ராஜபக்சேவிடம் கெஞ்ச மாட்டேன்: பொன்சேகா மனைவி

இலங்கையில் கைது செய்யப்பட்டுள்ள முன்னாள் ராணுவத் தளபதி சரத் பொன்சேகாவின் மனைவி அனோமா இதுதொடர்பாக சிங்கப்பூர் பத்திரிகைக்கு அளித்துள்ள பேட்டி:
உங்களுக்கும், அதிபர் ராஜபக்சே குடும்பத்துக்கும் என்ன தான் பிரச்னை?
அனோமா: நாங்கள் நல்ல நண்பர்களாக இருந்தோம். யுத்தம் முடிந்த பின்பே பிரச்னை ஏற்பட்டது. யுத்தத்திற்குப் பின்னர் கௌரவ குறைச்சலாக எங்களை நடத்தினர். சரத் ராணுவ தளபதியாகப் பதவி வகிக்கவே விரும்பினார். அவர் முப்படைகளின் தலைமை அதிகாரியாக விரும்பவில்லை.
அவர் வீரர்களின் நலன்களில் கவனம் செலுத்த விரும்பினார். அவர்கள் அனுமதிக்கவில்லை. ராணுவ தளபதியாக தொடர்ந்து பதவி வகிக்க முடியுமா? என அவர் ராஜபக்சே தம்பியிடம் கேட்டார். அவர்கள் அதற்கும் அனுமதிக்கவில்லை.
அதுவே அனைத்து நெருக்கடிகளுக்கும் முக்கியமானதாக அமைந்தது. மற்றவை பற்றி எனக்கு தெரியாது. ஆனால் இதுவே முக்கியமானது. படையினர் மரங்களின் கீழ் வாழ்வதை அவர் விரும்பவில்லை. அவர்களுக்கு வீடு ஒன்று அவசியம் எனக் கருதினார்.
ராணுவத்தில் பணிபுரியும் போது பொன்சேகா அரசியல் முயற்சிகளில் ஈடுபட்டார் எனக் கூறப்படுவது பற்றி...?
அனோமா: அவர் தனது சீருடைகளைத் துறந்த பின்னரே அரசியலில் நுழைந்தார். அவர் மிகவும் நாகரீமான முறையில் அரசியலில் நுழைந்தார். கடந்த நவம்பரில் ஓய்வு பெற்ற பின்னர் அவர் சாதாரண பொது மகன் ஆகி விட்டார். எனினும் அவர்கள் அவரை ராணுவ சட்டத்தின் கீழ் விசாரிக்க போகிறார்கள் என மிரட்டுகின்றனர்.
ராணுவப்புரட்சி மேற்கொள்ள அவர் திட்டமிட்டிருந்தார் எனக் கூறப்படுவது பற்றி...?
அனோமா: அவர் அதனைச் செய்ய நினைத்திருந்தால் எப்போதோ செய்திருக்கலாம். பிரபாகரன் கொல்லப்பட்ட உடனேயே அவர் இதனைச் செய்திருக்கலாம். அப்போது அனைவருக்கும் அவர் மாவீரனாகத் தென்பட்டார்.
சதிப் புரட்சி என்பது கட்டுக்கதை. அவர் அதிபருக்கும் பாதுகாப்புச் செயலாளருக்கும் முழு மரியாதை கொடுத்தார். நம்பினார். கட்டுப்பட்டார். எனினும் பின்னர் அவர் ஏமாற்றப்பட்டார். அதிபரையும் பாதுகாப்புச் செயலாளரையும் சுற்றியிருந்தவர்கள் சரத்தைப் பற்றிய சந்தேகத்தை ஏற்படுத்தினர்.
சரத் பொன்சேகாவின் சிறை நிலவரம் எப்படி இருக்கிறது?
அனோமா: அதிகாரிகளுக்கான விடுதியிலேயே அவர் தடுத்து வைக்கப்பட்டுள்ளார். அரசு தெரிவிப்பது போன்ற ஆடம்பரமான இடத்தில் அவர் இல்லை.
ராஜபக்சே குடும்பத்தினரும், நீங்களும் சமரசமாகி ஒன்று சேர வாய்ப்பு உள்ளதா?
அனோமா: அவர் தான் நியாயமான முறையில் விடுதலையாவதையே விரும்புகிறார். அவர் எந்த தவறும் செய்யவில்லை. ஏன் நான் அவர்களிடம் கெஞ்ச வேண்டும்? நான் கூட அதற்கு இணங்க மாட்டேன். உண்மை ஒருநாள் வெளிவரும்.
பொன்சேகாவின் கைதுக்கு பின்னர் ஜனாதிபதியின் மனைவி ஷிராந்தியுடன் நீங்கள் பேசினீர்களா?
அனோமா: ஆம், நாங்கள் நல்ல நண்பர்கள். நான் அவரை தொடர்பு கொண்டபோது ஷிராந்தி ரஷியாவில் இருந்தார். சரத் கைது செய்யப்படவில்லை. அவர் கடத்தப்பட்டுள்ளார் என தெரிவித்தேன். மிருகத்தைக் கொண்டு செல்வது போல கொண்டு சென்றார்கள் என்றேன்.
அவரது உயிரைக் காப்பாற்றுமாறு கோரினேன். ஷிராந்தி, தான் ஏதாவது செய்வதாக கூறினார். அவர் செய்தார் என நினைக்கிறேன். பெண்களுக்கு இடையில் இன்னமும் தொடர்புகள் உள்ளன. நாங்கள் தாய்மார்கள், மனைவியர். நான் ஷிராந்திக்கு நன்றி தெரிவிக்கிறேன் என்றார்.












Click it and Unblock the Notifications