்பதாக போலீஸார் சந்தேகப்படுகின்றனர். ரகசியக் கேமரா பதிவுகளை தற்போது போலீஸ் குழுவினர் தீவிரமாக ஆராய்ந்து வருகின்றனர்.
அந்த இரண்டு நபர்களும் பை நிறைய வெடிபொருட்களுடன் பேக்கரிக்குள் நுழைந்துள்ளனர். வெடிகுண்டுப் பையை உள்ளே வைத்து விட்டு வேகமாக வெளியேறி ஆட்டோவில் ஏறித் தப்பிச் சென்றதாக கருதப்படுகிறது.
இதுதொடர்பாக அந்த இருவரையும் நேரில் பார்த்ததாக கூறியுள்ள சிலரிடமும், சிசிடிவி படங்களைக் காட்டி போலீஸார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
மொத்தம் 5 பேர்...
மேலும் இந்த வெடிகுண்டுச் சம்பவத்தை இந்தியன் முஜாஹிதீன் தீவரவாத அமைப்பைச் சேர்ந்த ஐந்து பேர் கொண்ட குழு திட்டமிட்டு நடத்தியிருக்கலாம் எனவும் விசாரணை அதிகாரிகள் சந்தேகிக்கின்றனர்.
இவர்களில் அப்துஸ் சுபான் குரேஷி, ரியாஸ் அகமது பத்கல், இக்பால் பத்கல், மோஷின் செளத்ரி ஆகியோரின் பெயர்கள் தெரிய வந்துள்ளன. இவர்கள் நான்கு பேரும் தென்னிந்திய பிரிவைச் சேர்ந்தவர்கள். இவர்களில் ரியாஸ் பத்கலும், இக்பால் பத்கலும் சகோதரர்கள் ஆவர். மோஷின் செளதரி புனைவேச் சேர்ந்தவர் என்று தெரிகிறது.
ஐந்தாவது நபரின் பெயர் முகம்மது அம்ஜத் காஜா. இவர் ஹைதராபாத்தைச் சேர்ந்தவர். சமீபத்தில் போலீஸாரால் கைது செய்யப்பட்டு தற்போது சிறையில் உள்ளார்.
இவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில், ஜெர்மன் பேக்கரிக்கு வெகு அருகில் உள்ள ஓஷோ ஆசிரமத்தை தனக்கு தனது அமைப்பினர் வீடியோவில் காட்டியதாக கூறியுள்ளார்.
லஷ்கரின் கராச்சித் திட்டம்...
மேலும், லஷ்கர் இ தொய்பாவின் கராச்சி திட்டம் என்ற தீவிரவாதத் திட்டத்தின் ஒரு அங்கமாக புனே சம்பவம் நடந்திருப்பதாகவும் போலீஸார் நம்புகிறார்கள்.
அதாவது லஷ்கரின் உதவியுடன், அது வகுத்துக் கொடுத்த திட்டத்தின்படி இந்தியன் முஜாஹிதீன் தீவிரவாதிகள் செயல்பட்டிருப்பதாக தெரிகிறது.
இந்த கராச்சித் திட்டம் குறித்து சமீபத்தில் எப்பிஐயிடம் டேவிட் கோல்மேன் ஹெட்லி கூறியுள்ளார்.
கராச்சியில் இக்பாலும், ரியாஸும் லஷ்கர் உதவியுடன் தங்கியுள்ளனர் என்று ஹெட்லி கூறியுள்லார்.
வேவு பார்த்து உதவியது ஹெட்லி...
மேலும் ஹெட்லியே புனே நகரில் வெடிகுண்டுச் சம்பவம் நடந்த பகுதியை முன்பே வேவு பார்த்துள்ளார். மேலும் ஓஷோ ஆசிரமத்திற்கும் சென்றுள்ளார் ஹெட்லி. இதுதவிர ஜெர்மன் பேக்கரிக்கு அருகில் உள்ள சூர்யா வில்லாவுக்கும் ஹெட்லி சென்று வந்துள்ளார்.
புனே தவிர டெல்லி, புஷ்கர், கோவா ஆகிய நகரங்களில் யூத வழிபாட்டுத் தலங்களுக்கு அருகில் உள்ள பகுதிகளுக்கும் ஹெட்லி போய் வந்தது குறிப்பிடத்தக்கது.
எனவே லஷ்கர் வகுத்துக் கொடுத்த திட்டத்தை, ஹெட்லியின் உதவியுடன், இந்தியன் முஜாஹிதீன் புனேவில் நிகழ்த்தியிருக்கலாம் என்ற சந்தேகம் தற்போது வலுவடைந்துள்ளது.












Click it and Unblock the Notifications