சென்னையில் படுகொலைக்கு திட்டமிட்ட கூலிப்படையினர் சிக்கினர்
சென்னை: கொலை வழக்கில் ஜாமீனில் வந்தவர்களை காவல் நிலைய வாசலிலேயே கொலை செய்ய திட்டமிட்ட கூலிப்படையினரை போலீசார் கைது செய்தனர்.
மாதவரம் நகராட்சி முன்னாள் தலைவராக இருந்தவர் வீரமணி (55). கடந்த சில மாதங்களுக்கு முன்பு இவர் படுகொலை செய்யப்பட்டார்.
இந்த வழக்கில் லோகநாதன், பிரபு, வசந்த் உள்பட 5 பேர் கைது செய்யப்பட்டனர். புழல் ஜெயிலில் அடைக்கப்பட்டிருந்த 5 பேரும் நிபந்தனை ஜாமீனில் வெளியே வந்தனர்.
லோகநாதன், பிரபு, வசந்த் 3 பேரும் தினமும் மாலை 5 மணிக்கு மாதவரம் போலீஸ் நிலையத்தில் ஆஜராகி கையெழுத்து போட்டு வருகிறார்கள்.
இந்த 3 பேரையும் போலீஸ் நிலையம் அருகிலேயே கொலை செய்ய சிலர் திட்டமிடுவதாக போலீஸ் கமிஷனர் ஜாங்கிட்டுக்கு தகவல் கிடைத்தது.
இதனால் போலீசார் கூடுதல் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வந்தனர். நேற்று மாலையில் போலீஸ் நிலையம் அருகில் ஒரு கார் மற்றும் மோட்டார் சைக்கிள் சந்தேகப்படும்படி நின்றது.
கார் மற்றும் மோட்டார் சைக்கிளில் இருந்தவர்களை போலீசார் சுற்றி வளைத்தனர். 8 பேர் போலீசாரிடம் சிக்கினார்கள்.
கைதான 8 பேரிடமும் போலீஸ் விசாரித்தபோது லோகநாதன், பிரபு, வசந்த் ஆகியோரை கொலை செய்ய வந்த கூலிப்படை என்பது தெரிய வந்தது.
அவர்களிட மிருந்து 8 பட்டாக்கத்திகள், 4 செல்போன்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.
வீரமணியை கொன்றவர்களை பழி வாங்குவதற்காக அவரது மனைவி ரமணி கூலிப்படையிடம் ரூ.10 லட்சம் பேரம் பேசி உள்ளார்.
அட்வான்சாக ரூ.2 லட்சம் கொடுத்துள்ளார். மீதி பணம் ரூ.8 லட்சத்தை உறவினர் விஜயன் என்பவரிடம் கொடுத்து வைத்தார். காரியத்தை முடித்ததும் 8 லட்சத்தையும் தருவதாக கூறி இருக்கிறார்கள்.
போலீஸ் பிடியில் சிக்கியதால் அவர்கள் திட்டம் நிறை வேறாமல் போனது.
கூலிப்படை தலைவன் பெரிய பாளையத்தைச் சேர்ந்த கார்த்தி (22) மற்றும் ரமணி, அவரது தம்பி சாமுவேல், உறவினர் விஜயன் ஆகியோர் தலைமறைவாகி விட்டனர்.












Click it and Unblock the Notifications