ஐடி துறையில் மாணவர்கள் ஈடுபட ஜாதி, பாலினம் தடை: அமைச்சர் பூங்கோதை
கோவை: தமிழகத்தில் ஐடி துறையில் மாணவர்கள் அதிகளவில் ஈடுபடுவதற்கு ஜாதி, மதம், பாலினம் ஆகியவை இன்னமும் தடைக்கற்களாக உள்ளன என்று தமிழக தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் பூங்கோதை தெரிவித்தார்.
கோவை பி.எஸ்.ஜி கலை அறிவியல் கல்லூரியில், 'கேட்வே 10' அறிவியல் தொழில்நுட்ப நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் தமிழக தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் பூங்கோதை கலந்துகொண்டார்.
நிகழ்ச்சியில் அமைச்சர் பேசுகையில், 'இந்தியாவில் பொருளாதார மந்த நிலை வெகு விரைவில் மாறும். அறிவுசார்ந்த பொருளாதார அடிப்படையில் இந்தியா மிகப்பெரிய வல்லரசாக உருவாகும்.
தாய்மொழியாகிய தமிழ் மற்றும் வெளிநாட்டு தொடர்புக்காக ஆங்கிலம் என, இரண்டு மொழிகளையும் சரளமாக பேச மற்றும் எழுத நாம் கற்றுக்கொள்ள வேண்டும்.
தமிழகத்தில் 30 சதவீதம் மக்கள் தகவல் தொழில்நுட்பத் துறையில் பணிபுரிகின்றனர். இந்த எண்ணிக்கையை அதிகரிக்க ஜாதி, மதம், பாலினம் போன்றவை தடையாக உள்ளன.
இந்த போக்கு மாற மாணவர்களாகிய நீங்கள் முயற்சி மேற்கொள்ள வேண்டும். கோவையில், வரும் ஜூன் மாதத்திற்குள் முழு கட்டமைப்புப் பணிகள் முடிந்து, டைடல் பார்க் செயல்பட துவங்கும். அதன் மூலம் வேலைவாய்ப்பு அதிகரிக்கும்' என்றார்.












Click it and Unblock the Notifications