புதிய உர மானியத் திட்டத்தை கைவிடுக-பிரதமர், சோனியாவுக்கு கருணாநிதி கடிதம்
சென்னை: உர விலை உயர வழி வகுத்து விடும் வகையிலான நடவடிக்கைகளை மத்திய அரசு எடுக்கக் கூடாது என்று முதல்வர் கருணாநிதி பிரதமர் மன்மோகன் சிங்குக்குக் கோரிக்கை விடுத்து கடிதம் அனுப்பியுள்ளார்.
இதேபோல காங்கிரஸ் தலைவர் சோனியாவுக்கும் அவர் கடிதம் அனுப்பியுள்ளார்.
இதுதொடர்பாக முதல்வர் அனுப்பியுள்ள கடிதத்தில கூறப்பட்டிருப்பதாவது:
பத்திரிகைகளில் வெளியாகும் செய்திகளை வைத்து பார்க்கையில், உரத் துறையில், உரத்தில் உள்ள சத்துக்களின் அடிப்படையில் மானியம் (நியூட்ரியன்ட் பேஸ்ட் சப்சிடி) அளிக்கும் புதிய திட்டத்தை அறிமுகப்படுத்த மத்திய அரசு தீவிரமாக பரிசீலித்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, டி.ஏ.பி, எம்.ஓ.பி. காம்பிளக்ஸ் வகை உரங்கள் (யூரியா தவிர்த்து) போன்ற குறிப்பிட்ட வகை உரங்களுக்கு அவற்றில் உள்ள சத்துக்களை (நியூட்ரியன்ட்) அடிப்படையாக வைத்து, சம்பந்தப்பட்ட உரத் தொழிற்சாலைகளுக்கு மானியம் வழங்கப்படும்.
ஏப்ரல் 1-ந் தேதி முதல், உரத்தின் சில்லரை விற்பனை விலையை தொழிற்சாலையினர் தங்களது விருப்பம் போல் நிர்ணயித்துக் கொள்ளவும் வழிவகுக்கப்பட்டுள்ளது. இதுதவிர யூரியாவின் விலையும் 10 சதவீதம் அதிகரிக்கப்படவுள்ளது.
சத்து அடிப்படையிலான மானிய திட்டம் அமல்படுத்தப்பட்டால் உரத்தின் விலை கடுமையாக அதிகரிக்கும். இந்த புதிய திட்டத்தின் கீழ் விற்பனை செய்யப்படவுள்ள உரங்கள், பெருமளவு இறக்குமதி செய்யப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
சர்வதேசச் சந்தை மாறக்கூடியது என்பதால், அவற்றின் விலையை கட்டுக்குள் வைக்க முடியாது. இந்த உரங்களின் சமீபகால சர்வதேச விலையில் ஏற்பட்ட மாற்றங்களை கணக்கில் கொண்டு பார்க்கும்போது, அவற்றின் சில்லரை விற்பனை விலை பலமடங்கு அதிகரிக்க வாய்ப்புகள் உள்ளன.
உரங்களின் விலை உயர்ந்தால், அது நம் நாட்டில் கண்டிப்பாக உணவு உற்பத்தியை பாதிக்கும். மேலும், விவசாயத்தையே வாழ்வாதாரமாக கொண்டுள்ள சிறு மற்றும் நடுத்தர விவசாயிகள், கடுமையாக பாதிக்கப்படுவார்கள்.
இந்த முடிவு, சமூகத்தின் பெரும்பகுதியினரை பாதிக்கும் என்பதால் இது தொடர்பாக ஒரு முடிவு எடுக்கப்படுவதற்கு முன்பாக, அரசியல்ரீதியான ஒரு கருத்தொற்றுமை நாம் ஏற்படுத்திக் கொள்ள வேண்டும் என்று கருதுகிறேன்.
வேளாண்துறை பின்புலம் அதிகம் கொண்டிருக்கும் சில மாநில அரசுகளின் கருத்துக்களை கேட்பதும் ஏற்புடையதாக இருக்கும். இதுதவிர, டிஏபி மற்றும் காம்பிளக்ஸ் உரங்கள் தட்டுப்பாடு, மாநிலத்தில் இருப்பது பற்றியும் எனது கவனத்துக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. வரும் சாகுபடி பருவத்துக்கு தேவையான இருப்பை ஏற்படுத்தி வைக்க வேண்டியது மிகவும் அவசியம். எனவே, இது தொடர்பாக கொள்கையில் ஒரு தெளிவான நிலை ஏற்பட வேண்டுமெனில் இவ்விஷயத்தில் உங்களது தலையீடு மிகவும் அவசியம்.
விலைவாசி உயர்வுக்கு குறிப்பாக உணவுதானிய விலை உயர்வுக்கு வழிவகுக்கும் எந்த ஒரு புதிய திட்டத்துக்கும் எனது எதிர்ப்பை தெரிவிக்கவே நான் விரும்புகிறேன். எனவே, உடனடியாக தலையிட்டு இந்த புதிய திட்டத்தை உரிய காலம் வரை நிறுத்த வைக்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன் என்று கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications