கரும்பு விலை-பிரதமருடன் அதிமுக எம்பிக்கள் சந்திப்பு
சென்னை: கரும்புக்கு கொள்முதல் விலையை டன்னுக்கு ரூ. 2500 ஆக வழங்க வேண்டும் என்று கோரி அதிமுக எம்.பிக்கள் இன்று பிரதமரிடம் மனு அளித்தனர்.
அப்போது ஜெயலலிதா வழங்கிய கோரிக்கைக் கடிதத்தையும் பிரதமரிடம் அவர்கள் வழங்கினர்.
இந்த சந்திப்பு குறித்து குழுவின் தலைவரான தம்பித்துரை கூறுகையில், இந்த விவகாரம் குறித்து உரிய முறையில் ஆய்வு செய்து நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்ததாக தெரிவித்தார்.
முன்னதாக, நேற்று இதுதொடர்பான ஜெயலலிதா வின் கடிதத்தை அதிமுக எம்.பிக்கள் தம்பித்துரை தலைமையில் மத்திய விவசாயத்துறை அமைச்சர் சரத் பவாரிடம் அளித்தனர்.
அந்தக் கடிதத்தில் ஜெயலலிதா கூறியுள்ளதாவது:
தமிழகத்தில் கடந்த 4 ஆண்டுகால திமுக ஆட்சியில் நியாயமான கொள்முதல் விலை கிடைக்காமல் கரும்பு விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.
அதிமுக ஆட்சிக் காலத்தில் மத்திய அரசின் ஆதார விலையான ரூ. 795 உடன், மாநில அரசின் ஆதார விலையான ரூ. 219 சேர்த்து டன்னுக்கு ரூ. 1,014 வழங்கப்பட்டது. அதிமுக ஆட்சியில் வெளிச்சந்தையில் சர்க்கரையின் விலை கிலோவுக்கு ரூ. 12.50 முதல் ரூ. 14 ஆக இருந்தது.
மத்திய அரசின் நுகர்பொருள், உணவு மற்றும் பொதுவிநியோகத் துறை கரும்புக்கான ஆதார விலையை ரூ. 1,298.40 ஆக உயர்த்தி அறிவித்தது.
அதனுடன் மாநில அரசின் ஆதார விலையான ரூ. 139 சேர்த்து டன்னுக்கு ரூ. 1,437.40 மட்டுமே தமிழக அரசு வழங்கி வருகிறது. ஆனால் இப்போது சர்க்கரையின் விலை கிலோவுக்கு ரூ. 44 வரை விற்கப்படுகிறது.
திமுக அரசின் தவறான நடவடிக்கைகள் காரணமாக அதிமுக ஆட்சியில் இருந்ததைவிட சர்க்கரை உற்பத்தி வெகுவாக குறைந்துள்ளது. அதிமுக ஆட்சியில் 2005}06}ல் 21.38 லட்சம் மெட்ரிக் டன்னாக இருந்த சர்க்கரை உற்பத்தி 2008}09 திமுக ஆட்சியில் 16.16 லட்சம் மெட்ரிக் டன்னாக குறைந்துள்ளது.
கள்ளச் சந்தை, பதுக்கல்காரர்கள் மற்றும் சமூக விரோதிகளால் சர்க்கரையின் விலை கடுமையாக உயர்ந்துள்ளது.
கரும்புக்கு கொள்முதல் விலையாக உத்தரப்பிரதேசத்தில் ரூ. 2,100 வழங்கப்படுகிறது. தமிழகத்தைவிட மற்ற மாநிலங்களில் கொள்முதல் விலை அதிகமாகவே உள்ளது. சில வடமாநிலங்களில் டன்னுக்கு ரூ. 2,250 வரை வழங்கப்படுகிறது.
