பாஜக-அதிமுக ஒத்த கருத்து உடையவை-இல.கணேசன்

நேற்று இல.கணேசனின் 65வது பிறந்த நாள். இதையொட்டி முதல்வர் கருணாநிதி அவருக்கு தொலைபேசி மூலம் வாழ்த்து தெரிவித்தார்.
அவரை முன்னாள் அதிமுக எம்எல்ஏவான எஸ்.வி.சேகர், பனைத் தொழிலாளர் நலவாரியத் தலைவர் குமரிஅனந்தன் நேரில் சந்தித்து வாழ்த்துத் தெரிவித்தனர்.
அப்போது நிருபர்களிடம் பேசிய கணேசன், தமிழ்நாட்டில் தேசியமும், தெய்வீகமும் மீண்டும் உரிய இடத்தைப் பெற வேண்டும்.
சிறுபான்மையினருக்கு ஊக்கம் தருகிறோம் என்ற போர்வையில் ஒரு மதவாத ஆட்சி மத்தியில் நடந்து வருகிறது. பாகிஸ்தான் ஆக்கிரமித்துள்ள காஷ்மீரில் இருந்து இளைஞர்கள் இந்திய பகுதிக்குள் தாராளமாக வரலாம் என்று உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் கூறியிருப்பது 'தாஜா' செய்கிற போக்கின் உச்சகட்டம்.
நாட்டு நன்மையை விட ஓட்டு நன்மையையே இவர்கள் பெரிதாக கருதுகிறார்கள். காங்கிரஸ் நடத்துவது போலித்தனமான மதசார்பற்ற தன்மை. பச்சையான மதவாதம்.
தமிழ்நாட்டில் எந்த கட்சியும் தனித்து தேர்தலை சந்திக்க முடியும் என்று மார்தட்ட முடியாது. அந்த நம்பிக்கை கொண்டிருந்த தேமுதிக கூட அதிகாரப்பூர்வமாக தீர்மானமே நிறைவேற்றி விட்டது.
பாஜகவை பொறுத்தவரை கூட்டணி பற்றி இப்போது சிந்திக்காமல் அமைப்பை பலப்படுத்தும் பணியில் இறங்கியிருக்கிறார்கள்.
டெல்லியில் நடந்த தேர்தல் ஆணைய விழாவில் கலந்து கொண்ட ஜெயலலிதா, சோனியா காந்தி பரஸ்பரம் வணக்கம் தெரிவித்தார்கள். இது பெரிய செய்தியாக தமிழ்நாட்டில் பேசப்படுகிறது. டெல்லியில் இது அன்றாட நிகழ்வு. இது கூட்டணி மாற்றத்தை ஏற்படுத்துமா என்று கூறமுடியாது.
பாஜகவின் கருத்தும், அதிமுகவின் கருத்தும் ஒத்துப்போவதால் மக்கள் மத்தியில் இரண்டும் கூட்டணி சேர வேண்டும் என்ற எண்ணம் இருப்பது உண்மை தான். அது கூட்டணியாக மாறுமா என்று கூறமுடியாது. உரிய நேரத்தில் தான் முடிவு எடுப்போம் என்றார் கணேசன்.
இந்தூரில் இன்று பாஜக தேசிய செயற்குழு கூட்டம்:
இந் நிலையில் மத்தியப் பிரதேச மாநிலம் இந்தூரில் இன்று பாஜக தேசிய செயற்குழு கூட்டம் தொடங்குகிறது.
புனேயைத் தொடர்ந்து இந்தூரிலும் தீவிரவாத தாக்குதல் நடத்தப்படலாம் என மத்திய உளவுத்துறை எச்சரித்துள்ளதால் மிக பலத்த பாதுகாப்புக்கு இடையே இந்தக் கூட்டம் நடக்கிறது.
3 நாட்கள் நடக்கும் இக் கூட்டத்தில் பங்கேற்கும் அனைத்துத் தலைவர்களும் மாநாடு நடக்கும் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள தாற்காலிக கொட்டகைகளிலேயே தங்கியிருப்பர்.
கிட்டத்தட்ட 5000 பிரதிநிதிகள் வரை இந்தக் கூட்டத்திற்காக வந்துள்ளனர். அனைவரும் தங்க சாதாரண டென்ட் கூடாரங்களையே அமைத்துள்ளது பாஜக தலைமை.
அத்வானி உள்ளிட்ட அனைவருமே இதில்தான் தங்குவர். சாதாரண டென்ட் கொட்டையாக இருந்தாலும் கூட இதில் அனைத்து வசதிகளும் நிரம்பியுள்ளனவாம்.
குஷாபாவ் தாக்கரே நகர் பகுதியில், கிட்டத்தட்ட 1300 கூடாரங்கள் போடப்பட்டுள்ளன. இதில் 25 கூடாரங்கள் கட்சியின் மூத்த தலைவர்களுக்கான விவிஐபி கூடாரங்கள் ஆகும்.
இந்த 25 கூடாரங்களும் ஏசி செய்யப்பட்டவை. இரட்டை படுக்கைகள் இங்கு போடப்பட்டுள்ளன. சோபா, டிரஸ்ஸிங் டேபிள், கம்ப்யூட்டர், சுடுநீருக்காக சூரிய சக்தி வசதி உள்ளிட்டவை செய்யப்பட்டுள்ளன.
இருப்பினும் தீவிரவாத அச்சுறுத்தல் காரணமாக அத்வானி, நரேந்திர மோடி, ராஜ்நாத் சிங் ஆகியோர் ஹோட்டலில் தங்கியுள்ளனராம்.
அதேசமயம், கூட்டத்திற்கு ஏற்பாடு செய்துள்ளவரும், மத்தியப் பிரதேச மாநில முதல்வருமான சிவராஜ் சிங் செளகான் இங்கு யார் வேண்டுமானாலும் தங்கலாம். பாதுகாப்புக்கு எந்தவிதப் பிரச்சினையும் இல்லை என்று தெரிவித்துள்ளார்.
நிதின் கத்காரியின் யோசனைப்படிதான் இந்த டென்ட் கூடாரங்கள் அமைக்கப்பட்டனவாம்.
இந்தக் கூட்டத்தில் தீவிரவாதம் குறித்து முக்கியமாக விவாதிக்கப்பட உள்ளது. இந்த விவகாரத்தில் ஆளும் காங்கிரசுக்கு எந்த வகையில் நெருக்குதல் தரலாம் என்பது குறித்தும் விவாதிக்கப்படவுள்ளது.
கூட்டம் நடைபெறும் பகுதியில் 1,500 போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர். அனைத்து இடங்களிலும் கண்காணிப்புக் கேமரா பொருத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகிறது.
வெடிகுண்டுகளை செயலிழக்கச் செய்யும் நிபுணர்களும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளனர்.












Click it and Unblock the Notifications