மின் கம்பி அறுந்ததால் ரயில் சேவை பாதிப்பு- பயணிகள் அவதி
சென்னை: சென்னை பல்லாவரம் அருகே மின் கம்பி உடைந்து விழுந்ததால், ரயில் சேவை கடுமையாக பாதிக்கப்பட்டது. இதனால் 3 மணி நேரம் மின்சார ரயில்கள் இயக்கப்படாமல் பயணிகள் பெரும் அவதிக்குள்ளாகினர்.
சென்னை பல்லாவரத்தில் இருந்து கடற்கரைக்கு நேற்று காலை 9.05 மணிக்கு மின்சார ரயில் ஒன்று புறப்பட்டது. சுமார் 100 அடி தூரத்தில் தண்டவாளம் மாறியபோது, ரயில் மேல் உள்ள மின் கம்பி திடீரென உடைந்து விழுந்தது. இதனால், ரயிலுக்கு மின்சாரம் வருவது தடைபட்டது. அதனைத் தொடர்ந்து ரயில் இயங்கமுடியாமல் நடுவழியில் நின்றது.
இதனால், தாம்பரம்-கடற்கரை மார்க்கத்தில் ரயில் போக்குவரத்து முற்றிலும் பாதிக்கப்பட்டது. தாம்பரத்தில் இருந்து கடற்கரை வந்த ரயில்களும், கடற்கரையில் இருந்து தாம்பரம் புறப்பட்ட ரயில்களும் நடுவழியில் ஆங்காங்கே ஒன்றன்பின் ஒன்றாக நிறுத்தப்பட்டன.
காலையில் வேலைக்கு செல்லும் நேரம் என்பதால், ரயில்கள் அனைத்திலும் பயணிகள் கூட்டம் அதிகமாக இருந்தது. திடீரென நடுவழியில் ரயில்கள் நிறுத்தப்பட்டதால், எப்போது ரெயில் புறப்படும் என்று பயணிகள் அதிர்ச்சியுடன் இருந்தனர்.
ஆனாலும், ரயில் புறப்படுவதற்கான அறிகுறி எதுவும் இல்லை. ஏன் ரயில்கள் நிறுத்தப்பட்டுள்ளது என்றே பயணிகளுக்கு தெரியவில்லை. பொறுத்து பார்த்த பயணிகள் ரயில்களில் இருந்து குதித்து, அருகில் உள்ள பஸ் நிலையத்திற்கு நடந்து சென்று, பின்னர் அங்கிருந்து பஸ்களில் தங்கள் அலுவலகங்களுக்கு அவசர அவசரமாக புறப்பட்டு சென்றனர்.
கடற்கரை ரயில் நிலையத்தில் இருந்து ரயில்கள் புறப்பட முடியாமலும், வேறு ரயில்கள் உள்ளே வர முடியாத நிலையும் ஏற்பட்டது. இதனால், கடற்கரை-வேளச்சேரி இடையே பறக்கும் ரயில் போக்குவரத்தும் பாதிக்கப்பட்டது.
சில மின்சார ரயில்கள் மட்டும் எக்ஸ்பிரஸ் ரயில் பாதையில் இயக்கப்பட்டன. ஆனால், அந்த ரயில்களும் கோடம்பாக்கம் வந்த உடன் நிறுத்தப்பட்டு விட்டன. இதனால், அனைத்து ரயில் தடத்திலும் போக்குவரத்து ஸ்தம்பித்தது.
பல்லாவரம் அருகே நடுவழியில் நின்ற ரயிலின் மின் கம்பி சரிசெய்யும் பணி 3 மணி நேரத்திற்கு பின்னர் முடிவடைந்தது. அதன் பின்னர் ரயில் போக்குவரத்து மீண்டும் தொடங்கியது. மதியத்திற்குப் பின்னர் இயல்பு நிலை திரும்பியது.












Click it and Unblock the Notifications