தமிழகத்தில் கரும்பு விவசாயிகளுக்கு டன்னுக்கு குறைந்தபட்சம் ரூ. 2,500 கிடைக்கும் வகையில் மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தமிழகத்தில் உள்ள திமுக அரசு கரும்பு விவசாயிகளுக்கு எதிராக செயல்பட்டு வருகிறது. அதிலிருந்து தமிழக விவசாயிகளை காப்பாற்ற மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஜெயலலிதா கேட்டுக் கொண்டுள்ளார்.
எம்.பி.க்கள் எம். தம்பித்துரை, வி. மைத்ரேயன், எஸ். செம்மலை, கே. மலைச்சாமி, என். பாலகங்கா, பி. வேணுகோபால், ஒ.எஸ். மணியன், சி. ராஜேந்திரன், சி. சிவசாமி, எம். ஆனந்தன், எஸ். அன்பழகன், என்.ஆர். கோவிந்தராஜர், ஏ. இளவரசன், கே. சுகுமார், பி. குமார் ஆகியோர் இதில் கையெழுத்திட்டுள்ளனர்.
'பொய் அறிக்கை விடும் ஜெ'-வீரபாண்டி ஆறுமுகம்:
இந் நிலையில் கரும்புக்கு விலை நிர்ணயம் செய்யும் பிரச்சனை தொடர்பாக ஜெயலலிதா தொடர்ந்து பொய்யான அறிக்கைகளை வெளியிட்டு வருவதாக விவசாயத்துறை அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகம் குற்றம் சாட்டியுள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
கரும்புக்கு விலை நிர்ணயம் செய்கின்ற பிரச்சனையில் எதிர்க்கட்சித் தலைவர் ஜெயலலிதா, தொடர்ந்து பொய்யான அறிக்கைகளை எந்தவித ஆதாரமும் இல்லாமல் விடுத்துக் கொண்டே இருக்கிறார். ஆனால், முதல்வர் கருணாநிதி விளக்கம் தந்து, கேட்ட ஒரு கேள்விக்குக் கூட விளக்கம் அளிக்கவில்லை. இந்த கேள்விகளுக்கு நேரடியாக பதில் சொல்ல அவர் தயாரா?.
2001ம் ஆண்டுக்குப் பிறகு, மத்திய அரசு நிர்ணயித்த குறைந்தபட்ச விலையை மாநில அரசின் சார்பாக ஒரு பைசாவாவது ஜெயலலிதா அதிகப்படுத்திக் கொடுத்தாரா?.
2005ம் ஆண்டு மாநில அரசு சார்பில் டன் ஒன்றுக்கு 219 ரூபாய் சேர்த்து வழங்க உத்தரவிட்டதாக ஜெயலலிதா சொல்கிறார். அவர் அப்படி கொடுத்தது உண்டா?
ஜெயலலிதா ஆட்சி காலத்தில் சர்க்கரை உற்பத்தி 2003லும், 2004ம் ஆண்டிலும் சர்க்கரை உற்பத்தி குறைவாக இருந்ததை முதல்வர் கருணாநிதி சுட்டிக் காட்டியிருந்தார். 1996ம் ஆண்டு முதல் 2001ம் ஆண்டு வரை திமுக ஆட்சியிலே இருந்ததுதான் அதற்கு காரணம் என்று ஜெயலலிதா சொல்கிறார்.
சர்க்கரை உற்பத்தி என்பது அந்தந்த ஆண்டுகளில் செய்யப்படுவதாகும். 1996-2001ம் ஆண்டு வரை திமுக ஆட்சியிலே இருந்ததற்கும் 2003ல், 2004ல் சர்க்கரை உற்பத்தி குறைந்ததற்கும் திமுக ஆட்சி எப்படி காரணமாக இருந்திருக்க முடியும்?.
ஜெயலலிதாவின் அறிக்கையில் விளக்கங்களோ, ஆதாரங்களோ இல்லை என்பதுதான் உண்மை.
இவ்வாறு வீரபாண்டி ஆறுமுகம் கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications