அழகிரியின் கோரிக்கையை நிராகரித்தது கேபினட் கூட்டம் - உரம் விலை உயருகிறது

இந்த அறிவிப்பு பிரதமர் மன்மோகன் சிங் தலைமையில் நடந்த பொருளாதார விவகாரங்களுக்கான அமைச்சரவைக் கூட்டத்தில் வெளியிடப்பட்டது. இதில் ரசாயனம் மற்றும் உரத் துறை அமைச்சர் அழகிரி, ஜவுளித் துறை அமைச்சர் தயாநிதி மாறன் உள்பட அமைச்சர்கள் பலர் கலந்து கொண்டனர்.
இதில் உரத் துறை அமைச்சகம் தொடர்பான, யூரியா விலையை 10 சதவீதம் அளவுக்கு உயர்த்துவது, ஊட்டச் சத்து உரத்துக்கான மானியம் தொடர்பான விவாதம் நடந்தது.
சுமார் ஒரு மணி நேரத்துக்கும் மேலாக இந்த விவாதம் நடைபெற்றது.
யூரியா விலை உயர்வு ஏழை மற்றும் நடுத்தர விவசாயிகளை பாதிக்கும் என்பதால் அதனை ஓராண்டு காலத்துக்கு ஒத்திப் போட வேண்டும் என்று அமைச்சரவைக் கூட்டத்தின் போது அழகிரி வலியுறுத்தினார்.
ஆனால் அவரது யோசனை ஏற்றுக் கொள்ளப்படவில்லை. அதே நேரம் ஊட்டச்சத்து உரங்களுக்கு மானியம் அளிக்க வேண்டும் என்ற அவரது இன்னொரு கோரிக்கை ஏற்கப்பட்டது.
இது தொடர்பான அறிவிப்பு பட்ஜெட்டில் வெளியாகும். பின்னர் வரும் நிதி ஆண்டிலிருந்து அதாவது ஏப்ரல் 1-ம் தேதி அமலுக்கு வரும்.
இத்துடன் டை அம்மோனியம் பாஸ்பேட் (டிஏபி) மற்றும் பொட்டாஷ் (எம்ஓபி-மியூரியேட் ஆப் பொட்டாஷ்) உரத்துக்கான விலையை உர நிறுவனங்களே நிர்ணயித்துக் கொள்ள மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது.
தற்போது யூரியாவின் அதிகபட்ச சில்லரை விலை ஒரு குவிண்டால் ரூ. 483 ஆக உள்ளது. அம்மோனியா உரத்தின் விலை குவிண்டாலுக்கு ரூ. 935 ஆகவும் பொட்டாஷ் விலை குவிண்டாலுக்கு ரூ. 445.50 ஆகவும் உள்ளது.
அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளதால் நைட்ரஜன், பாஸ்பரஸ், பொட்டாஷ், கந்தகம் உள்ளிட்ட ஊட்டச் சத்து உரங்களுக்கு மானியம் கிடைக்கும். இருப்பினும் மிகவும் அதிக அளவில் பயன்படுத்தப்படும் யூரியா உரத்தின் அதிகபட்ச விற்பனை விலையை அரசே நிர்ணயிக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
அழகிரிக்கு டப்பிங் கொடுத்த தயாநிதி மாறன்
முன்னதாக அமைச்சர் மு.க.அழகிரி இக்கூட்டத்தில் பேச வேண்டிய நிலை ஏற்பட்டது. ஆனால் அவருக்குப் பதில் அமைச்சர் தயாநிதி மாறன், ஆங்கிலத்தில் பேசினார் என்று கூறப்படுகிறது.
அழகிரி சார்பில் அவரது கருத்துக்களையும், திமுகவின் நிலைப்பாட்டையும் தயாநிதி மாறன் எடுத்துக் கூறினார்.
சமீபத்தில் புதிய உர மானியக் கொள்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து முதல்வர் கருணாநிதி பிரதமருக்கும், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்திக்கும் கடிதம் எழுதியிருந்தது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications