கடற்படையில் மிக் 29 கே போர் விமானங்கள் இணைப்பு

ரஷ்யத் தயாரிப்பிலான அதி நவீன போர் விமானமான மிக் 29 கேவை இந்திய கடற்படையில் சேர்க்கும் நிகழ்ச்சி கோவா மாநிலம் டபோலின் பகுதியில் இன்று நடந்தது.
இந்த போர் விமானம், கட்டுமானத்தில் இருந்து வரும் அட்மிரல் கோர்ஷ்கோவ் அணு சக்தி கப்பலில் இடம் பெறும்.
டபோலினில் நடந்த நிகழ்ச்சியில் பாதுகாப்புத்துறை அமைச்சர் ஏ.கே.அந்தோணி, போர் விமானத்தை கடற்படையில் முறைப்படி சேர்த்து வைத்தார்.
இன்றைய நிகழ்ச்சியில் மொத்தம் நான்கு மிக் விமானங்கள் சேர்க்கப்பட்டன. இந்த படைப் பிரிவுக்கு கரும் சிறுத்தைகள் ஸ்குவாட்ரன் என்று பெயரிடப்பட்டுள்ளது.
கடற்படைத் தளபதி நிர்மல் வர்மா உள்ளிட்டோர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.
கடந்த 2004ம் ஆண்டு 16 மிக் 29 கே விமானங்களுக்கு இந்தியா ஆர்டர் கொடுத்திருந்தது. கூடவே அட்மிரல் கோர்ஷ்கோவ் அணு சக்தி விமானத்தையும் வாங்க ஆர்டர் கொடுத்தது.
இதில் நான்கு மிக் விமானங்கள் கடந்த ஆண்டு டிசம்பர் 4ம் தேதி இந்தியாவுக்கு வந்து சேர்ந்தன.
அட்மிரல் கோர்ஷ்கோவ் போர்க் கப்பலுக்கு ஐஎன்எஸ் விக்ரமாதித்யா என்ற பெயர் சூட்டப்படவுள்ளது. 2012ம் ஆண்டு இது செயல்பாட்டுக்கு வரும்.
விபத்துக்குள்ளான மிக் 21:
இந் நிலையில் விமானப் படைக்கு சொந்தமான மிக் 21 ரக ஜெட் விமானம் மேற்குவங்கத்தில் இன்று மாலை விபத்துக்குள்ளானது.
பைலட் சமயோசிதமாக செயல்பட்டு உயிர் தப்பினார்.
மேற்குவங்க மாநிலம் பாக்தோரா விமானப் படை தளத்தில் இருந்து இன்று மாலை 3 மணிக்கு மிக் 21 ரக விமானத்தில் பைலட் பயிற்சிக்காக புறப்பட்டார்.
பறக்க ஆரம்பித்த சிறிது நேரத்தில் திடீரென விமானம் வெடித்துச் சிதறியது. பைலட் ராகுல் திவாரி பாராசூட் மூலம் குதித்ததால் காயங்களுடன் உயிர் தப்பினார்.
தகவல் அறிந்ததும், ஹெலிகாப்டர்கள் விரைந்து சென்று பைலட்டை மீட்டு வந்தன.
கடந்த செவ்வாய்க்கிழமை மேற்குவங்கத்தில் ஹஷிமாரா விமானப்படை தளத்துக்கு அருகே மிக் 27 ரக விமானம் ஒன்று விபத்துக்குள்ளானது நினைவுகூறத்தக்கது.
இந்நிலையில் இன்று மீண்டும் இதேபோல விபத்து நடந்துள்ளது.












Click it and Unblock the Notifications