மேலும் பல அதிமுக எம்எல்ஏக்கள் கருணாநிதியை சந்திப்பர்: சேடபட்டி முத்தையா
பெரியகுளம் & கடலூர்: கோவில்பட்டி, ஜெயங்கொண்டம் ஆகிய தொகுதிகளின் அதிமுக எம்எல்ஏக்களைப் போல மேலும் பல அதிமுக எம்எல்க்கள் தங்களது தொகுதிகளில் நலப் பணிகள் தொடர்பாக முதல்வர் கருணாநிதியைச் சந்திக்கவுள்ளனர் என்று முன்னாள் சபாநாயகரும் திமுக தேர்தல் பணிக் குழுச் செயலருமான சேடபட்டி முத்தையா கூறினார்.
பெரியகுளத்தில் நிருபர்களிடம் பேசிய அவர், பல அதிமுக எம்எல்ஏக்கள் முதல்வரைச் சந்திப்பதைத் தவிர்ப்பதற்காகவே, வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுக ஆட்சிக்கு வந்துவிடும் என்று ஜெயலலிதா கூறிக் கொண்டிருக்கிறார்.
2011 சட்டப்பேரவைத் தேர்தலுக்கு பிறகு அதிமுக காணாமல் போய்விடும் என்று மத்திய அமைச்சர் அழகிரி கூறியுள்ளார். ஆனால், இப்போதைய சூழ்நிலையைப் பார்க்கும்போது, தேர்தலுக்கு முன்னரே அந்தக் கட்சி காணாமல் போய்விடும் போலிருக்கிறது என்றார்.
கூட்டணியிலிருந்து திமுகவை காங். நீக்க வேண்டும்-அதிமுக:
இந் நிலையில் கடலூரில் ஜெயலலிதாவின் பிறந்த நாளை எப்படிக் கொண்டாடுவது என்பது குறித்த ஆலோசனைக் கூட்டம் நடந்தது.
அதி்ல் பேசிய முன்னாள் அமைச்சர் செம்மலை,
புரட்சித் தலைவி இதய தெய்வம் அம்மா அவர்கள் தனது பிறந்த நாளை எளிமையாகக் கொண்டாட வேண்டும் என்று நமக்குக் கட்டளையிட்டு இருக்கிறார். அதன்படி ஏழை, எளிய மக்களுக்கு புத்தாடைகள் வழங்குதல் உள்ளிட்ட நலத்திட்ட உதவிகளை அதிமுகவினர் செய்ய வேண்டும்.
தேர்தல் எப்போது வேண்டுமானாலும் வரலாம். அதற்கு அதிமுகவினர் தயாராக இருக்க வேண்டும்.
தமிழக அரசியலில் ஊழல் மலிந்து விட்டதாக அலகாபாத் மூத்த வழக்கறிஞர் ஒருவர் கூறியிருக்கிறார் (!!!). தமிழகத்தில் சட்டம் ஒழுங்கும் கெட்டுவிட்டது.
டெல்லியில் சோனியாகாந்தி பேசுகையில் அரசியலில் ஆள்பலம், அடியாள்கள் பலம், பணபலம் நீக்கப்பட வேண்டும் என்று கூறினார். அவர் கூறியதை செயல்படுத்துவதாக இருந்தால் திமுகவுடனான உறவை, காங்கிரஸ் துண்டிக்க வேண்டும். கூட்டணியில் இருந்து திமுகவை நீக்க வேண்டும்.
திமுக அமைச்சர்களுக்கும், மத்திய அரசுக்கும் இடையே இடைவெளி அதிகரித்து விட்டது. தமிழக அமைச்சர்களின் கருத்தைக் கேட்காமல் பல முடிவுகள் எடுக்கப்படுகின்றன.
அதிமுகவினர் கட்சிக்குள் ஒருவர் மீது மற்றவர் குறை சொல்வதை விட்டுவிட்டு, திமுக ஆட்சியின் அவலங்களை மக்களுக்கு எடுத்துரைக்க வேண்டும் என்றார் செம்மலை.












Click it and Unblock the Notifications