பெட்ரோலிய பொருட்கள் விலை இப்போதைக்கு உயராது: மத்திய அமைச்சர்

இந்த விலை உயர்வு விஷயத்தில் நிதி மற்றும் பெட்ரோலியத் துறை அமைச்சகங்களுக்கு இடைய ஒருமித்த கருத்து ஏற்படாததால் பெட்ரோல், டீசல், கேஸ் விலை இப்போதைக்கு உயர வாய்ப்பில்லை என முரளி தியோரா கூறியுள்ளார்.
பெட்ரோலியப் பொருட்களின் விலை நிர்ணயம் குறித்து கிரித் பாரிக் கமிட்டி தனது அறிக்கையை பெட்ரோலிய அமைச்சகத்திடம் சமர்ப்பித்துள்ளது.
இந்த அறிக்கையின் பரிந்துரைப்படி பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு மற்றும் மண்எண்ணை ஆகியவற்றின் விலையை உயர்த்த வேண்டும் என பெட்ரோலிய அமைச்சகம் வலியுறுத்தியுள்ளது.
மக்கள் மத்தியில் விலைவாசி சுமையை ஏற்றாமல் இருக்க வேண்டுமானால் நஷ்டத்தில் இயங்கும் பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்களுக்கு இழப்பீட்டுத் தொகை வழங்க வேண்டும் என்று நிதியமைச்சகத்திடம் பெட்ரோலியத் துறை கோரிக்கை விடுத்தது.
பெட்ரோல் டீசல் உள்ளிட்டவற்றை குறைந்த விலையில் விற்பதால், பொதுத்துறை நிறுவனங்கள் சுமார் ரூ.45 ஆயிரத்து 571 கோடி நஷ்டத்தை எதிர்கொள்வதாக மதிப்பிடப்படுகிறது.
அதேநேரத்தில் பொதுத்துறை நிறுவனங்களின் நஷ்டத்தை ஈடு செய்வதற்காக பொதுமக்கள் மீது சுமையை ஏற்றக்கூடாது என்றும், ஏற்கனவே அத்தியாவசியப் பொருட்களின் விலைவாசி உயர்வால் அவதிப்படும் மக்கள் பெட்ரோலியப் பொருட்களின் விலை உயர்வையும் எதிர்கொண்டால் ஆட்சிக்கெதிராக பெரும் அதிருப்தியை ஏற்படுத்தும் என காங்கிரஸ் கவலை கொண்டுள்ளது.
அத்துடன், முக்கிய கூட்டணி கட்சிகளான திமுக மற்றும் திரிணமூல் காங்கிரஸ் கட்சிகளும் விலை உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவி்த்து வருகின்றன.
இதனால், பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்களையும் நஷ்டத்தில் இருந்து மீட்கவேண்டும்; விலை உயர்வையும் கட்டுப்பாட்டில் வைக்க வேண்டும் என்ற எண்ணத்தில் ஆளும் காங்கிரஸ் அரசு உள்ளது.
இதற்கிடையே இவ்விவகாரம் குறித்து மத்திய நிதியமைச்சகம் மற்றும் பெட்ரோலிய அமைச்சகத்துக்கு இடையே நேற்று பேச்சுவார்த்தை நடைபெற்றது.
இந்த பேச்சுவார்த்தையில் விலை நிர்ணயம் மற்றும், இழப்பீட்டுத் தொகை பற்றி இரு தரப்பினருக்கு இடையிலும் எவ்வித ஒருமித்தக் கருத்தும் ஏற்படவில்லை.
இதனால் பெட்ரோலியப் பொருட்களின் விலை உயர்வு இப்போதைக்கு இல்லை பேச்சுவார்த்தைக்கு பின்னர் நிருபர்களை சந்தித்த பெட்ரோலிய அமைச்சர் முரளி தியோரா தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications